குடிநீரின் தரத்தில் அலட்சியம் கூடாது!


டெல்லியைப் போல் சென்னையிலும் காற்று மாசு ஏற்பட்டதைக் கண்ட அதிர்ச்சியில் இருக்கும் தமிழகம், தற்போது சென்னையில் குடிநீரின் தரம் மோசமாக இருப்பதாக வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கையால் மேலும் அதிர்ந்துபோயிருக்கிறது.

மாநிலத் தலைநகரங்களான டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 20 நகரங்களில் மத்திய நுகர்வோர் நலத்துறை நடத்திய இந்த ஆய்வில் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கின்றன. மும்பையைத் தவிர மற்ற எல்லா தலைநகரங்களிலும் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் தரமற்றதாக இருக்கிறது என்கிறது ஆய்வு. குறிப்பாகச் சென்னையில் சேகரிக்கப்பட்ட குடிநீர் 10 மாதிரிகளைச் சோதித்தபோது அவை, கடினத்தன்மையுடனும் துர்நாற்றத்துடனும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில் சென்னைக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. சென்னை குடிநீரில் புளூரைட், போரான், காலிஃபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த கட்டங்களில், இந்தியாவின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்படவிருக்கிறது. அந்த அறிக்கை 2020 ஆகஸ்ட் 15-ல், வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவிலும் குடிநீரின் தரம் குறித்த நிலவரம் தெரியவரும்.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் மத்திய நுகர்வோர் நலத் துறை, குடிநீரின் தரத்தை மேம்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்கள் அடிக்கடி குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றன. நிலத்தடி நீரும் வற்றிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கிடைக்கும் நீரும் தரமற்ற நிலையில் இருப்பது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் தீவிரமான பிரச்சினை. இதைத் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். சென்னை மட்டுமல்லாமல், மாவட்டத் தலைநகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை குடிநீரின் தரத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும்!

x