கரு.முத்து
muthu.k@kamadenu.in
சொல்லில் அடங்காத சோகம் -
ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறிவிழுந்து நம்மைவிட்டுப் பிரிந்துசென்றுவிட்ட இளம் தளிர் சுஜித்தின் நடுக்காட்டுப்பட்டி கிராமம் முழுவதும் அதுதான் சூழ்ந்திருக்கிறது.
அமைச்சர்கள் முதற்கொண்டு ஒட்டுமொத்த அரசு இயந்திரமே சூழ்ந்திருக்க… குவிந்திருந்த ஊடக வெளிச்சத்தில், ஏதேனும் ஒரு கணத்தில் அந்தக் குழந்தை மீண்டு வந்துவிடுவான் என்று உலகமே காத்திருக்க… பல கட்ட முயற்சிகளும் பலனளிக்காமல் மண்ணோடு கலந்துவிட்டான் சுஜித். “அம்மா இருக்கேன்… கவலைப்படாத சாமி” என்று மனம் பதறக் காத்திருந்த அவனது தாய் கலாமேரி மீண்டெழ முடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார். சுட்டித்தனமும் பொறுப்பும் நிறைந்த குழந்தையை இழந்துவிட்ட அந்தக் குடும்பமே இப்போது குற்றுயிராய் கிடக்கிறது.