கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இடதுசாரிகளின் பணி மேலும் மேலும் தேவைப்படுகிற இந்தக் காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணையுமா எனும் கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான இடதுசாரிகளின் பார்வை குறித்தும் விமர்சனங்கள் இருக்கின்றன. இதுபோன்ற கேள்விகளுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி பேராசிரியர் அருணனுடன் உரையாடியதிலிருந்து…
நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில்கூட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லையே?
ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதும், அந்த வெற்றியானது உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியைப் பரவச் செய்வதற்கான உந்துசக்தியாக இருந்தது. 1920 அக்டோபர் 17-ல், அன்றைய ரஷ்யாவின் தாஷ்கன்ட் நகரில் இருந்த எம்.என்.ராய் உள்ளிட்ட இந்தியர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார்கள். இப்படி வெளிநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கிளையை எப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் என்று சொல்லலாம் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், 1920 முதலே இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன.