பேசும் படம் - 47: உலகை கலங்கவைத்த சிறுமி!


இராக்கில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 
பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். பதிலுக்கு கிளர்ச்சியாளர்களும் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த சமயத்தில்தான் உலகின் மனசாட்சியை உலுக்கிய அந்த என்கவுன்ட்டர் நடந்தது.



2005-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி டல் அஃபார் நகரில் அமெரிக்க வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மழையால் நனைக்கப்பட்டிருந்த அந்த மாலை நேரத்தில் தூரத்தில் வரும் ஒரு கார் அவர்களைப் பரபரக்க வைத்தது. 6 மணிக்கு மேல் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி தங்களை நோக்கி வரும் காரை ராணுவ வீரர்கள் அச்சத்துடன் பார்த்தனர். கார்களைப் பயன்படுத்தி பல இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்து வந்ததே அவர்களின் அச்சத்துக்குக் காரணம். காரில் இருப்பது தீவிரவாதிகளோ என்று நினைத்த வீரர்கள், தங்களை உஷார்படுத்திக்கொண்டனர். காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.

ஆனால், கார் நிற்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. உள்ளே இருப்பது தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று நிச்சயித்த உயர் அதிகாரி, காரை நோக்கிச் சுடுமாறு வீரர்களுக்கு சமிக்ஞை செய்தார். 

அடுத்த சில நொடிகளில் அவர்களின் துப்பாக்கிகள் கார் மீது குண்டுமழை பொழிந்தன. குண்டுச் சத்தங்களை விஞ்சும் வகையில் ஒரு குழந்தையின் அலறல் சத்தமும் கேட்க, ஓடிப்போய் சுவரில் மோதி நின்ற காருக்குள் பார்த்தனர் வீரர்கள். அங்கே வீரர்களின் குண்டுகள் துளைத்ததால், தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, பின்சீட்டில் தன் சகோதரர்களுக்கு நடுவே கதறியபடி அமர்ந்திருந்தாள் ஒரு 5 வயது சிறுமி.தாங்கள் தவறாக சுட்டுவிட்டதை உணர்ந்த ராணுவ வீரர்கள், அந்தச் சிறுமியை காரில் இருந்து இறக்கி ஆசுவாசப்படுத்தினர். ஆனாலும் அச்சத்தில் உறைந்துபோன அவள், தொடர்ந்து அழுது
கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அங்கு ராணுவத்துடன் இருந்த புகைப்படக்காரரான கிறிஸ் ஹோண்டிரஸ், சிறுமியின் நிலையைப் படமாக எடுத்தார். அடுத்த நாள் பல்வேறு நாட்டுப் பத்திரிகைகளிலும் இந்தப் படம் வெளியாகி போரின் கோரமுகத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது.

அன்றைய தினம் கிறிஸ் ஹோண்டிராஸ் எடுத்த படத்தில் ரத்தத் திட்டுகளுக்கு நடுவே கதறி அழுதுக்கொண்டிருந்த சிறுமியான சமர் ஹசான், 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ம் ஆண்டு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார். மொசுல் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள 4 குடும்பங்களுக்கு மத்தி
யில் தனது மாமாவுடன் வசித்துக்கொண்டிருந்தார் சமர் ஹசான். 7 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த சம்பவம், படமெடுக்கப்பட்டதைப் பற்றியோ, அது உலகம் முழுவதும் பேசப்பட்டதைப் பற்றியோ அவருக்குக் கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில் அவரைச் சந்தித்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர், அவரது படத்தைக் காட்ட, பழைய நினைவுகளில் மூழ்கிய சமர் ஹசான், தனக்கு ஏற்பட்ட துயரத்தை கண்ணீருடன் விளக்கத் தொடங்கினார்...

“அன்றைய தினம் என் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்பா வேலையை விட்டு வந்ததும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அம்மா கூறினார். அப்போது மாலை 5 மணியாகி இருந்தது. 6 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அதற்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற திட்டத்தில் எங்களை அழைத்துக்கொண்டு அப்பா புறப்பட்டார். மருத்துவமனையில் அண்ணனைக் காட்டிவிட்டு வீடு திரும்புவதற்குள் 6 மணி ஆகிவிட்டது. விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக அப்பா வேகமாக காரை ஓட்டிக்கொண்டு சென்றார்.

அப்போது ஓரிடத்தில் ராணுவ வீரர்கள் சிலர் எங்கள் காரை நிறுத்தச் சொல்லி கை காட்டினார்கள். விரைவில் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற மனநிலையில் இருந்த அப்பா, காரை நிறுத்தவில்லை. அப்போது திடீரென்று படபடவென ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. எங்கள் காருக்குள் குண்டுகள் பாய்ந்தன. அடுத்த சில விநாடிகளில் அம்மாவும் அப்பாவும் குண்டுகளுக்கு பலியாகிவிட்டனர். எங்களுக்கு நடந்த துயரத்தை நினைத்துக் கதறி அழுதேன். ஆனால், இந்தச் சம்பவம் புகைப்படமாக எடுக்கப்பட்டு இந்த அளவுக்கு பரவும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கலங்கிய கண்களுடன் பழைய சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் சமர் ஹசான்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சமர் ஹசானின் மூத்த சகோதரியும் அவரது கணவரும், சமர் ஹசானையும் அவரது சகோதரர்களையும் மொசுல் நகருக்கு அழைத்துவந்து தங்களுடன் குடிவைத்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் அன்றைய தினம் நடந்த சம்பவத்துடன் சமர் ஹசானின் துயரங்களும், உள்நாட்டுப் போரால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் முடிவுக்கு வரவில்லை. பெற்றோரை இழந்து 3 ஆண்டுகள் கழித்து அவரது சகோதரரான ரகான், உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டார். சமர் ஹசானின் புகைப்படம் வெளியான பிறகு அவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பதாக அமெரிக்க அரசு கூறியிருந்தது. ஆனால், தங்களுக்கு எந்த நிதியும் வந்து சேரவில்லை என்கிறார் சமர் ஹசான்.

கிறிஸ் ஹோண்ட்ராஸ்

(Chris Hondros)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1970-ம் ஆண்டு பிறந்தவர் கிறிஸ் ஹோண்ட்ராஸ். போர் நிகழ்வுகளைப் படம் பிடிப்பதில் நிபுணராக விளங்
கிய கிறிஸ், அங்கோலா, ஆப்கானிஸ்தான், லிபியா,  ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களை மிகச்
சிறப்பாக படம்பிடித்துள்ளார். இவர் எடுத்துள்ள படங்கள் ‘நியூஸ் வீக், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளை அலங்கரித்துள்ளன. போர்க் 
களங்களிலேயே தனது வாழ்க்கையின் பெரும் பகுதி யைக் கழித்த கிறிஸ், 2011-ம் ஆண்டு லிபிய உள்நாட்டு போரின்போது நடந்த ஒரு குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

x