கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
கூரிய நகங்கள், மினுக்கத்துடன் போர்த்திய கடினத் தோல், ஊர்ந்து வரும் அழகு, நிமிர்ந்து பார்க்கும் கம்பீரத் தோற்றம் என்று அற்புதமான கோணங்களில் உடும்பைப் படம் பிடித்து வந்திருக்கிறார் கோவை வடவள்ளி சுப்பிரமணியன். கீரிப்பிள்ளையின் அபூர்வப் படங்களை எடுத்து ‘காமதேனு’ வாசகர்களுக்கு அறிமுகமான இவர், இந்த முறை ஈசலை வேட்டையாடும் உடும்பின் அட்ட
காசமான புகைப்படங்களை எடுத்து வந்திருக்கிறார். அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
“சமீபத்துல, வன உயிர்களைப் புகைப்படம் எடுக்க மருதமலைக்குப் போயிருந்தேன். அன்னைக்கு எந்த உயிரினமும் கண்ல படல. சோர்ந்துபோய் திரும்பி வந்துட்டு இருந்தேன். அப்போதான் அந்த மலைப்பாதையோட நாலாவது வளைவோட இடது புற வேலியிலிருந்து வந்துச்சு அந்த உடும்பு. அங்கேயே ஊர்ந்துக்கிட்டு இருந்த அந்த உடும்பு, மழைக்குப் பொந்துல இருந்து குவியல் குவியலா வந்திருந்த ஈசல்களை வேட்டையாடி சாப்பிட்டுட்டு இருந்துச்சு. எந்த உயிரினத்தையும் அதோட இயல்பு மாறாம புகைப்படம் எடுக்கணும்னா அதைத் தொந்தரவு செய்யக் கூடாது. அதனால, சத்தமில்லாம சாலையிலேயே உட்கார்ந்துட்டேன்.
இவன் நம்மளைத் தொந்தரவு செய்யமாட்டான்னு உடும்புக்கும் புரிஞ்சுடுச்சு போல. ரெண்டு படம் எடுத்துட்டேன். ஒரு நிமிஷ வீடியோவும் எடுத்துட்டேன். அதுக்குள்ளே ஒரு ஆள் வந்து உடும்பு மேல கல்லைத் தூக்கி எறிஞ்சுட்டான். அது பயந்து புதருக்குள்ளே ஓடி மறைஞ்சுடுச்சு. அப்போ ஒரு கார் வந்துட்டிருந்தது. அதுல சிக்கியிருக்கும், நல்லவேளை அப்படி ஒண்ணும் ஆகலை. மனுசன் மட்டும் எத்தனை பாடம் எடுத்தாலும் திருந்தவே மாட்டான்” என்று ஆதங்கப்படுகிறார் வடவள்ளி சுப்பிரமணியன்.