கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
இருக்கு... ஆனா, இல்ல... என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது தமாகா. சீக்கிரமே அது பாஜகவுடன் இணையப் போகிறது என்று அரசியல் ஆரூடம் சொல்லப்படும் நிலையில், நவம்பர் 6-ம் தேதி மோடியைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் ஜி.கே.வாசன். அடுத்து அமித் ஷாவையும் சந்திப்பேன் என்று அவர் சொல்லியிருப்பது பற்றி தமாகாவின் மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனுடன் பேசலாம்.
ஒருகாலத்தில் ஜமீன்தார்களின் கட்சி என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் இப்போது, ஜாமீன்தாரர்களின் கட்சியாகிவிட்டதே?
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் பல பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப் போடுவதாலேயே அவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று அர்த்தமல்ல. தீர்ப்பு வர வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், வெறுமனே முதல் தகவல் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படுகிற போது ஜாமீன் வாங்குவது என்பது வழக்கம்தான். அது அவர்களது சட்ட உரிமையும்கூட. அதை வைத்துக்கொண்டு எந்தக் கட்சியையும் ஜாமீன்தாரர்களின் கட்சி என்று சொல்வது தவறு.