முதுமை எனும் பூங்காற்று 5


நமது கலாச்சாரத்தில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல, இரு குடும்பங்களின் சங்கமமும்கூட. இங்கு திருமணம் என்பது செலவு பிடிக்கும் வைபவமாகவும் இருக்கிறது. பெரும்பாலானோர், தாங்கள் பணியில் இருக்கும்போதே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்வது அதனால்தான். துரதிருஷ்டவசமாகப் பல குடும்பங்கள் கடன்பட்டு சிக்கலில் தவிப்பதற்கும் திருமணம் வழிசெய்கிறது. கடன் வாங்காமல் தங்கள் சொந்தப் பணத்தில் செலவு செய்பவர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலானோருக்குத் திருமண ஏற்பாடு என்பது ஒரு திகில் கனவாகவே இருக்கிறது.

நம் இந்தியச் சமூகத்தில், பிள்ளைகளின் திருமண விஷயத்தில் பெற்றோருக்கு பெரும் பொறுப்பு உண்டு. பல விஷயங்களை அலசித்தான் திருமணம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த முடிவுகள் சில சமயம் தவறாகிவிடுவதும் உண்டு.

திருமண முடிவுகள்

பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்க்கும்போது பெற்றோர் பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறார்கள். ‘கொஞ்சம் பெரிய இடமாக இருந்தாலும் பரவாயில்லை. கடன் வாங்கியாவது கல்யாணம் பண்ணிவைக்கலாம்’ என்று நினைப்பவர்கள் பலர். இங்கு ஆரம்பித்து சீர்வரிசை, மண்டபம், கல்யாணச் சாப்பாடு என்று கையை மீறிச் செலவு செய்ய வேண்டிய சூழலுக்குத் தங்களைத் தாங்களே நிர்பந்தித்துக்கொள்கிறார்கள். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண் வீட்டார்தான். ஒப்புக்கொண்ட விஷயங்களைச் செய்யாமல் விட்டால், புகுந்தவீட்டில் நம் பெண் கஷ்டப்படுவாளே என்று அஞ்சும் பலர், கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பிறர் அசந்துபோகும் அளவுக்குத் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைப்பவர்களும் சக்திக்கு மீறி செலவு செய்து சங்கடத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். நம் பெண், நம் வீட்டில் இருந்ததைவிட செல்லும் இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் எனும் பெற்றோரின் அக்கறை, ஒரு கட்டத்தில் அவஸ்தைக்குள் தள்ளிவிட்டுவிடுகிறது.

யார் மேல் குற்றம்?

தங்கள் பையனுக்கு வரன் பார்க்கும் பலர், வசதி குறைவான வீட்டில் பெண் எடுப்பதே தங்களுக்கு வசதி என்று நினைக்கிறார்கள். பொருளாதார ரீதியாகத் தங்களைவிட, கீழான இடத்தில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால், திருமணத்திற்குப் பின் அனுசரித்து நடந்துகொள்வாள் என்பது அவர்களது எண்ணம். அதில் சில சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

எனக்குத் தெரிந்த ஒரு பணக்காரர் இப்படித்தான் முடிவெடுத்தார். ஆனால், விளைவுகள் வேறு விதமாக இருந்தன. “பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படும் வீட்டுப் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்துவைத்தேன். ஆனால், இன்றைக்கு அவள் என் பையனை எங்களிடமிருந்து பிரித்துத் தனிக்குடித்தனம் சென்றுவிட்டாள்” என்று சொல்லி வேதனைப்பட்டார். ஒருநாள் அவருடைய மருமகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பெண் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி தந்தன.

திருமணமான புதிதிலிருந்தே சாப்பிடும் உணவு முதல் உடுத்தும் உடை வரை பல விஷயங்களில் கிண்டல்களை அப்பெண் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. தன்னுடைய பிறந்தவீட்டின் நிலைமையுடன் ஒப்பிட்டே தான் கேலி செய்யப்பட்டதாக அப்பெண் சொன்னாள். “உன் வீட்டில் இப்படி எல்லாம் சாப்பிட்டிருக்க மாட்டாய்”. “இவ்வளவு நல்ல உடையை இதற்கு முன்னர் அணிந்திருக்கிறாயா?” என்றெல்லாம் மனம் புண்படும்படியான வார்த்தைகளை மாப்பிள்ளை வீட்டார் சொல்லியிருக்கிறார்கள்.
“அதற்காக 70 வயதைத் தாண்டிய பெரியவர்களை மகனிடமிருந்து பிரித்தது தவறல்லவா?” என்றபோது அவர் சொன்ன பதில் மேலும் அதிரவைத்தது. அந்தப் பெண், கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் நன்கு படித்து, ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். வருமான வரிச் சலுகைக்காகச் சொந்த ஊரில் குறைந்த விலையில் தன் பெயரில் ஒரு வீடு வாங்கி அதில் தன் பெற்றோரைக் குடியமர்த்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாமனார், சொந்த பந்தங்கள் முன்னிலையில் அப்பெண்ணின் தந்தையை அவமானப்படுத்தி அந்த வீட்டிலிருந்து காலி செய்ய வைத்துவிட்டார். இதனால், மனமுடைந்துபோன அந்தப் பெண் வேறு வழியின்றி, தன் கணவருடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டாள். இதில் குற்றம் யார் மீது?

இது ஒருபுறம் என்றால், வரதட்சணை எனும் பேரில் நடக்கும் அக்கிரமங்கள் மறுபுறம். அதிக சீர்வரிசையோடு ஒரு பெண் வந்தால் அது கிட்டத்தட்ட அந்தப் பையனை விலைக்கு வாங்குவதுபோல தானே? வரதட்சணையைக் கறாராகக் கேட்டு வாங்கிய பின்னர் எப்படிப் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் மேல் மரியாதை வரும்?

திருமணத்தில் உறவுகள்தான் கலக்க வேண்டுமே தவிர பணமல்ல. நம் சக்திக்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல் வரன் பார்த்தால் எந்தச் சிக்கலும் இல்லை. பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பெருந்தன்மையுடன் நடந்துகொண்டால் பிரச்சினைக்கு வாய்ப்பே இல்லை.

ஓய்வு காலம் வரை பிள்ளைகளுக்குத் திருமணம் அமையவில்லையே என கவலைப்படாதீர்கள். திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். நல்லோர் சூழ் உலகில் உங்கள் பிள்ளைகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்.

மாற்றம் ஏற்றமே

கொஞ்சம் வசதி இருப்பவர்களுக்குத்தான் அதிகம் கொஞ்சம் என்றெல்லாம் கவலை. அடித்தட்டு மக்களுக்கு இந்த அளவுக்குக் கஷ்டம் இருப்பதில்லை. தங்களிடம் எதுவும் இல்லை எனும் உணர்வே அவர்களை வழிநடத்துகிறது. மஞ்சள் கயிறு, நூல் புடவை, கோயிலில் உறவினர்கள் மத்தியில் திருமணம், அருகில் உள்ள சிறிய ஹோட்டலில் சாப்பாடு என எளிமையாக முடிந்துவிடுகிற இவர்களின் திருமண வாழ்க்கை கெட்டுப்போவதில்லை. ஆம், சந்தோஷம் என்பது மனதால் வருவது, பணத்தால் அல்ல.

இவ்விஷயத்தில், இன்றைக்குப் பலரிடம் மனமாற்றம் வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. திருமணத்துக்காகக் குடும்பமே கடனாளியாக வேண்டுமா எனும் புரிதலுடன் பலர் எளிமையான திருமணத்தின் பக்கம் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். பையனுக்கு வரன் கிடைக்காதது, செலவை இரு குடும்பமும் சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்பது என்பன போன்ற காரணிகள் இந்த மாற்றத்துக்கு வித்திட்டிருக்கின்றன.

ஒருநாள் சாப்பாட்டிற்காக நம் வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டை நினைத்து வருந்தும் அளவிற்கு நம் வாழ்வு அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களிடம்தான் உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்; சந்ததி தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருமணம் செய்துவைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்த உயர்ந்த நோக்கம் இறுதிவரை தொடர வேண்டும்.

இரு வீட்டாரும் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்துகொண்டால் மனஸ்தாபங்கள் எழாது. முன்னேறிவரும் இன்றைய சமூகத்தில் வரதட்சணை விஷயத்தில் நாம் இன்னும் முற்போக்கான முடிவுகளை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. அது பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு தரும்.

நம் சந்தோஷம் நம் எண்ணத்தால், நம் செயலால்தான் ஏற்படுகிறது என்று உணர்வோம். ஆடம்பரம் தவிர்த்தால் ஆனந்தமாக வாழலாம்.

(காற்று வீசும்...)

x