அமெரிக்காவுக்கு செப்டம்பர் 11 எப்படியோ, அப்படித்தான் இந்தியாவுக்கு நவம்பர் 26. அன்றைய தினம் பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்த தீவிரவாதிகள், இந்தியாவின் நிதி மற்றும் பொழுதுபோக்கு தலைநகராக விளங்கும் மும்பை நகரை குறிவைத்து 60 மணிநேரத்துக்கும் மேல் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 166 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலின் முக்கியப் புள்ளியாக இருந்த அஜ்மல் கசாப்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள். இதை எடுத்தவர் மும்பை மிரர் பத்திரிகையின் போட்டோ எடிட்டரான சபாஸ்டியன் டிசோசா (Sebastian D'Souza). இந்தப் படத்தை மட்டும் அன்றைய தினம் சபாஸ்டின் டிசோசா எடுக்காவிட்டால், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்றது கசாப்தான் என்பதற்கு போதுமான சாட்சி இருந்திருக்காது.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கசாப்பை படம் எடுத்த அனுபவத்தைப் பற்றி திகிலுடன் விவரித்துள்ளார் சபாஸ்டியன்...
“அன்று இரவு பணியை முடித்துவிட்டு எங்கள் அலுவ லகத்தில் இருந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்ல தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்து, தாஜ் ஹோட்டல், மும்பை ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக கூறினார்.
அடுத்த கணமே அங்கிருந்த மற்ற புகைப்படக்காரர்கள் தாஜ் ஹோட்டலை நோக்கிப் பறந்தனர். அந்த நேரத்தில்தான் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து குண்டு வெடிக்கும் ஓசை கேட்டது. எங்கள் அலுவலகத்தின் நேர் எதிரில்தான் அந்த ரயில் நிலையம் என்பதால் உடனே அங்கு விரைந்தேன். வழக்கமாகச் செல்லும் பெரிய வாயில் வழியாகச் செல்லாமல் சிறிய வாயில் வழியாக நான் உள்ளே நுழைந்தேன்.
துப்பாக்கியால் சுடும் ஓசை கேட்டுக்கொண்டு இருந்தது. சிறிது தூரத்தில் ஒன்றிரண்டு போலீஸார், ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்றார்கள். அவர்களிடம் சென்ற நான், அவர்கள் பார்க்கும் திசையில் பார்த்தேன். அங்கே தூரத்தில் 2 பேர் சுற்றுலாப் பயணிகளைப் போல பைகளை மாட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். கூர்ந்து கவனித்தபோதுதான், அவர்களின் கைகளில் இயந்திரத் துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.
தங்கள் கையில் இருந்த துப்பாக்கியால் பார்ப்பவர் களை எல்லாம் படபடவென்று அவர்கள் சுட்டுக் கொண்டே இருந்தார்கள். பதறிய நான், அங்கிருந்த போலீஸாரிடம், ‘அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று கத்தினேன். இதைத்தொடர்ந்து கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டதும், அந்த தீவிரவாதிகள் திருப்பிச் சுடத் தொடங்கினார்கள். அப்போது நான் படமெடுக்கத் தொடங்கினேன். நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அங்கிருந்த புத்தகக் கடைக்காரரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளில் ஒருவன், தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருந்தான்.
அப்போது அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல், வயதான கிராமத்துப் பெண்மணி ஒருவர் தீவிரவாதிகளுக்கு எதிரே நடந்து சென்றார். அந்தப் பெண்மணி தான் தீவிரவாதிகளின் அடுத்த இலக்காக இருக்கும் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் அந்தப் பெண்மணியை எதுவும் செய்யவில்லை. அப்போது நான் தீவிரவாதியை துல்லியமாக படம் எடுப்பதற்காக அங்கிருந்த ஒரு ரயிலின் முதல் பெட்டிக்குள் நுழைந்தேன்.
சற்று தூரத்தில் தீவிரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப் குண்டு மழையைப் பொழிந்துகொண்டு இருந்தான். நான் இருந்த இடத்தில் இருந்து அவனைத் துல்லியமாக ஃபோகஸ் செய்ய முடியவில்லை. அதனால் மெல்ல நகர்ந்து ரயிலில் இருந்து கீழே இறங்கி, அடுத்த பெட்டியில் ஏறினேன். அங்கிருந்தவாறே கசாப்பை படம் எடுத்தேன். என் கண்முன்னால் தெரிந்த போலீஸ்காரர்களிடம் தீவிரவாதிகளைச் சுடுமாறு சைகை காட்டினேன். ஆனால், அவர்கள் சுடவில்லை. மாறாக தீவிரவாதிகள், தாங்களாகவே ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் நேரத்துக்காகக் காத்திருந்தார்கள்.
இதைப் பார்த்து எனக்கு கோபம் வந்தது. என்னிடம் மட்டும் அப்போது துப்பாக்கி இருந்திருந்தால் தீவிரவாதிகளை நிச்சயமாக சுட்டுக் கொன்றிருப்பேன். இருப்பினும் என்னால் முடிந்தவரை, அவர்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.
குண்டுகள் தீர்ந்து போனதும், தீவிரவாதிகள் மீண்டும் குண்டுகளை நிரப்பினர். பின்னர் நான் இருந்த இடம் நோக்கி நகர்ந்தனர். ‘நம் வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று நினைத்துகொண்டேன். மூச்சை அடக்கியவாறு நான் இருந்த ரயில் பெட்டிக்குள் ஒளிந்துகொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதிகள் மெதுவாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர்.
அன்றைய தினம் என் கண்ணெதிரிலேயே கசாப் பலரைக் கொன்றும் என்னால் ஏதும் செய்ய முடியாததை நினைத்து வருத்தமாய் இருந்தது. ஆனால், அன்றைய தினம் நான் எடுத்த படங்கள், அவனுக்கு மரணதண்டனை கிடைக்க காரணமாய் இருந்ததை நினைத்தபோது அந்த வருத்தம் காணாமல் போனது” தனது பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார் சபாஸ்டியன் டிசோசா.
உயிரைத் துச்சமாக மதித்து அன்றைய தினம் இவர் எடுத்த படங்கள்தான் பின்னாளில் கசாப் மற்றும் பாகிஸ்தானின் உண்மை நிறத்தை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்ட உதவியாக இருந்தது.
சபாஸ்டியன் டிசோசா
பத்திரிகையில் பக்க வடிவமைப் பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சபாஸ்டியன் டிசோசா, பின்னர் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் கொண்டு அதில் நிபுணரானார். 1992 - 93-ல் நடந்த மும்பை கலவரம், குஜராத் கலவரம், மும்பை வெடிகுண்டு தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்களைப் படம் எடுத்துள்ளார். மும்பை மிரர் பத்திரிகையின் தலைமை புகைப்படக்காரராக இருந்த இவர், கசாப்பை படம் எடுத்ததற்காக வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றார். மும்பை மிரர் பத்திரிகையில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவாவில் தங்கியுள்ளார்.