பொழுதுபோக்கு விஷயத்தில் முதியோர் எதிர்கொள்ளும் சிக்கல் களைக் கடந்த வாரம் பார்த்தோம். பொழுதுபோக்கு சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் புரிதலின்மை, அதைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம். முதலில், தொலைக்காட்சியிலிருந்து தொடங்குவோம்.
பொழுதுபோக்கு அம்சம் எனும் நிலையைத் தாண்டி, அன்றாட வாழ்வில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சாதனம் தொலைக்காட்சி. ஒரு காலத்தில் நம் வரவேற்பறையில் நாளிதழ்களும் பத்திரிகைகளும்தான் இடம்பிடித்தன. ஆனால், என்று நம் வரவேற்பறையில் தொலைக்காட்சிப் பெட்டி இடம்பிடித்ததோ அன்றே நம் இயல்பு வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. தொலைக்காட்சி முதியோர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.
சேனல் மாற்றும் பிரச்சினை
கண் பார்வை குறைவதாலும், நாளிதழ்கள், பத்திரிகைகள் வாங்கும் வசதி இல்லாததாலும் பல பெரியவர்களின் முக்கிய விருப்பமாகத் தொலைக்காட்சி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் காலை முதல் இரவு வரை டிவி ஓடிக்கொண்டேயிருக்கிறது. குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் முதல், பெரியவர்களின் அபிமானம் பெற்ற நெடுந்தொடர்கள் வரை மாறி மாறிப் பல நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இடையில், செய்தி சேனல்களின் ‘பிரேக்கிங் நியூஸ்’களும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். வயதுக்கேற்றாற்போல் ஆளுக்கொரு நிகழ்ச்சியைப் பார்க்க நினைப்பார்கள்.
நெடுந்தொடர் பார்க்கும் தாத்தா - பாட்டியிடம் ரிமோட் கன்ட்ரோலைக் கேட்டுக் குழந்தைகள் சச்சரவு செய்துகொண்டிருப்பார்கள். இளம் வயதினரோ தங்களுக்கு விருப்பமான மற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க மல்லுக்கட்டுவார்கள். இப்படியாக, சேனல் மாற்றுவதிலும் பல வீடுகளில் பிரச்சினை வெடிக்கிறது.
வேலைக்குச் செல்பவர்கள் வீடு திரும்பும்போது இந்தச் சச்சரவால் பொறுமையிழந்து, வீட்டில் உள்ளவர்கள் மீது கோபத்தைக் கொட்டிவிடுகிறார்கள். முதுமை காரணமாகப் பார்வை மங்குதல், செவிக் கோளாறு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதியவர்கள், டிவிக்கு அருகில் அமர்ந்து பார்ப்பதும், டிவி சத்தத்தை அதிகமாக வைத்துக் கேட்பதும் சில சமயம் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
வானொலி
நம் வாழ்வில் வானொலிக்கும் முக்கிய இடம் இருக்கிறது. ஒருகாலத்தில் கிரிக்கெட் ஸ்கோர் முதல் ஆகாஷவாணி செய்திகள் வரை அதில்தான் தெரிந்துகொள்வார்கள் முந்தைய தலைமுறையினர். ரேடியோவில் நாடகங்கள், கதைகள், ஒலிச்சித்திரம் எனப் பல்வேறு அம்சங்களைக் கேட்டுக் கொண்டே வேலைகளைச் செய்தார்கள். இன்றைக்குப் பண்பலை (எஃப்எம்) வானொலி வந்துவிட்டது. பணி நிமித்தமாகப் பயணம் செய்பவர்கள், விவசாயப் பணிகளில் ஈடுபடுபவர்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்கள் போன்றோருக்கு இன்றைக்குப் பண்பலை வானொலிகள் பொழுதுபோக்கு சாதனமாக இருக்கின்றன.
முதியோரும் பண்பலை வானொலிகளைக் கேட்கிறார்கள். எனினும், அவர்கள் அதைச் சத்தமாக வைத்துக் கேட்பதைக் குடும்பத்தினரே குறையாக நினைக்கும் சூழல் இருக்கிறது. தொலைக்காட்சி சேனல்களைப் போல், பண்பலை வானொலியிலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. அதில் பெரும்பாலும் அறிவிப்பாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். முதியோர் பொறுமையுடன் அதைக் கேட்டுக்கொண்டாலும் அருகில் இருப்பவர்கள் அதைத் தொந்தரவாக நினைத்துக்கொண்டால்… பிரச்சினைதான்!
சிண்டுமுடியும் சீரியல்கள்
இன்றைக்குப் பல குடும்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதில், நெடுந்தொடர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. வன்மம், பகை, மாமியார் - மருமகள் உறவில் பிரச்சினை, நாத்தனார் கொடுமை என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் பிரச்சினைகளைப் பொதுவான நிகழ்வுகளைப் போல் சித்தரித்து எடுக்கப்படும் தொடர்கள், பல குடும்பங்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றன.
பெரியவர்கள், இளையவர்கள் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தத் தொடர்களைப் பார்க்கிறார்கள். அவற்றில் வரும் சம்பவங்களைத் தங்கள் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்க ஆரம்பித்துவிடுவதுதான் பிரச்சினையின் தொடக்கப் புள்ளி.
இன்னொரு வகையான பிரச்சினையும் உண்டு. ஒரு நண்பருடைய வீட்டில் நடந்த சம்பவம் இது. தாத்தா - பாட்டிதான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவ்வீட்டில் ஒரு குழந்தை பள்ளியில் சேர்வதற்கு முன்புவரை, பெரும்பாலும் கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. தினமும் விழிக்கும் நேரம் முதல் தூங்கும் நேரம் வரை தொலைக்காட்சிப் பெட்டியின் அருகிலேயே இருந்து பழகிவிட்டது.
குழந்தை வளர்ந்து பள்ளியில் சேர்ந்த பின்னர், பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரியவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதைத் தொடர்ந்தது. இதனால், விரைவிலேயே அக்குழந்தைக்குப் பார்வை குறைபாடு ஏற்பட்டுவிட்டது. சிறுவயதிலிருந்து தொலைக்காட்சியின் அருகில் இருந்ததால் பார்வை மட்டுமல்ல, கண் நரம்புகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னதையடுத்து அந்தக் குடும்பத்தில் பெரிய சண்டையே மூண்டுவிட்டது.
தலைமுறை இடைவெளி
பிள்ளைகள் எதை விரும்பிப் பார்ப்பார்கள், எது பிடிக்கும் எனப் பெரியவர்களுக்குத் தெரியும். ஆனால், பெரியவர்களின் விருப்பு வெறுப்பு என்ன என்று இன்றைய இளைய தலைமுறையினரால் புரிந்துகொள்ள முடியாது. இதில் ஏற்படும் தலைமுறை இடைவெளிப் பிரச்சினை, பெரிய அளவில் மனஸ்தாபங்களை ஏற்படுத்திவிடுகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கிறார்கள். எப்போதும் காதுகளில் இயர் போனைச் செருகிக்கொண்டு ஏதாவது ஒன்றைக் கேட்டுக்கொண்டு நடத்தல், வாகனம் ஓட்டுதல் என்று இருக்கிறார்கள். இரவில் அதிக நேரம் செல்போனிலேயே பொழுதைச் செலவிடுகிறார்கள். பெரியவர்கள் இதைக் கண்டித்தால் பிரச்சினை வெடித்துவிடுகிறது.
இடைவெளி குறைப்போம்
வசதியுள்ள குடும்பம் என்றால், பெரியவர்கள் இருக்கும் அறையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வைத்து ஒலி அளவை மட்டும் கொஞ்சம் சரி செய்தால் பிரச்சினைகளைச் சமாளித்துவிடலாம். அப்படி வசதி இல்லாத வீடுகளில் ஒருவருக்கொருவர் நேரங்களைக் குறித்துக்கொண்டு பிரச்சினை இல்லாமல் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். நெடுந்தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையாகப் புனையப்பட்டவை என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டால், எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாது.
பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல், பேசித் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவைதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். நம்மிடம் உள்ள குறைகளைப் பிறர் கூறும்போது நாம் நம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். குறைகள் இல்லாத மனிதனே இல்லை. இளம் தலைமுறையினருக்கு செல்போன் போன்ற சாதனங்கள் இருப்பதுபோல், பெரியவர்களுக்குத் தொலைக்காட்சி போன்ற சில வடிகால்கள் இருக்கின்றன. அதை இளையவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம்விட சிறந்த தீர்வு, பயணம்தான். பயணம் என்றால், சுற்றுலா என்ற அளவுக்குக் கூட செல்ல வேண்டியதில்லை. அதெல்லாம் எப்போதாவதுதான் சாத்தியம். எனவே, அருகில் உள்ள கோயில், பூங்கா போன்ற இடங்களுக்குக் குடும்பத்துடன் சென்றுவரலாம். வெளியில் செல்லும்போது ஒருவருக்கொருவர் மனம் திறந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
ஆம், தலைமுறை இடைவெளிகளை உடைத்தெறிய வேண்டுமானால், இரு தரப்பும் உளப்பூர்வமாக அதற்குத் தயாராக வேண்டும்.
(காற்று வீசும்...)