விக்கிரவாண்டியில் வெற்றி யாருக்கு?- அதீத நம்பிக்கையில் அதிமுக... திணறும் திமுக!


கரு.முத்து
muthu.k@kamadenu.in

விக்கிரவாண்டி தொகுதி திமுக அதிமுகவுக்கு இடையிலான நேரடி யுத்தக் களமாக உருவெடுத்திருக்கிறது. இங்கே விசிக துணையுடன் திமுகவும், பாமக துணையுடன் அதிமுகவும் களம் காண்கின்றன. இதனால் தேர்தல் முடிவுகளை பணமும் சாதிய பலமுமே தீர்மானிக்கப்போகின்றன.

பாமகவால் பலம் பெறும் அதிமுக தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 44 சதவீதம் வன்னியர்கள். எனவே, வன்னிய சமூகத்தினரின் வாக்குகளைக் கவர இரு தரப்பும் பிரம்மப் பிரயத்தனம் செய்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இங்கு 
சுமார் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றது. இதற்கு முக்கியக் காரணம், பாமக தனித்து நின்று சுமார் 41,000 வாக்குகளைப் பிரித்ததுதான். இப்போது பாமக உடனிருப்பதால் எங்களுக்கு அசுர பலம் என்கிறது அதிமுக.

மக்களவைத் தேர்தலில் அன்புமணி தோற்றாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தது அதிமுக. இதனால், அதிமுக மீது பாமக தரப்பில் மிகுந்த பாசம் காட்டுகிறார்கள். இதனால் அதிர்ந்துபோயிருக்கும் திமுக, வன்னிய சமூகத்தினருக்கு வலைவிரிக்கும் அஸ்திரங்களை வீசிப் பார்க்கிறது. வன்னியர்களுக்காகத் திமுக செய்திருக்கும் விஷயங்களை நினைவூட்டி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது அதன் ஒரு பகுதிதான். ஆனால், அதையே திமுகவுக்கு எதிரான துருப்புச்சீட்டாக பாமக மாற்றிக்கொண்டது.

x