போர்முனை டு தெருமுனை - 9: எந்திரயான்


போர்க்களங்களில் பயன்படும் அளவில் பெரிய எந்திரர்களோடு, சிறிய ராணுவ எந்திரர்களும் இந்தியாவில் உண்டு. சுவரில் ஏறி வேவு பார்க்கும் ரோபோ, தூக்கி எறிந்தால் விழுந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு உளவு பார்க்கும் ரோபோ, நிஜப் பாம்பைப் போலவே வளைந்து நெளிந்து சென்று கேமரா கண்களால் படமெடுக்கும் ரோபோ என சுவாரசியமான பல எந்திரர்களை நம் ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கி யிருக்கிறார்கள்.

ஒற்றயடிப் பாதை எந்திரன்

ரயில் பெட்டியில் வெடிபொருட்களைச் சோதனையிட்டு செயலிழக்கச் செய்ய ஒரு எந்திரன் உண்டு. இந்த எந்திரனை ரயில் பெட்டியின் குறுகிய நடைபாதைகளில் பயணிக்கவைத்து படுக்கையிலிருக்கும் சந்தேகத்துக்குரிய பொருட்களை எக்ஸ் அலைகளை வீசி சோதனை செய்யலாம். விமானத்திலும் இருக்கைகளுக்கு இடைபட்ட குறுகிய பாதையில் நகர்த்தி பயணிகளின் உடமைகளைப் பரிசோதிக்கலாம். 2 மீட்டர் வரை நீளும் எந்திரக்கைகளால் வெடிபொருட்களைப் பற்றி வெளியே எடுத்து, பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லலாம். அவசரமெனில், அதிவேக நீர்த்தாரையைச் செலுத்தி வெடிபொருளைச் செயலிழக்கவும் செய்வான் இந்த எந்திரன். ஒற்றையடிப் பாதை எந்திரனை (Confined Space Remotely Operated Vehicle-CSROV) 200 மீட்டர் தூரத்திலிருந்து கட்டுப்படுத்தலாம். மின்கலனில் இந்த எந்திரன் தொடர்ந்து 2 மணி நேரம் வரை வேலை செய்வான். பூனேயிலுள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகத்து விஞ்ஞானிகளின் தயாரிப்பு இது.

முதுகுப்பை எந்திரன்

முதுகுப்பையில் சுமந்து செல்லத்தக்க எந்திரனும் உண்டு. கட்டிடங்களில் படியேறிச் சென்று உள்நிலவரங்களை உடனடியாக வீடியோ காட்சிகளாகத் தருவான் இந்த முதுகுப்பை எந்திரன். இதன் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் கேமராக்கள் உண்டு. இருட்டிலும் இயங்கும் இந்த கேமராக்களைத் தூரத்திலிருந்தபடி திசைதிருப்பவும் முடியும். இலக்கைத் துல்லியமாகச் சுட்டிக்காட்ட இரண்டு லேசர் கதிர்வீச்சுக் கருவிகளும் உண்டு. அப்படிச் சுட்டிக்காட்டப்படும் வெடிபொருள் மீது நீர்த்தாரையைச் செலுத்தி செயலிழக்கச்செய்யும் கூடுதல் வேலையையும் செய்வான் இந்த எந்திரன். எஸ்.ஆர்.ஓ.வி என்பது இதன் தொழில்நுட்பப் பெயர் (Surveillance Remotely Operated Vehicle -SROV)

எறி எந்திரன்

சக்கரங்களால் கடக்க முடியாத பகுதிகளில் எப்படி எந்திரர்களைக் கொண்டுசெல்வது? பேப்பர் பையன் காலையில் செய்தித்தாளை முதல் மாடிக்குத் தூக்கியெறிவது போல் எந்திரனைத் தூக்கியெறிய முடிந்தால் வசதியாக இருக்குமே. 

ஆமாம். இப்படி எதிரியின் வளாகத்துக்குள் சுவரைத் தாண்டி வீசியெறிந்து உளவு பார்க்கும் எறி எந்திரர்களையும் (Throw Bots) உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். விழுந்தாலும் உடையாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் எறி எந்திரன், உடனடியாகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வீடியோ காட்சிகளைத் தருவான்.

உப்பு மூட்டை எந்திர ஜோடி

சிறுவயதில் நீங்கள் உப்பு மூட்டை விளையாடியிருக்கலாம். ஒருவரின் முதுகில் ஏறி சிறிது தூரம் சவாரி செய்யும் விளையாட்டு அது. உப்பு மூட்டை விளையாட்டை, வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல் போர்த் தந்திரமாகப் பார்க்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். எப்படி? எறி எந்திரனைப் போர் வீரர்களைக்கொண்டு எறியாமல், இன்னொரு எந்திரனின் முதுகில் ஏற்றி அனுப்பினால், ஆபத்தான பகுதிகளில் அதிக தூரம் செல்ல முடியுமல்லவா? மாடிப்படியேறும் எந்திரனின் முதுகில் சவாரி செய்து இரண்டாம் மூன்றாம் அல்லது அதற்கும் மேலுள்ள மாடிகளையும் வேவு பார்க்கலாம்.

மினி யூ.ஜி.வி என்னும் சிறிய எந்திரனை (Mini Unmanned Ground Vehicle) அதன் முதுகில் இரண்டு எறி எந்திரர்கள் சவாரி செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள். கரடுமுரடான போர்க்களங்களிலும் கட்டிடங்களின் மாடிப்படிகளிலும் பயணிக்கும் சிறிய எந்திரனைத் தூரத்திலிருந்து இயக்கி காட்சிகளைப் பெறலாம். ஆபத்தான பொருட்களை அதன் எந்திரக் கைகளால் அகற்றலாம். கூடவே, தேவைப்படும் இடங்களில் எறி எந்திரர்களை வீசியெறியச் செய்யலாம்.
உதாரணமாக, சிறிய எந்திரனைத் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாம் மாடி வரை இயக்க வேண்டியிருந்தால், முதல் இரண்டு மாடிகளைக் கடக்கும்போது எறி எந்திரனை ஒவ்வொரு மாடியிலும் வீசி எல்லாத் தளங்களிலிருந்தும் உடனடியாக வீடியோ காட்சிகளைப் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கச் செய்யலாம். இதனால் மீட்புப் பணிகளைத் திறம்படத் திட்டமிடவும், பணயக் கைதிகளை மீட்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

எந்திரக் காவலாளி

போர்க்கள வேலைகளுக்கு மட்டுமா எந்திரர்கள்? இல்லை. வீடுகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களின் பாதுகாப்புக்கும் எந்திரக் காவலாளிகள் வந்துவிட்டார்கள். பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரவியல் மைய (Center for Artificial Intelligence and Robotics-CAIR) விஞ்ஞானிகள் எந்திரர்களின் ஆராய்ச்சியிலும் உருவாக்கத்திலும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தான் எந்திரக் காவலாளியை உருவாக்கியுள்ளனர்.

ரோபோசென் (Robot Sentry- RoboSen) என்ற இந்த எந்திரக் காவலாளி, வீட்டு வளாகத்தைச் சுற்றிவரும். வீடியோ பதிவுகளை உடனுக்குடன் அனுப்பும். இதன் சுற்றுப்பாதையை முன்கூட்டியே தீர்மானித்துப் பதிவுசெய்துவிட்டால் அது தானாக அதே பாதையில் வீடியோ பதிவு செய்தபடி சுற்றிவரும். இடையில் பாதையில் தடங்கல் இருந்தால் மோதலைத் தானே தவிர்த்து செல்லும். இதில் லேசர் தூர அளவுமானி, இலக்க திசைகாட்டி (Digital Compass) போன்ற சங்கதிகள் உண்டு. கூடவே, இது கம்பியில்லா(Wireless) தகவல் தொடர்பில் இயங்குவதால், வீட்டிற்குள் அமர்ந்தபடி இதை நாம் விருப்பப்பட்டபடியும் இயக்க முடியும்.

சுவர் ஏறும் எந்திரன்

பல திசைகளிலும் பயணிக்க, படியேற பல கால்கள் கொண்ட எந்திரர்களும் உண்டு. ஆறு கால்கள் கொண்ட இந்தப் பூச்சி ரோபோ பக்கவாட்டிலும் நகரும். நான்கு சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோ, முன்னும் பின்னும் நகரும்.

சுவர் ஏறிக் குதிக்கும் மனிதர்கள் உண்டு. எந்திரர்கள் உண்டா? உண்டு. அதையும் விட்டுவைக்கவில்லை நம் விஞ்ஞானிகள். செங்குத்
தான சுவரிலும் ஏறக்கூடிய சிறிய எந்திரனை உருவாக்கியிருக்கிறார்கள். இவன் ராணுவ பீரங்கி போல பட்டையில் (Tracked Motion) நகருகிறான். சிறிய சுழலும் வில்லைக் காற்றை உறிஞ்சுவதால் சுவரில் ஒட்டிக்கொண்டு பயணிப்பான். எந்திரனில் பொருத்தப்பட்டுள்ள வீடியோ கேமரா, உடனுக்குடன் காட்சிகளை அனுப்பும். உளவு வேலைக்கு இந்தச் சுவரேறும் எந்திரன் மிக முக்கியம்.

எந்திரப் பாம்பு

பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால், பாம்புகளைப் படை பயன்படுத்துகிறது என்பது தெரியுமா? ராணுவத்தினர் பயன்படுத்துவது எந்திரப் பாம்பு (Snake Robot). இந்த எந்திரப் பாம்பு நிஜப் பாம்பைப் போலவே வளைந்து நெளிந்து செல்லும். சுருண்டுகொள்ளும். பக்கவாட்டில் உருண்டபடி ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு இதனால் செல்ல முடியும். 1.5 மீட்டர் நீளமுள்ள இந்த லித்தியம் அயனி பாம்பின் தலையில் கேமராவும் அல்ட்ராசானிக் உணரியும் பொருத்தப்பட்டிருக்கிறது. 14 செயல் இணைப்புகளைக் (Active Joints) கொண்ட இந்தப் பாம்பு, இவற்றைக் கொண்டே நகர்கிறது. பாம்பின் கால் பாம்பறியும்! பாம்பைப் போல தலையை உயர்த்திப் படமெடுக்கும். நிஜப் பாம்பைப் போலன்றி எந்திரப் பாம்பு உண்மையாகப் படமெடுக்கும்(!). ஆம். காணொலிக் காட்சிகளை உடனுக்குடன் அனுப்பும். தரையில் ஊரும்போதும் படமெடுக்கும். தலையை உயர்த்தி, சுற்றுப்புறங்களையும் படமெடுக்கும். பூகம்பப் பகுதிகளிலும், கட்டிட இடிபாடுகளிலும் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்க, இடிபாடுகளுக்கிடையே நுழைந்து தேட, இந்த எந்திரப் பாம்பு பெரிதும் உதவும். வீடியோ காட்சிகளோடு அல்ட்ராசானிக் உணரி மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ள மனிதர்களைக் கண்டறியும். பாம்புகள் வழக்கமாக உயிரைக் குடிக்கும் விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கும் இந்தப் பாம்புகள் அவர்களின் மகுடியில் மயங்கி உயிரைக்காக்கும்.

எதிர்காலத்தில், தரையிலிருந்து வடிகால் குழாய் மூலம் எந்திரப் பாம்பு மாடிக்குச் சென்று படமெடுத்து அனுப்பும். மின் கம்பங்கள், மரங்களில் ஏறி வேவு பணிசெய்யும். அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள்.

கூட்டுக்குடும்ப எந்திரர்கள்

பெரிய சிறிய எந்திரர்களை ஒருங்கிணைத்து அவர்களிடையே தகவல்கள் பரிமாற்றம் நடக்கச்செய்து, ஒரே புள்ளியிலிருந்து எல்லா எந்திரர்களையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுவருகிறது. எந்திரர்களின் இந்தக் கூட்டுக்குடும்பத் தொழில்நுட்பம் நாட்டின் பல குடும்பங்களைக் காப்பாற்றும் என நம்பலாம்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதங்களை உருவாக்கும் ராணுவ விஞ்ஞானிகள், இந்தியக் குடிமக்களின் உயிர்காக்க, இதயத்தின் அடைப்பைச் சரி செய்ய டாக்டர் அப்துல் கலாமின் வழிகாட்டுதலில் ஒரு கண்டுபிடிப்பை முன்னெடுத்தனர். என்ன அது?

 (பேசுவோம்)

x