3,500 ரூபாய் முதலீடு... இன்று 300 பேருக்கு வேலை!: ‘பலகாரம் முத்துக்குமார்’ வளர்ந்த கதை


என்.பாரதி

தீபாவளி நாளில் பலகாரப் பரிமாற்றம் என்பது நம் கலாச்சாரத்தில் ஓர் அங்கமாகிவிட்டது. இன்றைய அவசர யுகத்தில் வீட்டில் பலகாரம் தயாரிப்பதைவிட, கடைகளில் வாங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் கேரளத்திலிருந்து விதவிதமான பலகாரங்களைத் தயாரித்து பல மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் முத்துக்குமார். இவர் ஒரு தமிழர் என்பது கூடுதல் தகவல்!

திருவனந்தபுரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கொச்சுவேலி. அங்குதான் இருக்கிறது முத்துக்குமாரின் பலகாரத் தொழிற்கூடம். தமிழகத்தின், பணக்குடியை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த இவர், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சைக்கிளில் போய் கடை, கடையாகப் பலகாரம் விற்றவர். இன்றைக்கு இவரது நிறுவனத்தில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள். இவரது இந்த வளர்ச்சிக்கெல்லாம் அடித்தளமிட்டது ‘தீபாவளி’ பண்டிகைதான்.

தமிழகத்துக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்த பலகாரங்களை மேற்பார்வை செய்துகொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார் முத்துக்குமார். “எங்கப்பா மணி நாடார் விவசாயி. குடும்பச் சூழல் காரணமா நான் பத்தாம் கிளாஸ்க்கு மேல படிக்கல. அந்தக் காலத்துல எங்க வீட்ல, தீபாவளி அன்னைக்குத்தான் பலகாரத்தைப் பார்க்க முடியும். அதிகாலையில இருந்து அம்மா பலகாரம் செஞ்சு தருவாங்க. அப்பா தோட்டத்துல உளுந்து போட்டிருந்ததால உளுந்த வடையும் செய்வாங்க. அதையெல்லாம் பார்த்து வளர்ந்ததால, சின்ன வயசுல இருந்தே பலகாரம்னா எனக்கு உயிர். ‘இவன் பலகாரத்துக்காகக் கேரளா கூப்பிட்டாகூட போய்டுவான்’னு அப்பா வேடிக்கையா சொல்வார். அது நிஜமாவே நடந்துருச்சு” என்று சிரிக்கும் முத்துக்குமார், தான் கேரள தேசம் வந்து வென்ற கதையை விவரிக்கிறார்.

x