கரு.முத்து
muthu.k@kamadenu.in
பகல் பொழுதுகளில் ஆங்கிலப் பேராசிரியர், மாலைப் பொழுதுகளில் பண்பலை அறிவிப்பாளர், இரவுகளில் எழுத்துப் பணி இதுதான் ஸ்டாலின். வார இறுதி நாட்களில் இலக்கியக் கூட்டங்கள்; கிடைக்கும் சொற்ப நேரத்தில் யூ-டியூப் சேனலில் இலக்கிய விமர்சன உரைகள் என்று இயங்கிவரும் இந்தப் பன்முக படைப்பாளி ஸ்டாலின், ‘கு.இலக்கியன்’ எனும் பெயரில் முன்னணி இதழ்களில் வெளியாகும் கவிதைகள் மூலம் இலக்கிய வாசகர்களால் அறியப்படுபவர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின், இலக்கிய மேடைகளுக்காக இலக்கியனாகப் பெயர்ப் பரிணாமம் பெற்றிருக்கிறார்.
35 வயதானாலும் பார்க்க சிறுபையனைப் போலிருக்கிற இலக்கியனின் கவிதைகள் தேர்ந்த அனுபவத்தை உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. உறைவாளை உருவி சத்தமில்லாமல் நெஞ்சில் பாய்ச்சும் வீச்சுகளை இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணிபுரியும் இலக்கியன் என்கிற ஸ்டாலினை, பேராசிரியர்களுக்கான ஓய்வறையில் சந்தித்தேன். வகுப்பு முடித்து வந்தவர் மிக இயல்பாக உரையாடத் தொடங்கினார். “என் தந்தை ஒரு கம்யூனிஸ்ட். அவர் வாங்கிவைத்திருந்த புத்தகங்கள் எதுவும் எனக்குப் புரியாது. ஆனாலும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். கடினமான மொழிப் பயன்பாடும், ஆழமான பொருளும் கொண்ட அவை, எனக்குள் சமூகப் பார்வையை, சமூகத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தின.