கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
அயோத்தி தீர்ப்பு தொடர்பாகத் தமிழகத்தின் தனித்த குரலாக ஒலித்தது விடுதலைச் சிறுத்தைகளின் குரல். இப்போது சென்னை மேயர் பதவியைத் தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக கூட்டணியில் இருந்தபடியே தனித்து ஒலிக்கிறது விசிக-வின் குரல். ஒரு பக்கம் பாஜகவினரின் தொடர் விமர்சனம், இன்னொரு பக்கம் திமுகவின் சந்தேகப் பார்வை என்று இக்கட்டான சூழலில் விசிக இருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினேன்.
கோயில் சிற்பங்கள் குறித்த திருமாவின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறதே?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நடந்த சனாதனக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில், பாஜக அரசு பெண்கள் பிரச்சினைகளில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை வைத்திருக்கிறது என்பது பற்றியும், அயோத்தி பிரச்சினையில் தொல்லியல் ஆய்வு நடந்ததாகச் சொல்வது பற்றியும் விரிவாகப் பேசினார் திருமா. போகிறபோக்கில் இந்துக் கோயில்களின் அடையாளங்களில் ஒன்றாக அங்கு ஆபாசமான சிலைகள் இருக்கும் என்றும் சொன்னார். அந்தக் கருத்து உண்மையல்ல என்றால், எந்தக் கோயிலிலும் அத்தகைய சிலைகள் இல்லை என்று சொல்ல வேண்டும் அல்லது அத்தகைய சிலைகள் இருப்பது தவறில்லை என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு சிலர் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்.