நிறை மாத நிலவே வா வா... ஆம், இந்த அத்தியாயம் நிறைமாத கர்ப்பிணிகளுக்கானது.
கடந்த சில வாரங்களாக முதல் இரண்டு பருவ கர்ப்பகாலத்துக்கான ஆலோசனைகளை விரிவாகப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் இன்னும் சில வாரங்களில் தாயாகிவிடுவோம் என்ற பதற்றத்தில் இருக்கும் தாய்க்கான ஆலோசனைகளைப் பார்ப்போம்.
மூன்றாம் பருவ கர்ப்பகாலம் பற்றி எழுதும்போது எனது சொந்த அனுபவத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரு பெண் வேலை, குடும்பம் என இரண்டையும் எப்படி சீராகக் கையாள்வது என்பதில் எனக்கு விருதே கொடுக்கலாம். இதை சொல்லிக்கொள்வது தற்பெருமை என்றாலும் கவலை இல்லை. என் பணி சுதந்திரத்துக்குள் என் தாயோ அல்லது மாமியாரோ அத்துமீற முடியாது. அந்த அளவுக்கு திட்டமிட்டு செயல்படுவேன். ஆனால், என் நிறைமாத கர்ப்பகாலத்தில் என் கட்டுப்பாட்டை மீறி ஒரு விஷயம் சென்றது.
ஒருமுறை நான் வீடு திரும்பும்போது சிறுநீர் கழிக்கும் உபாதை அதிகமானது. என்னால் அடக்கமுடியவில்லை. மும்பையின் அந்த முக்கியச் சந்திப்பில் நான் காரில் சென்றுகொண்டிருந்தேன். என்னால் சிறுநீரை அடக்கவே இயலவில்லை. சிக்னலைத் தாண்டிச் சென்றேன். போலீஸ்காரர் என்னை துரத்திக் கொண்டுவந்தார். வேகமாக பைக்கில் பிரேக் அழுத்தி என் காரின் முன்னால் நிறுத்தினார்.
கார் கண்ணாடியைத் தட்ட, கண்ணாடியை இறக்கி, “சார் நான் கர்ப்பமாக இருக்கிறேன்.. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும்... அதனாலேயே வேகம்” என்று சொன்னேன். அவர், “மன்னிக்கவும். என்னால் நீங்கள் ஆபத்தாக கார் ஓட்ட நேர்ந்தது. நம் நாடு பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டது. ஆனால், இன்னும் பெண்களுக்கு பொது இடங்களில் கழிப்பறை வசதிகள்தான் பெருகவில்லை” என்று சொல்லிவிட்டு நான் வீடு செல்லும்வரை என் காரின் பின்னால் வந்தார். அந்த அனுபவத்தை மறக்க முடியாது. நிறைமாதத்தில் சிறுநீர் கழிக்கும் உந்துதல் அடிக்கடி ஏற்படுவதால் என்னதான் திட்டமிட்டாலும் சில நேரம் இவ்வாறு நடந்துவிடுவதும் உண்டு.
சரி நாம் சில கேள்விகளைப் பார்ப்போம்
1. என்னால் இரவில் தூங்க முடியவில்லை... என்ன செய்யலாம்?
கடைசி சில வார கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை இயல்பானதே. இந்தக் காலகட்டத்தில் ஹார்மோன்கள் சில முக்கிய மாற்றத்தைக் கண்டு கொண்டிருக்கும். அதனால் இந்தக் காலகட்டத்தில் சிற்சில விஷயங்களில் நாம் செலுத்தும் கவனம் தூக்கமின்மையை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். அதற்கான சில டிப்ஸ்:
இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு முடித்துவிடுங்கள்.
ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு மேல் உங்களின் செல்போன் போன்ற கேட்ஜட்களைப் பயன்படுத்தாதீர். குறிப்பாக, இரவு உணவுக்குப் பின் செல்போன் கூடவே கூடாது.
பாதங்களில் வெண்ணெய், நெய் ஒரு துளி தடவி தேய்த்து நீவிவிட்டு உறங்கச் செல்லவும். இடையில் எழுந்துகொள்ள நேர்ந்தால் நிதானித்து நடக்கவும்.
பாலில் முந்திரி, மஞ்சள் சேர்த்து அருந்தவும்.
மதிய வேளையில் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் தூங்க வேண்டாம்.
உங்கள் உடலும், நீங்கள் தூங்கும் அறையும் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏசி இயந்திரத்தை அறைக்குச் செல்லும் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆன் செய்துவிடுங்கள். இதனால், ஏற்கெனவே குளிரூட்டப்பட்ட அறைக்குச் சென்றதும்
தூக்கம் வந்துவிடும்.
உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள். இதுதான் ரத்த ஓட்டத்தையும், ஹார்மோன் சுழற்சியையும் சீராக வைக்கிறது.
2.நிஜமான பிரசவ வலி; போலி வலி எப்படிக் கண்டறிவது?
இதற்கு சரியான விளக்கத்தை உங்களின் மகப்பேறு நிபுணரால்தான் தர இயலும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் உங்களுடைய மருத்துவர் உங்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் தருபவராகவும் இருக்க வேண்டும். கடைசிப் பருவ கர்ப்பகாலத்தில் மருத்துவருடன் சற்று அதிகமாகப் பேசுங்கள். எந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்பதை அவர் உங்களுக்கு எடுத்துரைப்பார்.
3. எனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்... நான் என்ன செய்ய வேண்டும்?
உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க உணவுப் பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்தவும்.
சப்பாத்தி, பருப்பு சாதம் என எதுவாக இருந்தாலும் நெய் சேர்த்துக் கொண்டால் போதும். உங்கள் உடலின் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
உங்கள் உணவு வேளையை பல பகுதிகளாகத் திட்டமிடுங்கள். எப்போது சாப்பிட்டாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
உணவில் அத்தியாவசிய கொழுப்புப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
சர்க்கரை அளவை சீராக வைக்க தேங்காய் லட்டு, கடலைமிட்டாய், பனீர், உலர்பழங்கள் உகந்தவை.
எப்போதும் ஓரிடத்திலேயே தேங்கியிருக்காதீர்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.
4. பிரசவத்துக்குச் செல்லும் முன் பிறப்புறுப்பில் உள்ள ரோமங்களை அகற்ற வேண்டுமா? இதை நீங்கள் செல்லும் தனியார் மருத்துவமனையில் அவர்களே பிரசவத்துக்கு முன்னர் பாதுகாப்பாக செய்துவிடுவார்கள். வீட்டிலும் உங்களால் பாதுகாப்பாக செய்துகொள்ள இயலும் என்றால் முன்னேற்பாடாக செய்வதில் தவறில்லை.
5. எனக்கு பயமாக இருக்கிறது...
இதுவும் இயல்பே. அதுவும் முதல் பிரசவம் என்றால் இந்த அச்சம் இன்னும் இயல்பு. ஆனால், பிரசவம் என்பதை இயற்கையாக நிகழ்வது. நம் உடல் அதை ஏற்றுக் கொள்ளும். அதனால் அச்சமில்லாமல் செல்லுங்கள். இயற்கை உங்கள் பக்கமும், உங்கள் குழந்தை பக்கமும்தான்.
மூன்றாவது பருவ கர்ப்பகாலத்துக்கான முக்கியமான மூன்று உணவுகள்:
மஞ்சள்: நான் மீண்டும் மீண்டும் மஞ்சளின் மகத்துவம் பற்றி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அதுவும் கர்ப்பகாலத்தில் மஞ்சளின் மகிமை என்னவென்பதை இப்போது மேலை நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. மஞ்சளில் உள்ள குர்குமின் கூட்டுப்பொருள் தசைச் சிதைவைத் தடுக்கிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை கண்கள், இதயம், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கின்றன.
இந்தியர்கள் நாம், மஞ்சளை தாராளமாகவே பயன்படுத்துகிறோம். குழம்பு வகைகளில் சேர்க்கிறோம். பாலில்கூட சேர்த்துப் பருகுகிறோம். இதை தற்போது மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றுகின்றனர்.
பாசிப்பருப்பு: இருக்கும் அத்தனை பருப்பு வகைகளிலும் பாசிப்பருப்பு கர்ப்பிணிகளுக்கு மிகவும் பொருத்தமான உணவு. இது எளிதில் செரிமானமாகக் கூடியது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6, தாதுப் பொருட்கள், புரதம் என அனைத்தும் கர்ப்பிணிகளுக்கு அருமருந்து. அதுதவிர பருப்புகளால் ஏற்படும் வாயுத் தொல்லை பாசிப்பருப்பில் மிகமிகக் குறைவு. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டது.
அரிசி சாதம்: ஆம், சாதாரணமாக நாம் அன்றாடம் சாப்பிடும் சாதம்தான். வெள்ளை, ஒருமுறை தீட்டப்பட்ட அரிசி கர்ப்பிணிகளுக்கு உகந்தது. சாதத்தை நீங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப குழம்பு, தயிர், மோர் என சேர்த்து சாப்பிடலாம். இல்லை கஞ்சியாக்கிப் பருகலாம். கஞ்சியாகக் குடிப்பதால் வைட்டமின் பி நிறைவாகக் கிடைக்கும்.
மூன்றாம் பருவத்துக்கான டயட் சார்ட்:
உணவு 1: எழுந்தவுடன் ஊறவைத்த பாதாம் அல்லது உலர் திராட்சைகள். அல்லது பழங்கள்.
உணவு 2: வீட்டில் சுடச்சுட சமைக்கப்பட்ட உள்ளூர் உணவு. இரண்டாவது உணவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், மல்டிவைட்டமின் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
உணவு 3: தேங்காய்த் தண்ணீர், எலுமிச்சை சாறு அல்லது நீராகாரம்.
உணவு 4: சப்பாத்தி - காய்கறிக் கூட்டு அல்லது சாதம், குழம்பு, காய்கறி என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திட்டமிடவும். தயிர் சாதம் நிச்சயமாக எடுத்துக் கொள்ளவும். மதிய உணவில் ஒமேகா 3 சத்து இருப்பது அவசியம். ஆளிவிதைகளைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
உணவு 5: லட்டு, கடலை மிட்டாய் அல்லது அப்போதைக்கு அரிந்த பழவகைகள்.
உணவு 6: பனீர் டோஸ்ட், ராகி தோசை அல்லது மில்க் ஷேக் என ஏதாவது ஒன்று.
உணவு 7: இது இரவு உணவு. அரிசி கஞ்சி. அதில் கொஞ்சம் மஞ்சளும், பெருங்காயமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உணவு 8: தூங்கச் செல்லும் முன் கொஞ்சம் பால் அருந்தவும். மஞ்சள் கண்டிப்பாக சேர்க்கவும்.
இவ்வாறாக உணவையும் உடற் பயிற்சியையும் திட்டமிட்டு பழகினால் நிறைமாதம் சுகமாதமாகவும் பிரசவம் இனிதாகவும் நடைபெறும்.
அடுத்த அத்தியாயத்தில், பேறுகாலத்துக்குப் பின் உடல்நலத்தைப் பேணுவது பற்றி பார்ப்போம்.
(வளர்வோம்... வளர்ப்போம்)