போர்முனை டு தெருமுனை 8: காக்கும் - தாக்கும் எந்திரர்கள்


வெடிபொருட்கள், ரசாயன - கதிரியக்க - உயிரி ஆயுதங்கள் ஆகியவைகளைக் கையாண்டு செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது.

இது போன்ற சமயங்களில் நமது வீரர்களை எப்படி பாதுகாப்பது? மும்பை தாஜ் நட்சத்திர விடுதி நிகழ்வு போல தீவிரவாதிகள் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கும் சூழ்நிலைகளில் எப்படி உயிர் பலியில்லாமல் மக்களை மீட்பது? எத்தனை தீவிரவாதிகள், அவர்களின் ஆயுதங்கள், பதுங்கு நிலைகள் உள்ளிட்ட உள்நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொண்டால் பக்குவமாக பதிலடி கொடுத்து பொதுமக்களை மீட்கலாம். உள்நிலவரங்களை தெரிந்து கொள்ள ஆளனுப்பினால் அதுவும் ஆபத்தானது. இப்படி மனித உயிருக்கு ஆபத்தான பணிகளைச் செய்ய எந்திரர்கள் (Robots) தேவை.

மின்னணு சந்தையில் கிடைக்கும் உதிரிபாகங்களைக் கொண்டு எந்திரர்களை உருவாக்கினால் ராணுவத்தின் கடினமான போர்ச்சூழலிலும், தீவிரவாதச்செயலின் அபாயநிமிடங்களிலும் அறுந்துவிடாமல் அலுவல் செய்வார்களா?

தக் ஷ் - காக்கும் எந்திரன்

முரட்டுத்தனமான சூழ்நிலைகளைச் சமாளித்து கட்டளைப்படி கடமையாற்ற ராணுவ விஞ்ஞானிகள் பல எந்திரர்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘தக் ஷ்’ (Daksh) தொலையியக்கு ஊர்தி (Remotely Operated Vehicle-ROV), தீவிரவாத சூழல்களைச் சமாளிக்க பாதுகாப்பு படையினருக்கு பேருதவியாக இருக்கிறது. ஆளில்லாமல் இயங்குவதால் உயிர்ச்சேதமில்லை. இதிலுள்ள நான்கு படக்கருவிகளை 500 மீட்டர் தூரத்திலிருந்தபடியே இயக்கி உடனுக்குடன் காணொலிகளைப் பெற முடியும். படக்கருவிகளைக் கட்டுப்படுத்தவும், பிம்ப செயலாக்கும் மென்பொருள் (Image Processing Software) மூலம் காணொலியின் தரத்தை மேம்படுத்தவும் முடியும்.

ஆறு சக்கரங்கள் கொண்ட தக்‌ஷ், மாடிப்படிகளில் ஏறும். கதவு பூட்டியிருந்தால் என்ன செய்யும்? கைத்துப்பாக்கி பொருத்தப்பட்ட இவ்வாகனம், பூட்டிய கதவுகளை சுட்டுத் திறக்கும். மின்கலன்களின் உதவியால் இயங்கும் இந்த வாகனம், தொடர்ந்து மூன்று மணிநேரம் வரை இயங்கும்.

வெடிபொருட்களையும் இது கையாளும். இதிலுள்ள எக்ஸ் அலை (X-Ray) கருவி மூலம் மேம்படுத்தப்பட்ட வெடி பொருள் (Improvised Explosive Device-IED) என்ற நவீன வெடிபொருளைக் கண்டுபிடிக்கலாம். கண்டுபிடித்த வெடிமருந்தை நீர்த்தாரையை செலுத்தி (Water Jet Distrupting) செயலிழக்கவும் செய்யலாம். இதன் எந்திரக்கையினால் (Robotic Arm) ஏறக்குறைய 20 கிலோ எடையுள்ள வெடிபொருளைச் சுமந்தோ, இழுத்தோ அப்புறப்படுத்தலாம். நிறுத்தப்பட்டிருக்கிற வாகனத்தில் வெடிபொருள் இருக்கிறதா இல்லையா என்பதை வெளியிலிருந்தபடி தக் ஷ் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யும்.

மனித உயிருக்கு ஆபத்தான வேதி, உயிரி, கதிர்வீச்சு மற்றும் அணு (Chemical, Biological, Radiological and Nuclear -CBRN) பொருட்களையும் தக் ஷ் கண்டறியும். கதிவீச்சு அளவீடு மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவி (Radiation Measurement and Automatic Control unit -RADMAC) மற்றும் கையடக்க வாயு க்ரோமடோகிராஃப் (Portable gas chromatograph - PGC) கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதியின் மாசு அளவைப் பற்றிய தகவல்களை தூரத்திலிருந்தே பெற முடியும்.

மராட்டிய மாநிலத்தின் புனேயிலுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியாளர்கள் (Research & Development Engineers) என்ற டி.ஆர்.டி.ஓ ஆய்வக விஞ்ஞானிகளின் படைப்பான தக் ஷ், 2011-ல், இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு நமது போர்வீரர்களை ஆபத்துகளிலிருந்து காத்து வருகிறது. அது மட்டுமல்ல, உள்நாட்டு கிளர்ச்சி நடவடிக்கைகள் அதிகமுள்ள வடகிழக்கு மாநிலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 40 முறை வெடிபொருட்களைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்துள்ளது தக் ஷ். அறிவியலின் ஆக்கங்களில் உச்சம் எந்திரர்கள் எனில் அதிலும் உச்சம் மனிதர்களைக் காக்கும் எந்திரர்கள். இவ்வாகனத்தின் எடையைக் குறைக்கவும், வேகத்தைக் கூட்டவும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கண்ணிவெடி அகற்றும் எந்திரன்

போர்க்களத்தில் கண்ணிவெடியால் பாதிக்கப்படுவோர் அதிகம். ராணுவ வாகனங்களும் பாதிக்கப்படும். போர் முடிந்த பின்னரும் எதிரிகள் புதைத்த கண்ணிவெடிகளால் உயிரையும் உடலுறுப்புகளையும் இழப்போர் உலக அளவில் அநேகம். ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் ரோபோட்டான ‘மார்ஸ்’ (Mobile Autonomous Robot System-MARS) இதற்கான தீர்வுகளில் ஒன்று. கோல்ஃப் விளையாட்டு வண்டியைப் போலிருக்கும் மார்ஸ், 10 கிலோ எடையுள்ள கண்ணி வெடியையும் இதர வெடிபொருட்களையும் அகற்றும். இதிலுள்ள படக்கருவி மற்றும் லேசர் அலைக்கருவிகள் மூலம் ஒரு பகுதியின் முப்பரிமாண பிம்பம் உருவாக்கப்படும். இதன் மூலம் எந்திரக்கை துல்லியமாக வெடிபொருட்களைப் பற்றி எடுக்கும்.

மந்த்ரா - கவச எந்திரன்

ராணுவ டாங்க் மற்றும் கவச வாகனங்கள் (Armoured Personnel Carriers) போரில் பயன்படுத்தப்படுகின்றன. கவச வாகனங்களில் போர் வீரர்கள் பயணம் செய்வார்கள். கவச வாகனங்களில் சென்று எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீர்கள், எதிரிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். இங்கும் எந்திரர்கள் இருந்தால் உயிர்ச்சேதத்தை தவிர்க்கலாமே? ஆம். ஆளில்லா கவச வாகனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் சென்னையில். ஆவடியிலுள்ள, போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (Combat Vehicles Research and Development Establishment-CVRDE) விஞ்ஞானிகள் இதை உருவாக்கியுள்ளனர். மந்த்ரா (Mission Unmanned Tracked-Muntra) என்ற இந்த முழு கவச வாகனம், வேவு பார்த்தல், கண்ணி வெடி அகற்றல், அணு மற்றும் உயிரி ஆயுத சோதனைகளைச் செய்யும்.

தக் ஷ் வீரன் - தாக்கும் எந்திரன்

போர்க்களங்களில் உயிர்துறந்த, குற்றுயிராக்கப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களுடைய தியாகங்களுக்கு தேசம் தலைவணங்கினாலும், அவர்களுடைய குடும்பத்தினரின் மனத்துயர் ஒரு பெருங்கடல். எப்படித் துடைப்பது அவர்தம் கண்ணீரை? துடைப்பதல்ல; கண்ணீரைத் தடுப்பதும் சாத்தியம். எப்படி?

கண்காணிப்பு பணியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் எந்திரர்களை ஈடுபடுத்துவதோடு, உயிர்பலி அதிகம் நிகழும் போர்க்களத்தில், தாக்குதல் பணிகளில் எந்திரர்களைப் பயன்படுத்தினால் என்ன? இந்த எண்ணவோட்டத்தில் பிறந்தது தான் ‘தக் ஷ் வீரன்’ (Daksh Warrier).

துப்பாக்கி பொருத்தப்பட்ட இந்த எந்திரன் தன் காமிரா கண்களால் மனித நடமாட்டத்தைக் கவனிப்பான். எதிரியின் உருவ அசைவைப் பொருத்து தனது துப்பாக்கியின் திசையைத் திருப்புவான். பாதுகாப்பான தூரத்திலிருந்தபடியே இந்த எந்திரனை இயக்கி எதிரிகளின் மேல் தாக்குதல் தொடுக்கலாம்.

மாஸ் – எந்திரன்

ஆயுதபாணி எந்திரர்களுக்கு ஒரு சவால் உண்டு. சாலை வழி வாகனப் பயணத்தில் தாகத்துக்கு நீரைப்பருக நாம் சிரமப்படுவோம். வாகனத்தின் அசைவுகளில் சிந்தாமல் சிதறாமல் நம்மால் நீரைக் குடிக்க இயலாது. அதைப் போலவே, கரடு முரடான போர்க்களத்தில் இந்த எந்திரர்களால் பயணப்பட்டுக் கொண்டே குறிதவறாமல் எப்படிச் சுட முடியும்? இதைச் சமாளிக்க, வாகனத்தின் அசைவுகளால் பாதிக்கப்படாத ஆயுத மேடை தேவை. அப்படி உருவாக்கப்பட்ட இன்னொரு தாக்கு எந்திரன், மாஸ். தானியங்கி தன்னாட்சி நிலைப்பாட்டு தொகுதி என்பதன் (MASS-Mobile Autonomous Stabilisation System) ஆங்கிலச் சுருக்கமே மாஸ்!

மின்கலன்களால் இயங்கும் மாஸ், அதிகபட்சமாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும். துப்பாக்கி, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, சிறிய ரடார், மின் பார்வைக் கருவிகள் (Electro Optical Devices) இதிலிருக்கும். ஏறக்குறைய 300 கிலோ எடையுள்ள ஆயுதங்களையும் கருவிகளையும் இது தாங்கவல்லது. நகரும்போதே, வாகனத்தின் அதிர்வுகளைச் சமன் செய்தபடி ஆயுதங்களையும் குறிதப்பாமல் இயக்கும் மாஸ்.

போர்வீரர்களை ஆபத்தான பணிகளிலிருந்து காக்க இந்திய விஞ்ஞானிகள் படைத்தளித்த காக்கும்-தாக்கும் எந்திரர்கள், பொதுமக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் காப்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
சக்கரங்களைக் கொண்ட போர்க்கள எந்திரர்களை மட்டுமல்ல, இன்னும் பல சுவாரசியமான எந்திரர்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். சுவரேறும் ரோபோட், நான்கு கால் ரோபோட் எனப் பலவகை எந்திரர்கள் உண்டு. உப்புமூட்டை விளையாட்டைப் போல முதுகில் சவாரி செய்யும் எந்திர ஜோடிகளும் உண்டு. படமெடுத்து வேவு பார்க்கும் பாம்பு ரோபோட்டும் உண்டு. எப்படி இருக்கும் அது?

(பேசுவோம்)

x