நாளைய பொழுது நமக்காய் விடியும்!- கனவுகளைச் சுமந்து பயணிக்கும் பைசல்


என்.பாரதி
readers@kamadenu.in

மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. குமரி மாவட்டத்தின் தக்கலையில், கட்டுமானப் பணியில் மும்முரமாக இருந்தார் பைசல். வீட்டின் மேல்தளத்தில் நடக்கும் சுவர் எழுப்பும் பணிகளுக்காக, அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் செங்கல்களின் மீது ஏறி நின்று, கீழே இருந்து செங்கல்களை ஒவ்வொன்றாக மேலே வீசுகிறார். அவை இரண்டு, மூன்று கைகளுக்கு மாறி மாடிக்குப் போகின்றன. வியர்க்க விறுவிறுக்க வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பைசல், நவீன இலக்கிய உலகின் புதிய முகங்களில் ஒருவர்.

வேலைக்கு இடையே என்னிடம் பேசத் தொடங்கினார். “தேங்காய்பட்டிணம்தான் எங்க பூர்விகம். முந்தைய தலைமுறை
யிலேயே மணலிக்கு வந்துட்டோம். என்னோட அப்பா அபுபக்கர் சுமை தூக்கும் தொழிலாளியா இருந்தார். எங்க குடும்பம் ரொம்பப் பெருசு. அப்பா ஒருத்தர் சம்பாதிச்சு, நாங்க எட்டுப் பேரு சாப்பிடணும். ரொம்ப வறுமையான சூழல். கல்வியோட முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லவும் ஆள் இல்லை. இன்னொரு பக்கம் வறுமையால பெருசா படிக்கவும் வாய்ப்பு இல்லை. பிளஸ் டூவோட படிப்பை நிறுத்திட்டு கட்டிட வேலைக்குப் போயிட்டேன்.

சின்ன வயசுல இருந்தே வாசிப்பு மேல ஆர்வம் இருந்துச்சு. ஆறாம் வகுப்பு படிச்சப்ப அப்பா தன்னோட நண்பர் வீட்டுல இருந்து கம்பனைப பத்தி ஒரு புத்தகம் எடுத்துட்டுவந்து தந்தார். ஒருகட்டத்துல வாசிப்பு ஆர்வம் அதிகமாகி காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்க ஆரம்பிச்சேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, நாகர்கோவில்ல இருக்கும் மாவட்ட மைய நூலகத்துல உறுப்பினரா சேர்ந்தேன். அந்த நூலகம் வழியாத்தான் எனக்கு மாக்சிம் கார்க்கி, வைக்கம் முகமது பஷீர் படைப்புகள், வங்காள இலக்கியங்கள் எல்லாம் அறிமுகமாச்சு” என்று சொல்லும் பைசல், வாழ்க்கைப்பாட்டுக்காகக் கட்டிடத் தொழிலுக்கு வந்தவர்.
“முதல்ல சித்தாளா வேலையை ஆரம்பிச்சேன். இப்போ கொத்தனாரா இருக்கேன். சொந்தமா கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ற அளவுக்குத் தொழில் தெரியும். ஆனா, முஸ்லிம்ங்கிற காரணத்துக்காகப் பலர் வேலை தர மறுக்கிறாங்க.

x