வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
மஹாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருக்கிறது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370-வது சட்டக்கூறு நீக்கம், என்.ஆர்.சி பட்டியல் என்பன போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்குப் பின் நடக்கும் தேர்தல்கள் என்பதால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தத் தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
இரண்டுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.
எனினும், பாஜகவுக்கு இரு மாநிலங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துவிடவில்லை. ஆனாலும், இரண்டிலும் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பு அக்கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. மறுபக்கம், சோர்ந்துகிடந்த எதிர்க்கட்சி முகாமுக்குச் சற்றே தெம்பூட்டும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.