கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், இசை போன்றவற்றுக்கெல்லாம் வாரம் ஓரிரு வகுப்புகள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். விவசாயப் பாடம் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோமா? கோவை அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விவசாயப் பாடம் எடுக்கிறார் ஒரு பெண் தொழிலதிபர். அதுவும் இலவசமாக!
சமீபத்தில், அன்னூர் வாகராயம்பாளையம் மேனிலைப் பள்ளியில் விவசாயப் பாடம் நடத்தப்படுகிறது எனக் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். வகுப்பறையில் மாணவ - மாணவிகள் எழுந்து நின்றிருந்தார்கள். பாடம் நடத்தும் இடத்தில் மூன்று பெண்கள் பாடல் பாட… அதை அடியொற்றி மாணவர்களும் பாடுகிறார்கள்.
‘உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்… உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்…’ – என்ற வேதாத்திரி மகரிஷியின் பாடலை அந்தப் பெண்களும் மாணவர்களும் பாடி முடிக்க, அனைவரும் அமர்கிறார்கள்.
மூவரில் ஒரு பெண் பேசத் தொடங்குகிறார்.