நான்சி கொடுத்த ஜாம் தடவிய பிரெட் ஸ்லைஸைக் கடித்தபடி டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த பரணி, ரொஸாரியோ ஒரு வெண்கலச் சிலையை மஞ்சள் துணி வைத்துத் துடைப்பதைப் பார்த்தான்.
அவர் அருகில் வந்தான்.
“தாத்தா…நீங்க பொய் சொல்ல மாட்டிங்கதான?”
“சொல்ல மாட்டேன்” என்றார் ரொஸாரியோ.
“நீங்களே சொல்லுங்க. எங்கப்பா செத்துப்போய்ட்டாரா?”
ரொஸாரியோ சங்கடமாக நான்சியைப் பார்த்தார்.
“உங்கம்மா என்ன சொன்னாங்க?''
“டாடி அமெரிக்கால இருக்காருன்னு சொன்னாங்க.''
“அதுல உனக்கென்னடா சந்தேகம்?”
“பின்ன ஏன் செந்தில் அப்படிச் சொல்றான்?”
கையில் கேக் கவருடன் வீட்டுக்குள் வந்த அஞ்சலி, “அம்மா சொல்றத நம்ப மாட்டாரு துரை. எவனோ ஒருத்தன் சொல்றத நம்புவாரு. டேய்… வா வீட்டுக்குப் போலாம். எந்திரி'' என்றாள் உத்தரவாக.
“நான் வரல போ.”
“இத பாரு… உனக்கு கேக் வாங்கிட்டு வந்திருக்கேன்.''
“ஒண்ணும் தேவையில்ல.''
“இப்ப நான் அமைதியா இருக்கேன். என் கோபத்தக் கிளறாம வந்துடு.”
“அஞ்சலி… அவன் இங்கதான் இருக்கட்டுமே… அப்பறமா அவனே வருவான்… போ'' என்றாள் நான்சி.
“இதென்ன முரட்டுத்தனம்? இந்த வயசுக்கு இவன் செய்றது ஜாஸ்திம்மா. எதாச்சும் ஒன்ணுன்னா முறுக்கிக்கிட்டு உங்க வீட்ல வந்து உக்காந்துக்கறது! உங்க வீடு இல்லன்னா எங்க போவான்? ரோட்ல போய் நிப்பானா?”
“என்னம்மா இது… நாம அப்படியா பழகிட்டிருக்கோம்? பரணி உரிமையா என்னைத் தாத்தாங்கறான். அவளைப் பாட்டிங்கறான். ஏன் வித்தியாசமா பாக்கறே?” என்றார் ரொஸாரியோ.
“அய்யோ… நான் உங்களை வித்தியாசமா பாக்கலப்பா. அப்படிப் பாத்தா உங்களை அப்பான்னு கூப்புடுவனா? அவங்களை அம்மான்னு கூப்புடுவனா? இவ்வளவு பிடிவாதத்த வளரவிடக் கூடாது. அதுக்காகத்தான் சொல்றேன். இவனுக்குக் கோபம்னா உங்கட்ட வந்துடறான். எனக்குக் கோபம்னா நான் எங்க
போய் நிக்கிறது சொல்லுங்க…” என்றவளின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் முட்டி வழிய… அருகில் வந்து அவளை அணைத்துக்கொண்டாள் நான்சி.
“அம்மா, அப்பான்னு கூப்புடறேன்னு சொல்லிட்டு யாரு இருக்கான்னும் கேக்கறியேம்மா? எங்களுக்குப் பொறந்த புள்ளை ஆஸ்திரேலியால உக்காந்துகிட்டு வீடியோ கால்ல சவுக்கியம் விசாரிக்
குது. நான் இடுப்பு உடைஞ்சி ஆஸ்பத்திரில கிடந்தப்ப பத்து நாளு எங்கூடவே இருந்தியேம்மா…வீட்லேர்ந்து சமையல் செஞ்சி எடுத்துட்டு வந்தியே…இந்தக் காலத்துல சொந்தப் பொண்ணுகிட்டக்கூட எதிர்பார்க்க முடியாது. பரணி சின்னப் பையன்… போகப்போக சரியாகிடும். நீ வீட்டுக்குப் போ. அவன் வருவான்.''
கண்களைத் துடைத்துக்கொண்டு, கேக் கவரை டீப்பாய் மீது வைத்துவிட்டு வெளியே போனாள் அஞ்சலி.
ரொஸாரியோ அந்தக் கவரை எடுத்துப் பிரித்தார்.
“அப்ப இந்தக் கேக் எனக்குத்தான். நான்சி உனக்குக் கொஞ்சம் வேணுமா?” என்றார் ரகசியமாக பரணியைப் பார்த்தபடி.
“தாத்தா!” என்று அதிகாரமாகக் குரல் கொடுத்த பரணி, “அம்மா கேக் வாங்கிட்டு வந்தது எனக்குத்தான்” என்றான்.
“நீதான் வேணாம்னு சொல்லிட்டியே...”
“அது… சும்மா சொன்னேன்… அதுக்காக?” வேகமாக வந்து அவர் கையிலிருந்து கேக்கைப் பிடுங்கி சாப்பிடத் தொடங்கிய அவன் தலையைத் தடவிக்கொடுத்த ரொஸாரியோ, “அம்மாவ அழவைக்கிறது பெரிய பாவம் பரணி” என்றார்.
“பையன அழவைக்கிறது பாவம் இல்லயா?”
“இப்படில்லாம் பேசக் கூடாது.”
“எதுக்கு என்னை அடிச்சாங்க? அது தப்புன்னு சொன்னிங்களா நீங்க? அம்மாவுக்கு என் மேல பாசமே இல்ல தாத்தா…”
“அன்னிக்கு ஒரு டீச்சர் உன்னைப் பத்து நிமிஷம் கிளாசுக்கு வெளில மண்டிபோடச் சொன்னப்ப…ஸ்கூலுக்கு வந்து அந்த டீச்சர்ட்ட சண்ட போட்டாங்களா இல்லியா? பாசம் இல்லாமதான் செஞ்சாங்களா?”
பரணி அமைதியாக கேக் தின்பதில் கவனமாக இருக்க… அவனை அருகில் இழுத்து அணைத்துக்கொண்ட ரொஸாரியோ, “அம்மாவுக்கு உன்ன விட்டா யார்ப்பா இருக்கா கண்ணு? அவங்க திட்னாலும், கோபப்பட்டாலும்… நீதானேப்பா ஒரே உறவு…இதெல்லாம் உனக்குப் புரியாது. ஆனா அம்மா மேல எப்பவும் கோபப்படவே கூடாது. புரிஞ்சுதா? வீட்டுக்குப் போ. நான்சி… கொண்டுபோய் விட்டுட்டு வா.''
“அம்மா சூடு வைக்கிறேன்னு சொன்னாங்க… பயமாருக்கு.”
“அதெல்லாம் சும்மா சொன்னாங்க. செய்ய மாட்டாங்க. நான்சி… நீ அஞ்சலிட்ட அவ மட்டும் பரணிக்கு சூடு வெச்சா அவளுக்கு நான் ரெண்டு சூடு வெப்பேன்னு சொல்லிட்டு வா…”
“எனக்கு வெச்சதுக்கு அப்பறம்தான நீங்க வெப்பிங்க?”
“டேய்! உன்னோட பேச என்னால முடியாது. வீட்டுக்குப் போறதுன்னா போ. இல்லன்னா டிவில கார்ட்டூன் பாரு…போ!''
கொஞ்ச நேரம் டிவியில் கார்ட்டூன் பார்த்த பரணி ரிமோட்டால் அதை அணைத்துவிட்டு எழுந்தான். அவனுடைய ஸ்கூல் பேகை எடுத்துக்கொண்டு, “நான் போறேன்'' என்றான்.
“குட் பாய்'' என்றாள் நான்சி.
“ஹோம் வொர்க் நிறைய இருக்கு. செய்யலன்னா டீச்சர் திட்டுவாங்க. புக்ஸ்லாம் அங்கதான் இருக்கு” என்று முனகியபடியே வெளியே போன அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் நான்சி.
“ஒரு மணி நேரம் இவனைச் சமாளிக்கிறதே போதும் போதும்னு இருக்கே… அஞ்சலி பாவம். வேலைக்கும் போய்க்கிட்டு இருபத்தி நாலு மணி நேரமும் போராடுறா.''
“நான்சி…இதுல யாரக் குத்தம் சொல்றது? என்னதான் விதி விதின்னு ஒண்ணைச் சொல்லிக்கிட்டாலும்… வாழ்க்கையில சரியான சமயத்துல எடுக்கற தப்பான முடிவுகளுக்கான விளைவுகளை அனுபவிச்சிதான் ஆகணும்” என்றவர், ஒலித்த போனைப் பார்த்து, “உன் அருமைப் புள்ள கூப்புடறான்…பேசு” என்றார்.
“ஏன்… அவன் என் புள்ள மட்டும்தானா? இதென்ன புதுசா? நீங்க பேசிட்டுதான எங்கிட்ட குடுப்பிங்க. நீங்களே பேசுங்க” என்றாள் நான்சி.
ரொஸாரியோ போனை ஆன் செய்து வீடியோ திரையில் தெரியும் தன் மகன் அகஸ்டினைப் பார்த்துக் கையசைத்தார்.
“எப்படிப்பா இருக்கே?”
“நல்லா இருக்கேன் டாட். நீங்க?”
“நல்லாருக்கேன்.”
“டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டிங்களா?”
“எதுக்குப்பா?''
“கேடராக்ட் ஆபரேஷன் பண்ணிக்கப் போறிங்கன்னு அம்மா சொன்னாங்களே?”
“இன்னும் இல்ல.”
“எதுக்கு டாட் தள்ளிப்போடறிங்க? கேடராக்ட் ஆபரே
ஷன் ஒண்ணுமே இல்ல. அவுட் பேஷன்ட்டாவே போய் செஞ்சிட்டு ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடலாம்.''
“தெரியும் அகஸ்டின். இங்க குன்னூர்ல ஒரு ஃபிலிம் சொசைட்டில நான் செகரெட்டரியா இருக்கேன். இன்னும் பத்து நாள்ல ஒரு ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஏற்பாடு செஞ்சிருக்கோம். ஒரு வாரத்துல பதினாறு படம் ஸ்க்ரீன் பண்றோம். அதெல்லாம் முடியட்டும்னு பார்க்கறேன்.”
“வேற யாராச்சும் பார்த்துக்க மாட்டாங்களா டாட்? நம்ம கண்ணுதான் நமக்கு முக்கியம். இதை தள்ளிப்போடக் கூடாது.''
“அதுக்கில்லப்பா. அந்தப் படங்களை நான் பார்க்கணும்.”
“வர்ல்ட் ஃபிலிம்ஸ் பார்த்து என்ன பண்ணப் போறிங்க? இத்தனை வயசுக்கப்பறம் டைரக்ட் பண்ணப் போறிங்களா என்ன?”
“அகஸ்டின், உன் பொண்டாட்டி அங்க வயலின் கிளாஸ் போறதா சொன்னியே… அவ என்ன கச்சேரி பண்ணப் போறாளான்னு நான் கேட்டனா? இந்தா… அம்மாட்ட பேசு'' என்று சட்டென்று நான்சியிடம் போனை நீட்டிவிட்டு விலகினார் ரொஸாரியோ.
“அகஸ்டின்…கிளாரா இப்ப நடக்கறாளா?” என்றாள் நான்சி.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு அப்பா இப்படி முணுக்குன்னு கோபப்படறாரு? அக்கறையாதான சொன்னேன்…”
“அவரு கோபப்படலைப்பா. நீ ஒண்ணு சொன்னே. அவர் தன் கருத்தைச் சொன்னாரு. அவ்வளவுதான?”
“இவரு வயசென்ன? மரியா வயசென்ன? ஹெக்டிக்
கான கம்ப்யூட்டர் ஜாப்ல ஒரு ரிலாக்சேஷனுக்காக வயலின் கிளாஸ் போறா. அதை ஏன் குத்திக்காட்டிப் பேசறாரு? வெடுக்குன்னு பாதில கட் பண்ணிட்டுப் போனா…இது கோபம் இல்லாம வேற என்ன?”
தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த ரொஸாரியோ கோபமாக வந்து, “குடு போனை…” என்று வேகமாக வாங்கினார்.
(தொடரும்...)