கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
இன்னும் உள்ளாட்சித் தேர்தலே அறிவிக்கப் படவில்லை. அதற்குள், ‘உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்று போர்க் குரல் உயர்த்தியிருக்கிறது கோவை மாநகராட்சியின் 51-வது வார்டு குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு. இத்தனைக்கும் இந்த அமைப்பின் தலைவரான கே.ராமசுப்பிரமணியன், ஓர் அதிமுக பிரமுகர். ஏன் இந்தப் புறக்கணிப்பு என்று தெரிந்துகொள்ள ராமசுப்பிரமணியனைச் சந்தித்தேன்.
“நான் 4 வருஷம் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரா இருந்திருக்கேன். அப்ப மேடத்தை நேரடியா சந்திச்சு எங்க பகுதி பிரச்சினைகளைத் தீர்த்திருக்கேன். மேடம் இறந்த பிறகு எல்லாமே தலைகீழாப் போச்சு. எங்க தொகுதி எம்எல்ஏ-வான அம்மன் அர்ஜூனன், மதுக் கடைகளை கவனிக்கிறதுக்குப் போயிடறார். அமைச்சர் வேலுமணி ஏதாவது கடைத் திறப்புவிழாவுக்கு வர்றார்; போறார். குடியிருப்போர் தங்களோட குறைகளை அவர்கிட்ட சொல்லலாம்னு போனா, ‘அமைச்சருக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு’ன்னு விரட்டிடுறாங்க. எந்தப் புகாருக்கும் மாநகராட்சி கமிஷனர், சுகாதார அலுவலர் அசைஞ்சு தர்றதில்லை.
நான் ஆளுங்கட்சிக்காரன்கிறதால இந்த வார்டு ஜனங்க என்கிட்ட பிரச்சினைகளைக் கொண்டு வர்றாங்க. நானும் பல தடவை மாநகராட்சிக்கும், கலெக்டர் ஆபீஸுக்கும், அமைச்சர் வீட்டுக்கும் அல்லாடியாச்சு. எதுவும் நடக்கலை. இப்படியானவங்களோட ஆட்சியில உள்ளாட்சித் தேர்தல் நடந்தா மட்டும் மாற்றம் வந்துடுமா என்ன? அதான் இப்ப நான் இருக்கிற அடுக்குமாடிக் குடியிருப்போர் சங்கத்துடன் இன்னமும் 26 குடியிருப்போர் சங்கங்களையும் சேர்த்து கூட்டமைப்பை ஏற்படுத்தி, தேர்தல் புறக்கணிப்பு அறிவிச்சிருக்கோம். சும்மா இல்லை, ஒவ்வொரு குடியிருப்போர் சங்கத்துலயும் தலா 24 முதல் 56 குடும்பங்கள் இருக்கு” என்று சொன்னவர், வார்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வரிசையாகப் பட்டியலிட்டார்.