கண்ணான கண்ணே 34


கர்ப்பகாலம் பெண்ணின் பேரின்ப காலம். இந்தக் காலகட்டத்தை இனிமையாக சிலாகிக்க வேண்டுமே தவிர நோய்வாய்ப்பட்டதைப் போல் அச்சப்படக் கூடாது. அதற்கான ஆலோசனைகளைத்தான் நாம் பார்த்து வருகிறோம். இந்த அத்தியாயத்தில் கர்ப்பகாலத்தின் இரண்டாம் பருவத்துக்கான உணவுமுறைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம்.

இரண்டாம் பருவத்துக்கான டாப் 3 உணவுவகைகள் 

இந்தப் பருவத்தில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதனால் இன்சுலின் உணர்திறன் சீராக இருப்பதோடு எலும்பு மூட்டுகளில் வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. முதுகுவலி வராமல் தடுக்க முடிகிறது. அடிப்படை கொழுப்பு அமிலங்கள் இல்லாமல் வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகியனவற்றை உடலால் கிரஹிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முப்பருவம் என்பது நீங்கள் உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் அதிகரிக்கும் காலகட்டம்.

ஜாதிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்

இரண்டாம் பருவ கர்ப்பகாலத்திற்கான டாப் 3 உணவு வகைகளில் ஜாதிக்காய் முதலிடம் பிடிக்கிறது. ஜாதிக்காய் வாசனைப் பொருள்தான். ஆனால், இதனை கீர், ஹல்வா, லட்டு ஆகியனவற்றில் சரியான அளவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மகிமை செய்யும். இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் திறன் ஜீரணத்தை சீராக்குகிறது. முடி உதிர்வதைத் தடுக்கிறது, தோல் சுருக்கங்களை நிவர்த்தி செய்கிறது. முக்கியமாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து சோர்வை விரட்டுகிறது.

ஆனால், வாசனைப் பொருட்கள் பயன்பாட்டில் அளவு முக்கியம். ஒரு குறிப்பிட்ட வாசனைப் பொருள் சேர்க்கப்பட்டிருப்பதை உணரும் அளவுக்கு மிக மிகக் குறைவாகச் சேர்த்தால் போதுமானது.

எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

லட்டு, கீர், ஹல்வாவில் மணத்துக்காகச் சேர்க்கலாம்.

கடலைமாவு மற்றும் பாலுடன் ஜாதிக்காய் அரைத்துச் சேர்த்து மேனியில் தேய்த்துக் கொண்டால் சுருக்கங்கள் மறையும். குறிப்பாக மார்பகக் காம்பில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

தூங்குவதற்கு முன்னர் பாலில் ஒரு சிறு துளி சேர்த்து அருந்தினால் அமைதியான நித்திரை நிச்சயம் வாய்க்கும்.
நெய்யைத் தவறவிடாதீர்

அடிப்படை கொழுப்பு அமிலங்கள் பற்றி பேசியிருந்தோம் அல்லவா? அது உடலுக்குக் கிடைக்க நெய் அவசியம். நெய் குடலின் செயல்பாட்டை சீராக்கி நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. கர்ப்பகாலத்தில் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இன்சுலின், தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைத்திருக்கிறது.
ஆனால், நீங்கள் உண்ணும் நெய் பசு நெய்யாக இருத்தல் அவசியம். வீட்டிலேயே தயாரித்தல் இன்னும் சிறப்பு. ஜெர்சி மாட்டின் நெய் உடலுக்கு உகந்தது அல்ல.

எப்படிப் பயன்படுத்துவது?

தோசை, சப்பாத்தி, சாதத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம். குடும்பத்தில் சர்க்கரை நோய் வரலாறு இருந்தால் கூடுதலாக ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

தாளிதங்களில் பயன்படுத்தலாம், பருப்புடன் சேர்த்துச் சமைக்கலாம், பிரியாணியில் பயன்படுத்தலாம். லட்டு, ஹல்வா, பர்ஃபி என வீட்டில் தயாரிக்கும் இனிப்பு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக பாதங்களில் தடவிக் கொள்வதால் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம், ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

குதிரைவாலி தெரியுமா உங்களுக்கு?

சிறு தானியங்கள் நாம் மறந்துபோன மகத்தான உணவு. அண்மைக்காலமாக இதன் மீது கவனம் திரும்பியுள்ளது. குதிரைவாலி பர்ப்பதற்கு அரிசி குருணை, ரவை குருணை அல்லது கசகசா போல் இருக்கும். இதனைப் பயன்படுத்தி உப்புமா, புலாவ், கீர் என வகை வகையாக சமைக்கலாம். இத்துடன் நிலக்கடலை சேர்த்து பயன்படுத்தினால் சுவையும் மனமும் அலாதியாக இருக்கும். குதிரை வாலி ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதோடு HDL எனப்படும் நல்ல கொழுப்புச் சத்தை மேம்படுத்த உதவுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?

அரிசி சாதம் போலவே இதையும் சோறாக வடித்துச் சாப்பிடலாம்.

முளைகட்டி அரைத்து கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். இவ்வாறு கஞ்சியாக்கிக் குடிப்பதன் மூலம் வைட்டமின் பி சத்து நிறைவாக உடலுக்குக் கிடைக்கும். கஞ்சியில் உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகள் சேர்த்து புலாவ் போல செய்து உண்ணலாம்.

இரண்டாம் பருவத்துக்கான உணவு சார்ட்

முதல் உணவு: காலை எழுந்ததில் இருந்து 15 நிமிடங்களுக்குள் எடுத்துக் கொள்ளவும். பழம், முந்தைய இரவு ஊறவைத்த உலர் திராட்சை என ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். காலையில் முதல் உணவுக்குப் பின்னர் 15 நிமிடங்களாவது சிறு நடை பயிற்சி செய்யலாம்.

இரண்டாம் உணவு: முதல் உணவை முடித்த ஒரு மணி நேரத்தில் இரண்டாம் உணவை உட்கொள்ளவும். இரண்டாம் உணவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி நிறைந்ததாக இருக்கட்டும். குதிரை வாலி உணவு வகைகள் சிறந்தது. காய்கறிகள் சேர்த்து குதிரைவாலி உப்புமா செய்து சாப்பிடலாம்.

மூன்றாம் உணவு: காலைப் பொழுதின் நடுப்பகுதியில் இதனை உட்கொள்ளலாம். தேங்காய்த் தண்ணீர், பாலாடை, எள் உருண்டை, நிலக்கடலை, கடலைமிட்டாய் என ஏதேனும் ஒன்றை உட்கொள்ளலாம். வெல்லத்துடன் உலர் கொட்டைகளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வதோடு எலும்புகளையும் வலுப்படுத்தும்.

நான்காம் உணவு: மதிய உணவான இதில் குதிரைவாலி சாதம் அல்லது அரிசி சாதம் சாப்பிடலாம். கூடுதலாக சிறிதளவு ஆளிவிதை, நிலக்கடலை, கேழ்வரகு என ஏதேனும் ஒன்று இருப்பதை உறுதிசெய்யவும். சாதம் வேண்டாம் என்றால் கோதுமை ரொட்டியுடன் பீட்ரூட் சப்ஜி அல்லது பீர்க்கங்காய் என ஏதேனும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளவும்.

ஐந்தாம் உணவு: மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் கழித்துச் சாப்பிடவும். கரும் உப்பு சேர்த்த மோர் அல்லது பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு கலந்த மோர் குடிக்கலாம். கடலைமிட்டாய் சாப்பிடலாம். பசிக்கேற்ப இந்த உணவைத் திட்டமிடவும். மதிய உணவுக்குப் பின் பசியில்லை என்றால் இதனைத் தவிர்த்துவிடலாம்.

ஆறாம் உணவு: மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் இந்த உணவை முடித்துவிடவும். இதில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், செலீனியம், ஸிங்க், குரோமியம் ஆகியன இருப்பதை உறுதி செய்யவும். இவற்றைப் பெற கேழ்வரகு தோசை, தேங்காய் சட்டினி, சப்பாத்தியுடன் நெய் வெல்லம். வாழைப்பழம் அல்லது மாம்பழம், வே புரோட்டீன் பானம் என என ஏதேனும் ஒன்றை உட்கொள்ளலாம். மாலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது ஒரு மணி நேரத்துக்குப் பின்னரோ உடற்பயிற்சி செய்யலாம். ஒரு முக்கியக் குறிப்பு... புரோட்டீன் பானங்களை நீங்கள் கர்ப்பகாலத்திற்கு முன்னதாகவே பயன்படுத்தியிருந்தால் மட்டுமே கர்ப்ப காலத்தில் இதனைப் பருகவும். பழக்கமில்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஏழாம் உணவு: இதுதான் உங்களின் இரவு உணவு. பருப்பு சாதம் மற்றும் ஊறுகாய், வேகவைத்த பீட்ரூட்டுடன் காய்கறி புலாவ், அல்லது சாதத்துடன் காய்கறிக் கூட்டு சாப்பிடலாம். இரவு உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாக இருக்கட்டும்.
எட்டாம் உணவை படுக்கைக்கு செல்லும் முன் எடுத்துக் கொள்ளவும். சிறிய அளவில் ஜாதிக்காய் நான்கு ஊறவைத்த முந்திரிகள் அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.

இரண்டாம் பருவ கர்ப்பகாலத்தில் உண்ணவேண்டிய பாரம்பரிய உணவுவகைகள்

வாழைப்பூ கூட்டு

நாம் தவறிவிட்ட பாரம்பரிய உணவுவகைகள் ஒவ்வொரு பருவ கர்ப்பகாலத்திற்கேற்ப பார்த்து வருகிறோம். அந்த வகையில் இரண்டாம் பருவத்தில் வாழைப்பூ கூட்டு சாப்பிடலாம். வாழைப்பூவில் இருந்து நரம்பை நீக்கும் பணி உங்களுக்கு சிறு தியானம் போல் அமையும் என்பது கூடுதல் தகவல்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிவைத்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை அடுத்தடுத்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன் நிறமாக மாறியவுடன் அதில் சிறுசிறு துண்டுகளாக வெட்டிவைத்த உருளைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சீரகப் பொடி, மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு என வரிசையாக சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் அலசிவைத்த வாழைப்பூவை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 20 நிமிடங்கள் வேகவிடவும். சரியாக 15 நிமிடம் கழித்து அத்துடன் ஒரு துண்டு பட்டை, கொஞ்சம் கசகசா சேர்த்தால் வாழைப்பூ கூட்டு தயாராகிவிடும். இறக்கிவைத்து மல்லி இலை தூவி சூடாகச் சாப்பிடவும்.

மாவிளக்கு செய்து சாப்பிடலாம்

கோயிலில் குறிப்பாக அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏந்துவது நேர்த்திக்கடன். வெறும் அரிசிமாவுடன் நெய் வெல்லம் சேர்த்து செய்வதுதான் இந்த மாவிளக்கு. இதை விளக்குபோல் செய்து நடுவில் நெய் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் அதை அப்படியே உண்பது வழக்கம். இந்த மாவிளக்கு கர்ப்பிணிகளுக்கு நல்ல உணவு. அரிசியை முந்தைய இரவே ஊறவைத்துவிட்டு மறுநாள் வடிகட்டி அரைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த மாவுடன் வெல்லம், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து உருண்டையாக்கி ஒரு மணி நேரம் கழித்து உண்ணவும்.

ஆந்திராவில் இந்த மாவிளக்கை சல்லிமிடி என்கின்றனர். கர்ப்பிணி மூன்றாவது மாதத்தை அடைந்தவுடன் இதனைச் செய்து அக்கம்பக்கத்தினருக்குக் கொடுத்து தங்கள் வீட்டுப் பெண் கர்ப்பமடைந்திருப்பதைத் தெரிவிக்கின்றனர். அதேபோல் வளைகாப்பு முடித்து தாய்வீட்டுக்குச் செல்லும்போது ஒரு சம்பிரதாயமாக மாவிளக்கை மடியில் கட்டி அனுப்புகின்றனர்.

முருங்கைக்காய் கூட்டு

முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய் துருவல், கசகசா, சீரகம் ஆகியனவற்றை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் வறுத்து பின்னர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், மஞ்சளுடன் அரைத்த கலவையைச் சேர்க்கவும். அத்துடன் வேகவைத்த முருங்கைக்காயை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை சட்டென குணமாக்கும். அதுதவிர கால்சியம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் நிறைந்தது.

சத்தான உணவு அதுவும் வீட்டில் சமைத்த உணவு, சீரான தூக்கம், அவசியமான உடற்பயிற்சி என்று பழக்கப்படுத்திக் கொண்டால் இரண்டாம் பருவ கர்ப்ப காலமும் இனிதே நிறைவுறும்.

அடுத்த அத்தியாயத்தில் மூன்றாம் பருவ கர்ப்ப காலத்துக்கான ஆலோசனைகளைப் பார்ப்போம்.

(வளர்வோம்... வளர்ப்போம்)

x