விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டம் - 2019 என்ற சட்டத்தை இயற்றியுள்ளது தமிழக அரசு. இந்தியாவுக்கே முன்னோடியான இந்தச் சட்டத்தின் மூலம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படும் என்கிறது அரசு.
ஆனால், இந்தச் சட்டத்தால் பாதிப்புகளே அதிகம் என்று விவசாய சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. இந்தச் சட்டத்தின்படி, வேளாண் விளை பொருட்களுக்கான விலை தொடர்பான ஒப்பந்தத்தை அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகளும் தனியார் நிறுவனங்களும் பேசி முடிவுசெய்வார்கள்; விலை நிர்ணயத்தில் ஏதேனும் சிக்கல்கள் வரும்பட்சத்தில்தான் அதிகாரிகள் தலையிடுவார்கள். இது விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தும் என்று விவசாயிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும், விலை நிர்ணய விஷயத்தில், தனியார் நிறுவனங்கள் லாபம் பார்ப்பதற்கே இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்றும், வேளாண் உற்பத்தி, இடுபொருள், பூச்சிக்கொல்லி என்று எல்லா விஷயங்களையும் இனி தனியார் நிறுவனங்களே முடிவுசெய்யும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விவசாயக் கடன், மானியம் போன்ற பொறுப்புகளிலிருந்தும் அரசு விலகிக்கொள்ளும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
அரசு என்பது சேவை அடிப்படையில் செயல்படும் அமைப்பு. ஆனால், தனியார் நிறுவனங்கள் அப்படி அல்ல. லாபம்தான் அவற்றின் ஒரே குறிக்கோள். இந்நிலையில், வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு விலகி, அந்த இடத்துக்குத் தனியார் நிறுவனங்கள் வருவது நல்லதல்ல. ஏற்கெனவே, தண்ணீர்ப் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றங்கள் என்று அல்லல்பட்டுவரும் தமிழக விவசாயிகள், அரசின் புதிய சட்டத்தால் மேலும் அவலங்களைச் சந்திக்கும் நிலை வந்துவிடக் கூடாது!