பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com
சென்னை எழும்பூரில் புறப்பட்ட மகா பெரியவா ஜயந்தி மஹோத்ஸவ ஊர்வலம், புரசைவாக்கத்தில் அதற்கு மேல் நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டது.
காரணம், மகானின் உருவப்படம் தாங்கிய ஊர்வலம் செல்ல வேண்டிய பாதையில் வழியை மறித்தபடி அரசியல் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதுவும் நாத்திகம் பேசக்கூடிய அரசியல் கட்சி!
அகண்ட சாலை. அதன் ஒரு பக்கம் மேடை போடப்பட்டிருந்தது. அங்குதான் அந்த அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அமர்ந்திருந்தார்கள். மேடையை ஒட்டிய பக்கவாட்டுப் பகுதியை முழுமையாக அடைத்தவாறு கட்சித் தொண்டர்கள் கசகசவென்று நின்று கொண்டிருந்தார்கள்.
மேடையில் கட்சியின் முக்கியப் பிரமுகர் மைக்கின் முன் நின்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகின்றபோதெல்லாம் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இத்தகைய நிலையில், ஊர்வலம் தடை இல்லாமல் புரசைவாக்கம் செல்வதற்கு இவர்கள் வழி ஏற்படுத்தித் தருவார்களா என்பது ஊர்ஜிதமில்லை.
ஊர்வலம் அந்தச் சாலையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், அதற்கு அகலமான வழி வேண்டும். சாதாரணமாக ஒருவர் அந்த வழியே நடந்து சென்றாலே, கட்சித் தொண்டர்கள் மேல் இடித்தபடிதான் போக முடியும். அந்த அளவுக்கு நெருக்கமாகக் காணப்பட்டார்கள் தொண்டர்கள்.
மகா பெரியவாளை ஊர்வலமாக அழைத்து வந்த பிரதோஷம் மாமா செய்வதறியாமல் ஸ்தம்பித்து நின்றார். பக்தர்களுக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.
மகா பெரியவா தன் பவனியைத் தொடர முடியாமல் அப்படியே நிற்கிறார். ஆனால், கூட்டம் மொத்தமும் முக்கியப் பேச்சாளரின் பேச்சை கர்மசிரத்தையாக செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தது.
பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த காவல்துறையும், மகா பெரியவா ஊர்வலத்தை வந்த வழியே திரும்பப் போகுமாறு அறிவுறுத்தியது. காரணம், அங்கிருந்து புரசைவாக்கம் செல்வதற்கு வேறு வழியும் இல்லை.
‘மகானின் ஊர்வலம் இப்படித் தடை படலாமா? வந்த வழியே எப்படித்திரும்பிப் போக முடியும்? வேறு பாதையும் இல்லையே?’ என்று ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த பிரதோஷம் மாமாவும் பக்தர்களும் கவலையுடன் யோசித்தார்கள். அப்போது ஊர்வலத்தில் வந்த அன்பர்கள், ‘ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே?’ என்று பிரதோஷம் மாமாவிடம் கிசுகிசுத்தனர். அதற்குத் தலையசைத்த மாமாவும் அதைச் செயல்படுத்தினார். என்ன தெரியுமா?
மேடையில் முழங்கிக் கொண்டிருந்த முக்கியப் பிரமுகருக்கு ஒரு துண்டுச் சீட்டு எழுதி தைரியத்துடன் அனுப்பினார் பிரதோஷம் மாமா. சீட்டு எங்கே போய்ச் சேர வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததால், கைகள் மாறி மாறி, முக்கியப் பிரமுகரை அடைந்தது. தான் அதுவரை உணர்ச்சிமயமாகப் பேசிக் கொண்டிருந்த ‘டாபிக்’கை அப்படியே விட்டுவிட்டு, துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருந்ததை அந்தப் பிரமுகர் படித்தார்.
அதில், ‘எங்களது மகா பெரியவா ஊர்வலத்தை இந்தப் பாதை வழியே அனுமதிக்கத் தாங்கள் உதவ வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் நடந்தது எவரும் எதிர்பாராத அதிசயம்...
ஆம்! அந்த முக்கியப் பிரமுகர் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி அறிவுரை கூறினார். பிறகு, இரு கரங்களையும் கூப்பிக் கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘காஞ்சிப் பெரியவர் இங்கே ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் அமைதி காத்து அவருக்கு வழிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்த ஊர்வலம் செல்வதற்கு வழி விடுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.
அவ்வளவுதான்... அடுத்த கணம் அந்தக் கூட்டம் அப்படியே விலகி நின்றது. எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் ஊர்வலம் தாராளமாகச் செல்லும் அளவுக்கு பாதை கிடைத்தது ஆன்மிக அன்பர்களுக்கு!
அதுவரை நாத்திக முழக்கம் நடந்து கொண்டிருந்த அந்த இடத்தில் திடீரென்று ‘ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர’ கோஷம் முழங்கியது!
கூட்டத்தினரிடம் எந்த ஒரு சலசலப்பும் இல்லை. பார்வையாளர்களாகக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆன்மிக அன்பர்கள், மகா பெரியவாளைப்பார்த்துக் கன்னங்களில் போட்டுக் கொண்டு புண்ணியம் தேடினர்.
கூட்டத்தை வழி நடத்திக் கொண்டு சென்ற பிரதோஷம் மாமா உற்சாகம் அடைந்தார். மேடையில் இருந்த தலைவர்களைப் பார்த்து, ‘‘தேர்தலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்’’ என்று பரவசமாக வாழ்த்தினார். இதற்கு மேடையில் இருந்தவர்களும் ‘நன்றி’யைத் தெரிவித்து அவரது வாழ்த்தை ஏற்றுக் கொண்டார்கள்.
மகா பெரியவா ஊர்வலம் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தமைக்கான வாழ்த்தே தவிர, இதற்கு வேறு எந்த ஒரு பொருளையும் கொள்ளக் கூடாது (பரவசப்பட்டு பிரதோஷம் மாமா சொன்ன திருவாக்குப்படி அடுத்து வந்த தேர்தல் முடிவிலும் அந்த நாத்திகக் கட்சியே வென்றதும் குறிப்பிடத்தக்கது.)
யோசித்துப் பாருங்கள், அந்த நாளில் ஆத்திகத்தை விட நாத்திகம் கோலோச்சிக் கொண்டு இருந்தது. மகா பெரியவா ஊர்வலத்தில் சென்றவர்கள் நூறு பேர் என்றால்,நாத்திகக் கூட்டத்தில் கூடி இருந்தவர்கள் பல நூறு பேர்.
ஒரு சின்ன அசம்பாவிதம் கூட்டத்தில் ஏற்பட்டு விட்டால், ஊர்வலமாகச் செல்கிற மகா பெரியவாளுக்கும் பக்தர்களுக்கும் என்ன பாதுகாப்பு? இதில் செல்கிற வாத்தியக்காரர்கள், வேத பண்டிதர்கள், திருமுறை அன்பர்கள், பக்தகோடிகள் இவர்களுக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய முடியும்?
ஆனால், மகா பெரியவா என்கிற மகத்தான சக்தி அல்லவா அன்று அனைத்தையும் வழி நடத்திச் சென்றிருக்கிறது.
எப்போது ஜயந்தி உத்ஸவமோ, அல்லது மகா பெரியவா தொடர்பான ஏதேனும் ஒரு வைபவம் நடந்தாலோ அடுத்த தினமே காஞ்சிக்குச் சென்று மகானைத் தரிசித்து வருவது பிரதோஷம் மாமாவின் வழக்கம்.
அந்த வழக்கத்தையொட்டி, எழும்பூரில் இருந்து புரசைவாக்கம் வரை நடத்தப்பட்ட ஊர்வலம் பற்றியும் அப்போது நடந்த விஷயங்கள் பற்றியும் பெரியவாளிடம் சொல்லி ஆசி பெற்று வரலாம் என்று மறுநாள் பிரதோஷம் மாமா காஞ்சிக்குச் சென்றார்.
மகான் ஏகாந்தமாகக் காணப்பட்டார். ‘சர்வேஸ்வரா...’ என்று இரு கரங்களையும் குவித்து வணங்கி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபின், எழுந்து நின்றார் பிரதோஷம் மாமா.
‘‘நேத்திக்கு நான் வந்தபோது அந்தக் கட்சிக்காரன் வழி விட்டானோ...’’ என்று அவரைப் பார்த்து பெரியவா கேட்டாரே, பார்க்கணும்!
பிரதோஷம் மாமாவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
என்னே ஒரு தீர்க்க தரிசனம்... ஞான திருஷ்டி...
மகான் சொன்னதில் ஞான திருஷ்டியைத் தாண்டின கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு.
அது .. ‘நான் வந்தபோது...’
அப்படி என்றால், எழும்பூரில் இருந்து புரசைவாக்கம் வரை பல்லக்கில் சென்றது மகா பெரியவா திருவுருவப் படம் அல்ல... சாட்சாத் மகானேதான்!
இதை வேறு யாரும் சொல்லவில்லை. அந்த மகானே தன் திருவாய் மலர்ந்து அருளுகிறார்.
அவரே ஊர்வலத்தில் பிரத்யட்சமாக வலம் வருகிறபோது எவர் வழி விடாமல் இருப்பர்?
தனக்கு உண்டான பாதையை ஏற்படுத்திக் கொள்ள அவருக்குத் தெரியாதா? அதுதான் அன்றைக்கு அங்கே நடந்தது.
இதன் மூலம் மகா பெரியவா நமக்கு உணர்த்த வருவது என்ன?
‘என்னை உன்னுடன் வைத்துக் கொண்டால், எப்போதும் இருந்து உனக்கு அருள்வேன். உனது கஷ்டங்களைக் களைவேன். உனக்கு ஏற்பட இருக்கிற ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவேன். எப்போதும் ஆனந்தமாக வைத்திருப்பேன்.’
திருவருள் எனப்படும் தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கு குருவருள் இருக்க வேண்டும்.
‘குருவின் ஆசி இல்லாமல் தெய்வத்தின் தரிசனத்தைப் பெற முடியாது’ என்கின்றன ஆன்மிக நூல்கள்.
ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணி புரிந்த பிரதோஷம் மாமா, இறை அனுக்ரஹம் வேண்டி திருவண்ணாமலைக்குச் சென்றார்.
அங்கே ஒரு சித்தர் இவரை, ‘‘காஞ்சிபுரம் சங்கர மடம் போய் சாமியை தரிசனம் பண்ணு’’ என்று அனுப்பி விட்டார். சித்தர் ‘சாமி’ என்று குறிப்பிட்டது மகா பெரியவாளை!
தெய்வ அனுக்ரஹம் கூடுவதற்கு குருவின் அருள் வேண்டும் என்பதால்தான், திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிக்கு அனுப்பப்பட்டார் போலும்!
பொருள் தேடி தன் திருச்சந்நிதிக்கு வருகின்ற பக்தர்களிடையே அருள் தேடி வந்திருக்கிற அன்பனை ஆதூரத்துடன் பார்த்தார் மகான்!
அளவே இல்லாமல் தன் ஆசிகளை வழங்கினார். பெரியவா தரிசனம், புது உலகத்தைக் காண்பித்தது மாமாவுக்கு. அதன் பிறகு இவர் அடைந்த சந்தோஷம், ஆனந்தம் இவற்றுக்கு அளவே இல்லை. அப்போது துவங்கியதுதான் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் மகா பெரியவாளைத் தேடித் தேடிச் சென்று தரிசனம் செய்வது!
பிரதோஷம் என்றாலே, அந்த வேளையில் மகா பெரியவாளின் பார்வை நாலாப்புறமும் சுழலும். எங்கே தன் பக்தன் வந்திருக்கிறான் என்று தேடுவது இயல்பானது.
ஒரு சனிப் பிரதோஷம்.
அன்றைய தினம் மாமாவால் மகானை தரிசிக்கப் போக முடியவில்லை. அலுவலகத்தில் வகையாக சிக்கிக் கொண்டு விட்டார்.
அலுவலக சிக்கலில் இருந்து விடுபட முயன்றார்.
பிரதோஷத்தின்போது சங்கர தரிசனம் காண விழைந்தார்.
என்ன ஆனது?
(ஆனந்தம் தொடரும்...)