நீது
readers@kamadenu.in
செல்போனில் எடுத்த படங்களா இது என்று வியக்கவைக்கின்றன அந்த ஒளிப்படங்கள். சிற்றினங்களின் இரைதேடல் முதல், நுட்பமான இயற்கைக் காட்சிகள், சூழல்கேடுகளால் கபளீகரம் ஆகும் இயற்கை வரை துல்லியமும் அழகியலும் நிறைந்த இந்தப் படங்களைத் தனது செல்போனில் எடுத்தவர் பிலிஸ்த்து.
பிலிஸ்த்து இயல்பிலேயே ஒரு சமூகப் போராளி. ஆனால், சமீபகாலமாக எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க முடியாத அளவுக்கு வாழ்க்கை நெருக்கடிகள் இவரை வாட்டியெடுத்துவிட்டன.
“குமரி மாவட்டம் திற்பரப்பு பக்கத்துல திருவரம்பு என்னோட சொந்த ஊரு. எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போது அப்பா இறந்துட்டார். எனக்கு நாலு அக்கா. அப்பா இறக்கும்போது மூத்த அக்காவுக்குக் கல்யாண வயசு. அப்பாவோட எல்ஐசி பணத்தை வச்சுதான் அக்கா கல்யாணத்தை நடத்தினோம். அம்மா ரீத்தம்மாள் வீடு வீடா மீன் வித்துத்தான் எங்களை வளர்த்தாங்க. இதையெல்லாம் பார்த்துட்டுப் படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்.