நீர் நிறைந்த பழைய கற்குவாரியில் விபத்துக்குள்ளான கனரக வாகன மீட்புப் பணியைப் பார்க்கச் சென்ற ராணுவ விஞ்ஞானிகள் சோனார் ஆராய்ச்சியில் அனுபவமுள்ளவர்கள். அவர்களின் புதிய கண்டுபிடிப்பைப் பார்ப்பதற்கு முன் சோனாரைப் பற்றியும் கடற்போரைப் பற்றியும் ஒரு குட்டி விளக்கம்.
சோனார்-கடல் ரேடார்
ரேடார் திரையிலிருந்து காணாமல் போனது என விபத்துக்குள்ளான விமானங்களைப் பற்றிய செய்தியை ஊடகங்களின் மூலமாக அறிந்திருப்பீர்கள். ரேடார் என்பது என்ன?
மின்சாரம் துண்டிக்கப்பட்ட இருட்டறையில் நீங்கள் டார்ச் அடித்தால், டி.வி திரை, கணினி திரை, முகம் பார்க்கும் கண்ணாடி என எல்லா கண்ணாடிகளிலும் ஒளி பட்டுப் பிரதிபலிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது போலவே மின்காந்த அலைகளை (Electromagnetic Waves) செலுத்திப் பறக்கும் விமானங்களின் மீது பட்டு அவை பிரதிபலிப்பதைக் கொண்டு விமானங்களையும் அவற்றின் தூரங்களையும் அறிவது ரேடார்.
மின் காந்த அலைகள் நீரில் அதிக தூரம் பயணிக்காது. எனவே, ஒலி அலைகளைப் (Acoustic Waves) பயன்படுத்தி கடலின் ஆழம், அருகிலுள்ள கப்பல், நீர்மூழ்கி ஆகியவற்றைக் கண்டறிவது சோனார் (SONAR – Sound Navigation and Ranging) கருவி. சோனார் ஒரு வகையில் கடல் ரேடார். இந்த சோனார், கடற்போரின் ஓர் அத்தியாவசியமான அங்கம்.
ஆழ்கடலில் கண்ணாமூச்சி
கடலில் போர்க் கப்பலைத் தாக்க நீர் ஏவுகணைகளைப் (Tarpedos) பயன்படுத்துவார்கள். நீர் ஏவுகணைகளைக் கப்பலிலிருந்தோ, நீர்மூழ்கியிலிருந்தோ ஏவலாம். கப்பல் கடலின் மேற்பரப்பில் இருப்பதால் கண்ணுக்குத் தெரியும். ஆனால், நீர் ஏவுகணைகளும், நீர்மூழ்கிகளும் கடல் மட்டத்துக்கு அடியில் இயங்கும். எனவே எதிரியின் ஏவுகணைகளையும், நீர்மூழ்கிகளையும் கண்டுபிடிக்க, கப்பலிலும் நீர்மூழ்கியிலும் சோனார் கருவியைப் பயன்படுத்துவார்கள்.
ஒரு வழி-இரு வழி
சோனார்களில் ஒரு வழி, இரு வழி என இரண்டு வகைகள் உண்டு. எதிரிநாட்டுக் கப்பலின் ஓசையை மட்டும் கேட்டறிந்து அதைக் கப்பல், நீர்மூழ்கி, ஏவுகணை என வகைப்படுத்துவது ஒருவழி சோனார். சில சமயங்களில் சத்தமில்லாமல் எதிரி நீர்மூழ்கிகள் மிதப்பதுண்டு. அவற்றைக் கண்டுபிடிக்க ஒலி அலைகளை உருவாக்கி, அதைச் செலுத்தி அதன் பிரதிபலிப்பைக் கொண்டு கண்டறிய வேண்டும். இது இருவழி சோனார்.
ஒலியலைகளை சோனார் எழுப்புவதால், ஏவுகணை அதை மோப்பம் பிடித்துத் தாக்கும். இதனால் சோனார் பொருத்தப்பட்டுள்ள கப்பலும், நீர்மூழ்கியும் அழிக்கப்படும்.
வால் சோனார்
சோனாரை ஒரு கயிற்றில் கட்டி கப்பலுக்கு அல்லது நீர்மூழ்கிக்குப் பின்னால் கடலில் மிதக்கவிடுவது ஒரு போர் நுட்பம். சோனார் கருவி கப்பலைவிட்டு தூரத்தில் இருப்பதால் ஏவுகணை தாக்கினாலும் கப்பல் தப்பும். சோனாரை ஹெலிகாப்டரில் கட்டித் தொங்கவிட்டு, தேவைப்படும் இடங்களில் கடலில் மூழ்க வைத்து எதிரி நீர்மூழ்கிகளைக் கண்டறிவது இன்னொரு போர் நுட்பம். இவ்வகை ஹெலிகாப்டர் சோனார்களுக்கு ‘அமிழ் சோனார்’ (Dunking Sonar) என்று பெயர்.
சத்தம் போடாத ஒரு வழி சோனாரை இப்படி கடலில் இறக்கினால், ரகசியமாக உள்ளே புழங்கும் நீர்மூழ்கிகளைக் கண்டறியலாம். ஹெலிகாப்டர்களிலிருந்தும் நீர் ஏவுகணைகளை வீசி அவற்றை அழிக்கலாம். ஆக, அமிழ் சோனார் கடற்போரின் புதிய ஆபத்தான அற்புதம்! நம் ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய அமிழ் சோனார் ஏ.எல்.ஹெச்-துருவ் ரக ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏமாற்று இலக்கு
தேடி வரும் நீர் ஏவுகணைகளைத் திசைதிருப்பவும் நுட்பங்கள் உண்டு. கப்பல் அல்லது நீர்மூழ்கி போல சத்தம் போடும் ஏமாற்று இலக்குகள் (Decoys) கப்பலிருந்தோ நீர்மூழ்கியிலிருந்தோ ஏவப்படும். இந்த ஏமாற்று இலக்குகளை எதிரி ஏவுகணைகள் துரத்தி அழிக்கும். நமது கப்பலும், நீர்மூழ்கியும் தப்பிக்கும்.
தாரங்கினி ஆழக்கருவி
இப்படிப்பட்ட ஆழ்கடல் சோனார் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ விஞ்ஞானிகள்தான் மேற்குறிப்பிட்ட விபத்தைக் காணச் சென்றனர். இவர்கள் கொச்சியிலுள்ள ‘கடல்சார் இயற்பியல் மற்றும் கடலியல் ஆய்வகம்’ (Naval Physical and Oceanographic Laboratory-NPOL) என்ற டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் விஞ்ஞானிகள். மீட்புப் பணிகளில் நீர்நிலையின் ஆழம் தெரிந்தால்தான் பணிகளைத் திட்டமிடமுடியும். மேலும் தரை கடினமானதா, புதை மணலா என்பது தெரிந்தால்தான் நீச்சல் வீரர்களை முன்னெச்சரிக்கையுடன் அனுப்ப முடியும்.
மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காகவே ராணுவ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது ‘தாரங்கினி’. இது நீர் நிலையின் ஆழம் மற்றும் தரையின் உறுதித்தன்மையை அளவிடும் கருவி. ஒலியலைகளின் பிரதிபலிப்பைக் கொண்டு இக்கருவி ஆழத்தை அளக்கும்.
ராணுவம், துணை ராணுவம், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குப் பெரும் பயனளிக்கும் இக்கருவியை செல்போன் போல சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். இதில் ஒளிவிளக்கு இருப்பதால் இருளிலும் இயங்கும். தாரங்கினி, 100 அடி ஆழம் வரை அளந்து சொல்லும். 100 அடிக்கும் அதிகமான ஆழங்களில் கருவிகளின் துணையில்லாமல் வீரர்கள் நீரில் இறங்க முடியாது.
மீட்புக் கருவி சஞ்சீவனி
நிலநடுக்கப் பகுதிகளிலும், கட்டிட விபத்துகளிலும் இடிபாடுகளில் சிக்கிய மனிதர்களை உயிரோடு மீட்பதில் மிகுந்த சிரமங்கள் உண்டு. சிக்கியவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுவதால் உயிர்பலி அதிகரிக்கும். மோப்ப நாய்களைக் கொண்டு தேடுவதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும் பெரும் விபத்துகளில் எல்லா பகுதிகளிலும் உயிர்களைக் காப்பாற்றுவது சாத்தியமாவதில்லை.
கொச்சி ராணுவ ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், ஹைட்ரோபோன் (Hydrophone) கருவியைக் கொண்டு கடலடியில் ஓசைகளைப் பதியும் ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்கள். அழுத்த வேறுபாடுகளால் மின்சக்தியை உற்பவிக்கும் பீசோ (Piezo) பொருளினால் இயங்கும் ஹைட்ரோபோன், சத்தங்களை எளிதில் உணரும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் தயாரித்த உயிர் மீட்புக் கருவி ‘சஞ்சீவனி’.
இக்கருவியைக் கையில் ஏந்தி இடிபாடுகளில் சிக்கிய மனிதர்களின் சத்தத்தைத் துல்லியமாகக் கேட்டு மீட்புப் பணியைத் துரிதமாக்கலாம். காற்றில், கான்கிரீட் தளங்களில் அல்லது செங்கல் சுவர்களிலிருந்தும் இக்கருவி மனித சத்தங்களைக் கண்டறியும். 40 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட இதன் உணர்வு நுனியானது (Sensor Head), எளிதில் வளையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடிபாடுகளின் துவாரங்களில் இதை நுழைத்து சத்தங்களைக் கண்டறியலாம். இக்கருவியை 10 மீட்டர் வரை நீட்டலாம். மேலும் கருவியின் உணர்வு நுனியிலிருந்து ஏறக்குறைய 8 மீட்டர் ஆழம் வரை சத்தங்களைக் கண்டுணர்ந்து சிக்கியவர்களை மீட்கலாம்.
இடிபாடுகளில் சிக்கியவர்களின் கூக்குரல், தட்டும் சத்தம், உராய்வு சத்தம் போன்றவற்றின் மூலம் சிக்கிய இடத்தைத் துல்லியமாகக் கணித்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடலாம். 2001-ல், குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பத்தில் பல உயிர்களை மீட்டது ‘சஞ்சீவனி’. இதன் உயிர் மீட்பு சேவை எல்லா அவசரக் காலங்களிலும் தொடரும்.
உயர் தொழில்நுட்பத் தாக்குதல் தளவாட ஆராய்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது ராணுவ விஞ்ஞானிகள், உயிர் மீட்கும் கருவிகளை உருவாக்குவதும், ஆய்வகத்திலிருந்து அறிவியல் புறப்பட்டு மக்களின் ஆபத்து காலத்தில் தோள் கொடுக்கும் தோழனாக மாறிவருவதும் பாராட்டுதலுக்குரிய பரிணாம வளர்ச்சியே.
வெடிபொருள் செயலிழப்பு
ரயில்நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதை ஊடகங்களில் பார்க்கிறோம். வெடிபொருளைச் செயலிழக்கச் செய்ய, வெடிபொருள் நிபுணர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பேராபத்தோடு விளையாடி வினை முடிக்கின்றனர். சமயங்களில் முயற்சி தோல்வியில் முடிந்து நிபுணர்கள் படுகாயமடைவதுண்டு. சில சமயம் உயிர்பலியும் ஏற்படுகிறது. வெடிபொருள் நிபுணர் வெடிபொருளுக்கு மிக அருகில் சென்று தனது கைகளால் செயலாற்றுவதால்தான் ஆபத்து மிக அதிகம். தொடாமல் தூரத்திலிருந்து ஒரு வெடிபொருளைச் செயலிழக்கச் செய்ய முடியுமா? அதற்கான தொழில்நுட்பங்கள் என்ன?
(பேசுவோம்...)