கோட்டைவிட்ட திமுக... கொத்தாக அள்ளிய அதிமுக!


குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

தங்கள் கைவசம் இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை கண்முன்னே கோட்டைவிட்டிருக்கிறது திமுக கூட்டணி. ஆம், திமுகவின் இடைத்தேர்தல் களப்பணியையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு அரசியல் பார்வையாளர்கள் இப்படித்தான் கருத்துச் சொல்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் களமானது அதிமுகவைப் பொறுத்தவரை வாழ்வா வீழ்வா போராட்டமாகத்தான் இருந்தது. அதை உணர்ந்து வெற்றிக் கனியை தட்டிப் பறிப்பதற்கான அத்தனை உத்திகளையும் அந்தக் கட்சி கையாண்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 இடங்களை ஒதுக்கியது அதிமுக. அங்கேயே அதிமுகவின் ராஜதந்திர நடவடிக்கை தொடங்கிவிட்டது. ஏழு தொகுதிகளைத் தந்து பாமகவை தங்களது கூட்டணிக்குள் இழுத்துப்போடுவதன் மூலம் இடைத்தேர்தல் தொகுதிகளில் பாமகவின் வாக்கு வங்கியை தங்களுக்குச் சாதகமாக திருப்ப நினைத்தது அதிமுக. அதில் வெற்றியும் கண்டது. அதேசமயம், “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய பாமகவுக்கு ஒப்பந்தப்படி ராஜ்ய சபா சீட்டை கொடுக்கத்தான் வேண்டுமா?” என்ற கேள்விகள் கட்சிக்குள் எழுந்தபோதும், பேசியபடி பாமகவுக்கு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுத்தார் எடப்பாடியார். அன்றைக்கு பாமகவுக்கு ராஜ்யசபா சீட்டை விட்டுத்தராமல் விட்டிருந்தால் விக்கிரவாண்டியில் இப்போது அதிமுகவின் வெற்றியே கேள்விக்குறியாகி இருக்கலாம்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே தனது வழக்கமான பாணியிலான ரெடிமேட் பிரச்சாரத்தை முன்னெடுத்தார் ஸ்டாலின். டீக்கடைகளில் உட்கார்ந்து டீ குடித்தார். பெண்கள் மத்தியில் கேட்வாக் எல்லாம் நடத்தினார். செல்போனுடன் யார் வந்தாலும் அவர்களோடு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். தந்தை எவ்வழி சென்றாரோ அவ்வழியே தனயன் உதயநிதியும் பிரச்சாரம் போனார் . அவரை குளிர்விக்க தேர்தல் காரியாலயங்களில் ஸ்டாலினுக்கு அடுத்த சைஸில் உதயநிதியின் படத்தைப் பெரிதாக வைக்க வேண்டும் என அறிவாலயத்திலிருந்து ஆணைகள் பறந்தன.

x