பேசும் படம் - 48: முகமது அலியும் பீட்டில்ஸ் இசைக்குழுவும்


குத்துச்சண்டை உலகில் கடந்த நூற்றாண்டில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி உலகளாவிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் முகமது அலி. அவர் புகழ்பெற்றிருந்த அதே காலகட்டத்தில் இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய இசைக்குழு 'பீட்டில்ஸ்'. ஜார்ஜ் ஹாரிசன், ஜான் லெனன், பால் மெக்கார்டினி, ரிங்கோ ஸ்டார் ஆகிய 4 புகழ்பெற்ற இசைக்கலைஞர்களைக் கொண்ட பீட்டில்ஸ் இசைக்குழு, தங்களின் இனிய பாடல்களால் உலகையே ஆட்கொண்டிருந்தது.

இப்படி ஒரே நேரத்தில் வேறுபட்ட 2 துறைகளில் புகழ்பெற்றிருந்த முகமது அலியும், பீட்டில்ஸ் இசைக்குழுவும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். இந்தப் படத்தை எடுத்தவர் புகழ்பெற்ற விளையாட்டுத் துறை புகைப்படக்காரரான கிறிஸ் ஸ்மித் (chris smith).

1964-ம் ஆண்டு பீட்டில்ஸ் இசைக்குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. பிப்ரவரி மாதம் மியாமி பகுதியில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவர்கள் சென்றிருந்தனர். புகழ்பெற்ற ஹெவிவெயிட் சாம்பியனான சோனி லிஸ்டனுக்கும் குத்துச்சண்டை போட்டிகளில் வளரும் நட்சத்திரமாக கருதப்பட்ட காஸியஸ் கிளேவுக்கும் (பின்னாளில் இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை முகமது அலி என்று மாற்றிக்கொண்டார்) சில நாட்களில் நடக்கவுள்ள குத்துச்சண்டை போட்டியைப் பற்றிய பேச்சு அமெரிக்க மக்களிடையே பரபரப்பாக இருந்தது.

அப்போது ஹெவி வெயிட் சாம்பியனாக இருந்த லிஸ்டனுடன் சேர்த்துவைத்து பீட்டில்ஸ் குழுவைப் படம்பிடித்தால் என்ன என்ற யோசனை அக்குழுவின் ஆஸ்தான புகைப்படக்காரரான ஹாரி பென்ஸனுக்கு (பீட்டில்ஸ் குழுவின் தலையணைச் சண்டையைப் படம் பிடித்தவர்) தோன்றியுள்ளது. அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டால் பீட்டில்ஸ் குழுவின் அமெரிக்க சுற்றுப்பயணம் மேலும் பேசப்படும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார். பீட்டில்ஸ் குழுவுக்கும் இந்த யோசனை பிடித்துப் போக இது தொடர்பாக லிஸ்டனுடன் பேசினர்.

ஆனால், பீட்டில்ஸ் குழுவின் இந்த கோரிக்கையை ஏற்க சோனி லிஸ்டன் மறுத்துள்ளார். அத்துடன் பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றியும் அவர் தாறுமாறாகப் பேசியுள்ளார். இது பீட்டில்ஸ் இசைக்குழுவினரின் மனதை பாதித்தது. இந்நிலையில்தான் லிஸ்டனுக்கு பதில், இப்போட்டிக்காக பயிற்சி பெற்றுவரும் முகமது அலியைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் என்ன என்ற யோசனை பீட்டில்ஸ் இசைக்குழுவினருக்கு வந்தது. உடனடியாக பென்சனையும் அழைத்துக்கொண்டு மியாமி கடற்கரைப் பகுதியில் முகமது அலி பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்த இடத்துக்குச் சென்றனர்.

முகமது அலி பயிற்சி செய்துகொண்டிருந்த உடற்பயிற்சி கூடத்துக்குள் நுழைய முதலில் பீட்டில்ஸ் குழுவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்கிருந்த ஒரு அறைக்குள் அவர்களைக் காத்திருக்குமாறு அங்கிருந்தவர்கள் கூறினர். நீண்ட நேரம் அவர்கள் அறைக்குள் காத்திருந்தும் முகமது அலி வரவில்லை. பீட்டில்ஸ் குழுவைப் பற்றி அப்போது முகமது அலிக்கு அவ்வளவாகத் தெரியாததால், அவர்கள் வந்திருப்பது தெரிந்தும் உடனடியாக அவர்களைச் சந்திக்க செல்லாமல் முகமது அலி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தாங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி வந்ததால் கோபமடைந்த பீட்டில்ஸ் குழுவினர் அங்கிருந்து திரும்பிப் போக முடிவெடுத்தனர்.

அந்த நேரத்தில் தான் அங்கிருந்த முகமது அலியின் நண்பரும், பத்திரிகையாளருமான லிப்சைட் என்பவர், பீட்டில்ஸ் குழுவின் புகழைப் பற்றியும் அவர்கள் காத்திருப்பது பற்றியும் முகமது அலியிடம் எடுத்துக் கூறினார். இதைத்தொடர்ந்து பீட்டில்ஸ் குழுவினர் இருந்த அறைக்குள் நுழைந்த முகமது அலி, அவர்களுடன் சகஜமாகப் பேசத் தொடங்கினார்.

முகமது அலியும் பீட்டில்ஸ் குழுவினரும் ஒன்றாக சேர்ந்திருக்கும் படங்களை எடுக்கும் திட்டத்தைப் பற்றி, பென்சன் கூற அவரும் உற்சாகமாகத் தலையாட்டினார். பீட்டில்ஸ் குழுவினர் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுடன் குதூகலமாகப் பல படங்களை எடுத்துக்கொண்டார் முகமது அலி. இப்படங்களை பென்ஸன் மட்டுமின்றி, அங்கிருந்த முகமது அலியின் நண்பரும் பிரபல விளையாட்டு புகைப்படக்காரரான கிறிஸ் ஸ்மித்தும் எடுத்தார்.

இச்சம்பவத்தைப் பற்றி கூறும் கிறிஸ் ஸ்மித், “அப்போது நான் முகமது அலியைப் படமெடுப்பதற்காக ஜிம்முக்கு சென்றிருந்தேன். அங்கு அவரைப் படமெடுத்துக்கொண்டு இருந்தபோது, பீட்டில்ஸ் குழுவினர் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்களைப் பற்றி தனது நண்பர் மூலம் தெரிந்துகொண்ட முகமது அலி, ஒரு பெரிய இசைக்குழுவினர் தன்னை சந்திக்க வந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஒரு குழந்தையைப் போல் அவர்களுடன் விதவிதமான போஸ்களில் செல்லச் சண்டை போடுவதுபோல் படம் எடுத்துக்கொண்டார். ஒரே நேரத்தில் உலகின் 5 பிரபலங்களைப் படமெடுக்க அன்று எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது” என்கிறார்.

கிறிஸ் ஸ்மித்

இங்கிலாந்தின் பிரபலமான புகைப்படக் காரராக விளங்கியவர் கிறிஸ் ஸ்மித். 1970-ம் ஆண்டில் புகழ்பெற்ற ‘தி அப்சர்வர்’ பத்திரிகையில் புகைப்படக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்மித், விளையாட்டு உலகில் பல அரிய புகைப்படங்களை எடுத்தவர். கலர் புகைப்படங்களின் காலம் வந்த பிறகு, மற்ற புகைப்படக்காரர்கள் கலர் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால், கிறிஸ் ஸ்மித் தொடர்ந்து கறுப்பு வெள்ளைப் படங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். சிறந்த விளையாட்டு புகைப்படக்காரருக்கான விருதை 4 முறை வென்றுள்ள கிறிஸ் ஸ்மித், ‘ஸ்போர்ட் இன் ஃபோகஸ்’ (Sport in Focus) உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

x