சந்தனார்
readers@kamadenu.in
மணிக்கொரு காட்சி என்று மாறிக்கொண்டேயிருக்கிறது மகாராஷ்டிர அரசியல் களம். சட்டமன்றத் தேர்தலில் உற்சாகமாகப் போட்டியிட்ட பாஜக - சிவசேனை கட்சிகளின் ‘மஹாயுதி’ கூட்டணி, தேர்தல் முடிவு வெளியான பின்னர் உடைந்துபோனது. கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது ‘சுழற்சி முறையில் முதல்வர் பதவி. ஆட்சியில் சம பங்கு’ என்றெல்லாம் பேசப்பட்டதாக சிவ சேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே நினைவூட்ட, பாஜக அதை மறுக்க…குழப்பம் தொடங்கியது. யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய சிவ சேனை, கூட்டணி ஆட்சியமைக்கும் முஸ்தீபுகளில் மும்முரமாக இருந்த தருணத்தில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஆட்சி இருப்பதால் குழப்பம் நீங்கிய கட்சிகள், இப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக இறங்கிவிட்டன. பாஜகவுடனான மோதல் முற்றிவிட்ட நிலையில், இனி என்சிபி-யும் காங்கிரஸும்தான் கரை சேர்க்கும் என்று முடிவெடுத்துவிட்ட சிவ சேனை, விறுவிறுவென்று வேலை பார்த்துவருகிறது. ஆனாலும், சவால்கள் இன்றளவும் தொடரவே செய்கின்றன.
காங்கிரஸின் தயக்கம்
காங்கிரஸுக்கு 44, என்சிபி-க்கு 54, சிவசேனைக்கு 56 இடங்கள் இருக்கும் நிலையில் – பாஜக ஆட்டையைக் கலைக்காதவரை – இந்தக் கூட்டணி ஸ்திரமான ஆட்சியைத் தர முடியும். ஆனால், இந்துத்துவப் பின்னணி கொண்ட சிவ சேனையுடன் கூட்டணி அமைத்தால், தேசிய அளவிலான அரசியல் களத்தில் காங்கிரஸின் பிம்பத்துக்குக் களங்கம் வருமோ என்று அக்கட்சித் தலைமை தயங்குகிறது.