பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருகை தரும் நிகழ்வையொட்டி, பேனர்கள் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசின் செயல் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தருகிறது.
அதிமுகவினர் சாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் சுபஸ்ரீ பலியான நிலையில், இனியாவது அரசியல் கட்சிகளிடம் இவ்விஷயத்தில் மாற்றம் வரும் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அரசே அந்த எதிர்பார்ப்பை தகர்க்கும் வகையில் இப்படி நடந்துகொள்வதை என்னென்பது?
இரு தலைவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரம் பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தலைவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இத்தனை பொறுப்புடன் செயல்பட்ட தமிழக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை காட்டியிருக்க வேண்டாமா? பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பது தவறு என்று பல அரசியல் கட்சிகள் உணர்ந்திருக்கும் நிலையில், நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கும் அளவுக்குத் தமிழக அரசு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
தமிழகத்தில் பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது அவர்களை வரவேற்று வெளியுறவுத் துறை பேனர்கள் வைப்பது வழக்கமான நடவடிக்கைதான் என்றும், தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன?