வந்தார் போனார் பொன்னார்
இடைத் தேர்தல் பணிகளில் பாஜகவுக்கு அதிமுக உரிய மரியாதையை அளிக்கவில்லை என முன்பு சர்ச்சையைக் கிளப்பினார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கமலாலயம் சென்ற அதிமுகவினர், தேர்தல் பணிகளில் இணைந்து பணியாற்றுமாறு பாஜகவினருக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து தனது கருத்தை மாற்றிக் கொண்டார் பொன்னார். ஆனால், அதன் பிறகும் அதிமுகவினர் பாஜகவுடன் தாமரை இலை தண்ணீர் போலவே நிற்கிறார்கள். கடந்த 14-ம் தேதி நாங்குநேரி அதிமுக தேர்தல் காரியாலயத்தில் பொன்னார் செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் சொல்லப்பட்டது. இந்தக் தகவல் வெளியான சற்று நேரத்தில் காரியாலயத்தில் இருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக தலைகள் அங்கிருந்து எஸ்ஸாகி விட்டார்கள். இது தெரியாமல் அங்கு வந்த பொன்னார் காத்து வாங்கும் காரியாலத்தைப் பார்த்துவிட்டு அப்செட். இருந்தாலும் வேதனையை வெளியில் சொல்லமுடியாமல் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லிவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சசிகலா நம்பர் ஒன் ப்ரிசனர் இல்லை!
ஊழல் வழக்கின் தண்டனைக்காக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் சரணடைந்தபோது சுதாகரன் மட்டுமே வருமானவரி கட்டும் இந்திய பிரஜை என்பதற்கான ஆவணங்களை சிறை நிர்வாகத்தில் சமர்ப்பித்தாராம். இதனால், அவருக்கு மட்டும் ‘நம்பர் ஒன் ப்ரிசனர்’ சலுகை அளிக்கப்பட்டதாம். நம்பர் ஒன் ப்ரிசனராக இருப்பவர்களுக்கு சிறையில் பிரத்யேக வசதிகளை அனுமதிக்கிறதாம் கர்நாடக சிறை விதி. அப்படி இருந்தும் இன்னமும் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் வருமான வரி தாக்கல் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து அவர்களுக்கு நம்பர் ஒன் ப்ரிசனருக்கான சலுகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருக்கிறார்களாம். ஏன் என்று கேட்டால், “சித்தி சித்தின்னு சுத்திச் சுத்தி வந்துட்டுப் போறவரைத்தான் கேட்கணும்” என்கிறது சசிகலா தரப்பு.