கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
மேஜை, அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கோவையைச் சேர்ந்த ஏ.ஆர்.கே. அருண், காணுமிடமெல்லாம் கற்களை வைத்துப் பாதுகாக்கிறார். 10 கிராம் முதல் முதல் 15 கிலோ வரை எடை கொண்ட கற்களை சேகரித்து அடுக்கி வெல்வெட் துணி போர்த்திப் பொக்கிஷமாய் பேணுகிறார்.
ஏ.ஆர்.கே.அருணை, ‘கல்லு அருண்’ என்றே அழைக்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். “இப்போது என்னிடம் இருக்கும் கற்கள் மிகக் குறைவு.
40 வருடங்களாகச் சேகரித்து வைத்திருந்த கற்களை இரண்டு வருடங்களுக்கு முன்புதான் வைக்க இடமில்லாமல் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வுக்காகக் கொடுத்தேன்” என்று சொல்லும் அருண், புவியியலோ, நிலவியலோ படித்தவர் அல்ல. பி.காம்., வணிகவியல் படித்தவர். ஆனால், இவர் சேகரித்துவைத்திருக்கும் கற்கள் எல்லாம் ஃபாசில்கள் எனப்படும் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் எச்சங்கள்.