பேசும் படம் - 46: மாவோவின் மாரத்தான் நீச்சல்!


அரசியலில் தங்களுக்கு எதிராக சலசலப்புகளும் விமர்சனங்களும் வரும்போதெல்லாம், அதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஏதாவது ஒரு ஸ்டன்ட் அடிப்பது தலைவர்களின் வழக்கம். சீனாவின் மிகப்பெரிய தலைவரான மாவோவையும் இந்த அரசியல் ஸ்டன்ட் விட்டுவைக்கவில்லை.

ஆம், தனக்கு எதிராக நண்பர்கள் சிலரே விமர்சனங்களை வைத்த நிலையில், தான் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறேன் என்பதைக் காட்ட,  சீனாவின் யாங்சே (Yangtze)  நதியில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நீந்திச்சென்று மக்களைக் கவர்ந்தார் மாவோ. சீனர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் கவர்ந்த அந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். மாவோவின் தனிப்பட்ட புகைப்படக்காரரான ஹாவ் போ (Hou Bo)  என்ற பெண்மணி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 1893-ம் ஆண்டு மாவோ பிறந்தார். சிறுவயதில் அப்பாவுக்கு உதவியாக விவசாயம் பார்த்துக்கொண்டே  கல்வி கற்றார் மாவோ. படிப்பை முடித்த பிறகு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பின்னர் பெய்ஜிங் நூலகத்தில் நூலகராக சேர்ந்தார்.

இந்தக் காலகட்டத்தில் சீன அரசியலில் மிக முக்கியமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.  சீனாவை ஆண்டுவந்த அரச குடும்பத்துக்கு எதிராக, அந்நாட்டில் புரட்சி ஏற்பட்டது.   இந்தப் புரட்சியால் சீனாவில் அரசாட்சி முற்றிலுமாக அகற்றப்பட்டு, மக்களாட்சி உருவானது. ஆனால், மக்களாட்சியை ஏற்படுத்திய தலைவர்களால் ஒற்றுமையான, சிறந்த அரசைக் கொடுக்க முடியவில்லை. இதனால் நாட்டில் குழப்பமும் உள்நாட்டுப் போரும் ஏற்பட்டது. இதையெல்லாம்   உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் மாவோ. சோஷலிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வந்த அவர், 1921-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் இணைந்து சீன பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார்.

பின்னர் 1931-ம் ஆண்டு, புரட்சிப் படை ஒன்றைத் தொடங்கி மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார் மாவோ. அப்போது சீனாவை ஆண்டுவந்த ஆட்சியாளர்கள், மாவோவுக்கு  பல தொல்லைகளைக் கொடுத்தனர்.  இதைத்தொடர்ந்து தனது புரட்சிப் படையினருடன் மிக நீண்ட நடைப்பயணத்தை மாவோ மேற்கொண்டார். 8 ஆயிரம் கிலோமீட்டர் நீண்ட இந்த நடைப் பயணத்தின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள், தங்களை மாவோவின் புரட்சிப் படையுடன் இணைத்துக்கொண்டனர். இதனால் சீனா முழுவதும் இவரது செல்வாக்கு பரவியது.

1934-ம் ஆண்டு சீன பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அரசுக்கு எதிரான தனது போராட்டங்களை மாவோ மேலும் தீவிரப்படுத்தினார். அவரது போராட்டத்தின் விளைவால் 1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சீனா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. சீனக் குடியரசின் முதல் அதிபரானார்  மாவோ. அதிபராக பதவியேற்ற பிறகு, தனது பல்வேறு திட்டங்களால் சீனாவை வலிமைப்படுத்தியதுடன், மக்களின் வாழ்வையும்  வளப்படுத்தினார்.

எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், 1960-களின் தொடக்கத்தில் சீனாவில் பஞ்சம் ஏற்பட்டது. இயற்கை சீற்றங்களால் இந்தப் பஞ்சம் ஏற்பட்டபோதிலும்  அரசு சரியாக செயல்படாததும் ஒரு காரணம் என்று  மாவோவுடன் இருந்த சிலரே குற்றம்சாட்டினர். தனக்கு எதிராக சலசலப்புகள்  உருவாகி வருவதைத் தெரிந்துகொண்ட மாவோ, தான் இன்னும் வலிமையோடுதான் இருக்கிறேன் என்பதையும், தனது ஆட்சி மேலும் சில காலம் நீடிக்கும் என்பதையும் வெளி உலகுக்குக் காட்ட விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் நீச்சல்.

சீனாவில் கரைபுரண்டு ஓடும் யாங்சே நதியில் (மஞ்சள் ஆறு) ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில், அந்நாட்டு இளைஞர்கள் ஆற்றில் குதித்து நீண்டதூரம் நீந்தி தங்கள் வலிமையைப் பறைசாற்றுவது வழக்கம். நம் நாட்டின் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போல் சீனாவின் வீர மரபாக இது கருதப்படுகிறது. 1966-ம் ஆண்டு, ஜூலை 16-ம் தேதி இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க வந்தார் மாவோ.

அப்போது எதிர்பாராத வகையில் தானும்  ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்கினார். மாவோவின் இந்த திடீர் செயலால் ஒருகணம் திகைத்து நின்ற அவரது பாதுகாவலர்கள், பின்னர் சுதாரித்துக்கொண்டு, தாங்களும் ஆற்றில் இறங்கி மாவோவுடன் நீந்தத் தொடங்கினர். இந்த நீச்சலில் கலந்துகொண்ட இளைஞர்களில் ஒரு பிரிவினர் மாவோவின் பிரம்மாண்டமான பேனருடனும், அவர் 10,000 ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தும் பதாகைகளுடனும் இந்த நீச்சலில் பங்கேற்றனர். ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆற்றில் நீந்திய மாவோ, 15 கிலோமீட்டர் தூரத்தை நீந்திக் கடந்தார். அப்போது அவருக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் அவர் நீண்டநேரம் ஆற்றில் நீந்தியது சீனர்கள் மத்தியில் பேச்சானது. இதில் அவருக்கு எதிரான சலசலப்புகள் காணாமல் போயின.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு 2 நாட்கள் வெளியில் வராத மாவோ, அதன்பிறகு பெய்ஜிங் திரும்பி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சீன அரசியலில் தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

சிறுவயதில் இருந்தே நீச்சலில் ஆர்வம் கொண்டிருந்த மாவோ, முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் நீச்சலில் ஈடுபடுவார் என்று அவருடன் பழகியவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபற்றி மாவோ, “நீந்தும்போது எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

ஹாவ் போ

1924-ம் ஆண்டு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஹாவ் போ. 14 வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவருக்கு சிறுவயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம். 2-வது சீன - ஜப்பானிய போரின்போது கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளைப்  பற்றிய படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக இவர் இக்கலையைப் பயின்றார். 1949-ம் ஆண்டுக்குப் பிறகு ஹாவ் போவும் இவரது கணவர் சூ சியாபிங்கும் மாவோ வசித்துவந்த வீட்டின் வளாகத்திலேயே வசித்து, அவரது தனிப்பட்ட படங்களை எடுத்து வந்தனர். மாவோவின் அதிகாரபூர்வ புகைப்படக்காரராகச் செயல்பட்ட ஹாவ் போ, அவரது வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை படம்பிடித்துள்ளார். இவர் எடுத்த மாவோவின் படங்கள்தான் சீனாவில் போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் வைக்கப் பயன்படுத்தப்பட்டன.

x