தொடாமல் தொடரும் - 7


“உங்கப்பா வப்பாட்டி வெச்சிருப்பாரு. அதனாலதான் சண்ட போட்ருப்பாங்க” என்றான் தனபால்.

“வப்பாட்டின்னா?” என்றான் பரணி.

தனபால் பதில் சொல்லாமல் குறும்பாகச் சிரித்தான்.

“எதுக்குடா சிரிக்கிற? நிஜமா எனக்குத் தெரியாது. பாட்டிதான் தெரியும். பாட்டியோட அம்மாதான் வப்பாட்டியா?”



“ச்சீ… போடா!” என்று சொல்லிவிட்டு தனபால் எழுந்து சென்றுவிட்டான். பரணிக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாதது மண்டையைக் குடைந்தது.

வகுப்பறையில் மீனா டீச்சர் நடத்திய அறிவியல் பாடம் ஒரு வரிகூட மண்டையில் ஏறவில்லை. பார்வை மட்டுமே கரும்பலகை மீதிருந்தது. சிந்தனை முழுவதும் அம்மா, அப்பாவின் சண்டைக்கான அந்தக் காரணம் பற்றியே சுழற்றியடித்தது.

ஏன் தனா சொல்லாமல் சென்றான்? ஏன் ஒரு மாதிரியாகச் சிரித்தான்? ஒரு வேளை அது கெட்ட வார்த்தையா?

பள்ளி முடிந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தவன் கண்களில் சாலையோரமாகச் சுடச்சுட சோளம் விற்கும் சோலையப்பனும், அருகில் கூறுகூறாகக் கட்டிவைத்து கேரட் விற்கும் பாட்டியும் பட்டார்கள்.

அவர்களிடம் வந்து நின்றான்.

“என்ன ராசா? சோளம் வேணுமா?” என்று அன்பாகக் கேட்ட சோலையப்பனுக்கு மறுத்துத் தலையசைத்தான்.

“காசில்லையா? பரவால்ல… நாளைக்குக் குடு ராசா. தரட்டா?”

“வேணாம்.”

“வீட்டுக்குப் போல? அம்மா வரலையா?”

“இப்ப வருவாங்க. வந்து… வந்து… ஒண்ணு கேக்கட்டா?”

“கேளு ராசா.”

“உங்க வீட்ல வப்பாட்டி இருக்காங்களா?”

சோலையப்பனின் முகம் மாறியது.

“ஆமா… அது ஒண்ணுதாண்டா கொறைச்சல்… இருக்கற பொண்டாட்டியே போதாதா? அது வேறயா? என்ன கேள்விடா இதெல்லாம்? வயசு பாக்காம செல்போனைத் தூக்கி உங்க கைல குடுக்கறாங்க பாரு புத்தியில்லாத பெத்தவங்க. அவங்களைச் சொல்லணும்டா. கண்டதையும் பாத்துப்புட்டு வெம்பிப் பழுத்துடறீங்க. உன்ன நல்லப் பையன்னு நெனைச்சேன். கெட்டுப் போயிட்டியே…போடா… வர்ற கோபத்துக்கு ரெண்டு வெச்சிடுவேன்.”

அவர் எதற்கு இத்தனை கோபப்படுகிறார் என்பது புரியாமல் பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் தேசியக் கொடி பறக்கும் கம்பத்தின் வட்டமான மேடையைச் சுற்றிலும் சரிவாய் அமைக்கப்பட்டிருந்த புல்வெளிக்குச் சென்று அமர்ந்துகொண்டான் பரணி.

சோலையப்பன் சொன்னதில் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. பொண்டாட்டி போதாதா என்றார். அப்படியென்றால் வப்பாட்டி என்பது இன்னொரு பொண்டாட்டி போலிருக்கிறது.

கோயிலுக்குப் போனபோது முருகருக்கு ரெண்டு பொண்டாட்டி என்று காட்டி அம்மா கூட சொல்லியிருக்கிறார்களே… அதற்கு ஏன் கோபப்பட வேண்டும்?
இவனைப் போலவே அழைத்துச் செல்ல அவரவர் பெற்றோரின் வருகைக்காக ஆங்காங்கே அமர்ந்து காத்திருந்த மாணவ, மாணவிகளில் சுசித்ரா இவனைப் பார்த்துச் சிரித்தாள்.

பட்டை சாக்லேட் எடுத்துக்காட்டி, ‘வேண்டுமா?’ என்று தூரத்திலிருந்தே ஜாடையில் கேட்டாள்.

‘வேண்டாம்’ என்று இவனும் ஜாடையில் மறுத்துவிட்டு எழுந்து அவளிடம் வந்து அமர்ந்துகொண்டான்.

மஞ்சள் ரிப்பன் வைத்துக் கட்டிய இரண்டு குதிரை வால்களையும் அசைத்தபடி அவள் பேசுவது பரணிக்குப் பிடிக்கும். தவிர அவள் புன்னகைக்கும்போது கன்னங்களில் விழும் குட்டிக் குழிகளும்.

கண்ணாடி முன்பாகப் பல முறை சிரித்துப்பார்த்து, தனக்கு ஏன் அப்படி குழி விழவில்லை என்று யோசித்து அம்மாவிடம் கேட்டும் இருக்கிறான்.
“சுசித்ரா… உனக்கு வப்பாட்டி தெரியுமா?”

“எனக்கு எங்க பாட்டியே தெரியாது. முந்தியே செத்துப்போய்ட்டாங்கடா. யாரோட பாட்டி அது?”

“போச்சுடா. உனக்கும் தெரியாதா?”

“எந்தப் பாடத்துல வருது? வேணும்னா தமிழ் டீச்சர்ட்ட போய்க் கேளேண்டா.”

“இது பாடத்துல வரல.”

“நாளைக்கு வர்றப்ப எங்கம்மாட்ட கேட்டுட்டு வரட்டுமா?”

“சரி சுசித்ரா. மறக்காம கேட்டுட்டு வா” என்றவன் அஞ்சலி ஸ்கூட்டியின் ஹாரன் சத்தம் கேட்டு ஓட்டமாக வந்தான்.

அவன் ஸ்கூல் பேகை வாங்கி முன்பக்கம் வைத்துக்கொண்டு, “ஏண்டா ட்ரெஸ்லாம் அழுக்கா இருக்கு? இன்னிக்கும் எதாச்சும் சண்டை போட்டியா?” என்றாள் அஞ்சலி.
“இல்லம்மா. இன்னிக்கு பி.டி கிளாஸ் இருந்திச்சி.”

அவன் பின்புறம் அமர்ந்ததும், வண்டியை ஒட்டியவள், “நாயர் கடையில கேக் வாங்கிட்டுப் போயிடலாமா?” என்றாள்.

“இன்னிக்காச்சும் பீட்ஸா வாங்கலாமா?”

“எனக்கோ பிடிக்காது. நீயோ முழுசா சாப்புட மாட்டே. வேஸ்ட்டாகுதுடா.”

“ரொஸாரியோ தாத்தா சாப்புடுவாரு. அவரோட ஷேர் பண்ணிக்கறேனே.”

“அப்டின்னா வாங்கித் தர்றேன்.”

ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்த அஞ்சலிக்கு சட்டென்று இதே உரையாடல் தன் வாழ்வில் முன்பு அப்படியே நடந்தது நினைவுக்கு வந்தது.

சென்னையில் அந்த மாலில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் பீட்ஸா கடையைப் பார்த்ததும் ரகு இப்படித்தானே கேட்டான். அப்படியே இதே வார்த்தைகள்!

“இன்னிக்காச்சும் பீட்ஸா வாங்கலாமா அஞ்சலி?”

“எனக்கோ பிடிக்காது. நீயோ முழுசா சாப்புடவும் மாட்டேங்கறே. மிச்சத்தத் தூக்கி வேலைக்காரிக்குக் குடுக்க வேண்டியிருக்கு.”

“குடேன். என்ன தப்பு? பழைய சாதமும், மிஞ்சுற குழம்பும்தான் குடுக்கணும்னு சட்டமா? ஒரு நாளைக்கு அவளும்தான் பீட்ஸா சாப்புடட்டுமே?” என்ற ரகுவின் குரல் அப்படியே காதருகில் கேட்டது.

“அம்மா! அம்மா!” என்று அஞ்சலியின் தோளைத் தொட்டு, “பீட்ஸா கடையத் தாண்டிட்டே” என்று பரணி கத்த… வண்டியை யு-டர்ன் போட்டு அந்தக் கடை வாசலில் நிறுத்தினாள் அஞ்சலி. இருவரும் கடைக்குள் சென்றனர். மெனு கார்ட் பார்த்து, என்ன வெரைட்டி வேண்டுமென்று பரணி சொன்னதை ஆர்டர் செய்தாள் அஞ்சலி. பின்னர் அங்கிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தார்கள்.

“அம்மா… ஏதா இருந்தாலும் எங்கிட்ட கேளுன்னு சொன்னில்ல? ஒன்ணு கேக்கவா?” என்றான் பரணி.

“வேற என்ன? சாக்லேட்டா?”

“அதில்ல…வப்பாட்டின்னா யாரும்மா?”

“யார் சொன்னது? எதுக்குக் கேக்கறேன்னு மொதல்ல சொல்லு.”

“தனா இல்ல… அவன்ட்ட எங்கம்மாவும் அப்பாவும் சண்டை போட்டு பிரிஞ்சிட்டாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவன் உங்கப்பா வப்பாட்டி வெச்சிருப்பாருன்னு சொல்லிட்டு சிரிச்சான். அதுக்கு மேல சொல்லாமப் போய்ட்டான். அப்படின்னா என்ன?”

சங்கடமாக அவனைப் பார்த்தாள் அஞ்சலி. இந்தக் கேள்விக்கு ஒரு தாய் மகனிடம் பொறுமையாக விளக்கமாகச் சொல்லி புரிய வைக்க முடியுமா? அவசியமா?

“பரணி…நான் என்ன சொன்னேன்? எதையும் போட்டு குழப்பிக்காம இருன்னு சொன்னேன். உன்ன யாரு தனாகிட்ட நம்ம குடும்ப விஷயத்தையெல்லாம் சொல்லச் சொன்னது?”

“அவன் திக் ஃப்ரெண்டும்மா. எல்லாம் சொல்வேன். நீ அடிச்சதையும் சொன்னேன். ஏன் சண்ட போட்டாங்கன்னு எனக்குக் காரணம் தெரியும்னு அவன்தான் ஆரம்பிச்சான்.”

“இப்ப உனக்கு என்னடா தெரியணும்? நானும் உங்கப்பாவும் ஏன் பிரிஞ்சோம்னு தெரியணுமா? எங்களுக்குள்ள என்ன சண்டைன்னு தெரியணுமா? அதையெல்லாம் புட்டுப் புட்டு விளக்கமா சொல்ல என்னால முடியாதுடா. சொன்னாலும் உன்னால புரிஞ்சிக்க முடியாது. இதோட விட்ரு. படிக்கிற வேலைய மட்டும் பாரு…”

கொஞ்சம் குரல் உயர்த்தி உத்தரவாகச் சொன்ன அஞ்சலி, பீட்ஸா தயாராகிவிட்டதால் எழுந்துசென்று வாங்கினாள்.

மீண்டும் வண்டியை ஓட்டியபோது முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான் பரணி.

***

அந்த டீ எஸ்டேட்டின் அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் கம்ப்யூட்டரில் தட்டிக்கொண்டிருந்த சத்யா, பியூன் கொண்டுவந்து காகிதத் தட்டில் வைத்த மசால் வடையையும், ஆவி பறக்கும் காபியையும் எடுத்துக்கொண்டு பால்கனியில் வந்து நின்றான்.

அங்கு காபி பருகியபடி நின்றிருந்த அஞ்சலி, தூரத்தில் பனி வழியும் மலைச் சிகரங்களைப் பார்த்தபடி இருந்தாள்.

“மேல மேல தப்பு செய்றே அஞ்சலி. ஒண்ணு… கடைசி வரைக்கும் சொல்லாம இருக்கணும். இல்லன்னா முழுசா சொல்லணும். அரைகுறையா சொல்லி அதட்டினா… பாவம் அவன் சின்னப் பையன் குழம்பித்தான் போவான். அந்தக் கேள்விக்கு பதில் தெரியாம அவனால படிப்புல கவனம் செலுத்த முடியாது.”

“என்ன சத்யா? எதைச் சொல்லச் சொல்றே? என்ன புரியும் அவனுக்கு?” என்றாள் அஞ்சலி.

“உனக்குச் சங்கடமா இருந்தா நான் சொல்லட்டுமா?” என்றான் சத்யா.

(தொடரும்...)

x