எம்.கபிலன்
readers@kamadenu.in
நவம்பர் 24-ல், அதிமுக பொதுக்குழு கூடவிருக்கும் சூழலில், “அண்ணா எந்த நோக்கத்திற்காகத் திமுகவை உருவாக்கினாரோ அந்த நோக்கம் இன்று அக்கட்சியினரிடம் இல்லை. அதேபோல் அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆரின் நோக்கம் பற்றிய அக்கறை அதிமுகவினரிடம் இல்லை” என்று அதிரடி கிளப்புகிறார், திருச்சி கே.சௌந்தரராஜன்.
ஆண்டிமடம் அருகே சோனாபுரி கிராமத்தில் ‘அண்ணா பெரியார் அரங்கம்’ என்ற பெயரில் திருமண மண்டபம் நடத்திவரும் சௌந்தரராஜன், ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து திமுக பொதுக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய இவர், அண்ணா, சம்பத் உட்பட திராவிட இயக்க முன்னோடிகளிடம் நெருங்கிப் பழகியவர். திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது அவரோடு உடனிருந்தவர். பின்னர், மூத்த முன்னோடிகளுடன் சேர்ந்து அதிமுகவை உருவாக்கி கட்சியின் நெறிமுறைகளை வகுக்க உதவியாக இருந்தவர். திருச்சி மாவட்டத்தின் அதிமுக மாவட்டச் செயலாளராக 1972 முதல் 1984 வரை பதவி வகித்தவர். இரண்டு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தற்போது 82 வயதாகும் சௌந்தரராஜன், நேரடியாக அரசியலில் பங்கேற்காவிட்டாலும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார். ‘காமதேனு’வுக்காக அவரைச் சந்தித்தபோது, இடைவிடாமல் இரண்டு மணி நேரம் அரசியல் பேசினார்.
“திமுகவை உருவாக்கியபோது அதன் தலைவர் பெரியார் தான் என்று சொல்லி தலைவர் நாற்காலியைக் காலியாக வைத்திருந்தார் அண்ணா. ஆனால், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு அந்த நாற்காலியைக் கைப்பற்றிய கருணாநிதியோ, இறக்கும் வரை அதைவிட்டு இறங்கவேயில்லை. அடுத்து, ஸ்டாலின் அந்த நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அண்ணா தனது வாரிசுகளை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை. ஆனால், கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என்று வாரிசுகளுக்கே இப்போது கட்சி சொந்தமாகிவிட்டது. அதே நிலை கட்சியின் கீழ்மட்டம் வரையிலும் தொடர்கிறது. வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது.
அதேபோல, இன்றைக்கு இருப்பது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவே இல்லை. ‘லஞ்சம், ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்படும்; தவறு செய்கிறவர்கள் பதவியிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள்; கட்டுண்டு வாழோம், பிரிவினை நாடோம்; சமநிலையில் இணைவோம்’ இதெல்லாம் அதிமுக கொள்கைகளில் மிக முக்கியமானவை. இவற்றில் ஏதாவது ஒன்றாவது அதிமுகவில் இப்போது இருக்கிறதா?
இன்னும் சொல்லப்போனால், இது அதிமுகவே இல்லை, கூட்டுக்கொள்ளைக் கூட்டம். எப்படிக் கொள்ளையடிக்கலாம், எதில் கொள்ளையடிக்கலாம் என்பதுதான் இவர்களின் நோக்கம். கொள்ளையடிக்கும் பணத்தை எல்லோருக்கும் பிரித்துக்கொடுக்
கிறார்கள். மேலே உள்ளவர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும்கூட பணம் பங்கிடப்படுகிறது. அதனால் அனைவருமே இதற்கு உடன்படுகிறார்கள்” என்று சாடும் சௌந்தரராஜன், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அதிமுகவினர் கட்டுண்டு கிடப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.
“இது மோடி அதிமுக. இவர்கள் மோடியிடம் நிபந்தனையற்ற சரணாகதி அடைந்துவிட்டார்கள். மீறி நிபந்தனைகள் ஏதாவது இவர்கள் வைத்துவிட்டால் அவ்வளவுதான். இவர்கள் மீதான லஞ்ச, ஊழல் ஆதாரங்களை மத்திய அரசு பட்டியலிட்டுத் தயாராக வைத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதைக் கையில் எடுத்து இவர்களை வீட்டுக்கோ, சிறைக்கோ அனுப்ப அவர்கள் காத்திருக்கிறார்கள்.
பாஜக என்பது சேர்ந்தாரைக்கொல்லி. விரைவில், பாஜகவுடன் சேர்ந்திருக்கும் அதிமுகவும் காலியாகப் போகிறது. தமிழர்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போடவில்லை என்பதற்காக தமிழர்களை பாஜகவினர் குனியக் குனிய வைத்து கொட்டுகிறார்கள்.
‘அரசியலுக்கு வந்த பிறகு ஒரு அங்குல நிலம் வாங்கி யிருந்ததாக நிரூபித்தால்கூட சட்டமன்றத்திலேயே தூக்கில் தொங்குவேன்’ என்று சொன்னார் எம்ஜிஆர். ஆனால், இன்றைக்கு அவரது கட்சியை வைத்து ஆட்சி செய்கிறவர்கள் பல தீவுகளை வாங்கிக் குவிக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. சொத்துகளைப் பாதுகாத்து வைப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. இவர்களிடமிருப்பதுதானா எம்ஜிஆரின் அதிமுக?
‘எனது காலத்துக்குப் பிறகு கட்சியை ஒழுங்காக நடத்த வில்லையென்றால் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்’ என்றுதான் எம்ஜிஆரின் உயிலில் எழுதப்பட்டிருக்கிறது. எனவே, அவருடைய கொள்கைகள் இல்லாத நிலையில் இப்போதைய அதிமுகவைக் கலைத்துவிட
வேண்டும்.
ஹைட்ரோகார்பன், நீட் என்று தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து அதிமுக அரசு குரல் எழுப்பவில்லை. நீர்நிலைகளை ஒழுங்காகத் தூர்வாரவில்லை. மணல், மலை உள்ளிட்ட கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழனை அழிக்கத் திட்டமிட்டு வேலை செய்யும் மோடியை எதிர்க்க முதுகெலும்பு இல்லை. பின் எதற்கு ஆட்சியும் அதிகாரமும்?
மது விலக்கு பற்றி அண்ணாவின் ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் கேள்வி கேட்டார். அதற்குப் பதில் அளித்த அண்ணா, ‘இந்த அரசை நடத்துவதற்குப் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர, மதுவிலக்குக் கொள்கையை ரத்து செய்ய மாட்டேன்’ என்று சொன்னார். அந்த நிலை இப்போது நீடிக்கிறதா?
அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றபோது முதல் நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ‘தவறே செய்யாத ஆட்சியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதையும் மீறி ஏதாவது தவறுகள் தென்பட்டால் உடனே எனக்குச் சுட்டிக்காட்டுங்கள்; அதற்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். அந்தத் தவறைச் சரி செய்துவிடுகிறேன்’ என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு ஆயிரம் தவறுகளைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியபோதும், நீதிமன்றங்கள் கண்டிக்கிறபோதும் அதைக் கண்டு கொள்ளாத ஒரு அரசு இருக்கிறது. இது எப்படி எம்ஜிஆரின் அரசாக இருக்க முடியும்?
நடந்து போய், சைக்கிள் மிதித்து, மாட்டுவண்டியில் போய் கட்சியை வளர்த்தவர்கள் அந்நாளைய திமுக, அதிமுக தொண்டர்கள். அப்படியிருந்தவர்களைக் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்யும் கூலிகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள் இந்நாளைய தலைவர்கள்.
எங்கள் காலத்தில் கட்சிக்கு நிதி வேண்டுமென்றால் சிறப்புக் கூட்டம் போடுவோம். அதில் கலந்து கொள்ள தொண்டர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த நிதியைக் கொண்டு கட்சி வளர்த்தோம். இப்போது கூட்டத்தில் கலந்துகொள்ளவே தொண்டர்களுக்குப் பணம், பிரியாணி குவாட்டர் கொடுக்க வேண்டியிருக் கிறது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தொண்டர் களால் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும்” என்று பொரிந்து தள்ளிய சௌந்தரராஜன், ரஜினியையும் ஒரு பிடி பிடித்தார்.
“ரஜினி ஒரு மாயமான். அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வரப்போவதில்லை. ஒருவேளை அதிமுகவிற்கோ, பாஜகவுக்கோ அவர் தலைமையேற்றாலும்கூட எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை” என்று பேட்டியை முடித்தார் சௌந்தரராஜன்.