பேசும் படம் - 42: சாஸ்திரியின் கடைசிப் படம்!


எளிமையாக வாழ்ந்த இந்தியத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் லால் பகதூர் சாஸ்திரி. நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற இவர், ‘அமைதியின் மனிதர்’ என்று அழைக்கப்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக தாஷ்கண்ட் சென்ற நிலையில் அங்கு காலமானார். சாஸ்திரி காலமாவதற்கு சில மணிநேரம் முன்பு பிரேம் வைத்யா (prem vaidya) என்ற புகைப்படக்காரர் எடுத்த படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

1965-ல், காஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்தியாவின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. லால் பகதூர் சாஸ்திரியை இது கோபம் கொள்ளச் செய்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடந்த போரில், பாகிஸ்தானின் சில பகுதிகளை இந்திய ராணுவம் கைப்பற்றியது. 1965 செப்டம்பர் 21-ம் தேதி ஐநா சபை கூடி, இருதரப்பையும் சமாதானமாகச் செல்லுமாறு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து சில தினங்களில் போர் முடிவுக்கு வந்தது.

போர் முடிந்த நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையே பகைமை குறையவில்லை. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அப்போதைய சோவியத் யூனியன் அரசு ஈடுபட்டது. 1966-ம், ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் சோவியத் யூனியனின் பிரதமராக இருந்த கோசிஜின் முன்னிலையில் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபரான அயூப்கானும் தாஷ்கண்ட் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனவரி 10-ம் தேதி இரவு, இரு தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது நடந்த சில மணி நேரத்திலேயே ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில் லால் பகதூர் சாஸ்திரி காலமானார்.

சாஸ்திரி இறப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் பிரேம் வைத்யா அவரது கடைசிப் புகைப்படத்தை எடுத்துள்ளார். சாஸ்திரி காலமான இரவில் நடந்ததைப் பற்றி பிரேம் வைத்யா இப்படிச் சொல்கிறார்:

 “தாஷ்கண்டில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையைப் படமெடுக்க நானும் சென்றிருந்தேன். இந்தப் பேச்சுவார்த்தையின்போது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தங்குவதற்காக அழகான மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் இருந்து 3 நிமிட நடைப்பயணத்தில் எட்டிவிடக் கூடிய தூரத்தில் அந்த மாளிகை இருந்தது.
ஜனவரி 10-ம் தேதி இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், சாஸ்திரி தனது மாளிகைக்குச் சென்றுவிட்டார். அன்று நள்ளிரவு வரை அவருக்குப் பல்வேறு பணிகள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்படி அவர் பணியில் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.

இரவு அறைக்கு வந்த சாஸ்திரி, இந்தியாவில் யாரிடமோ நீண்டநேரம் தொலைபேசியில் பேசிவிட்டு தாமதமாக இரவு உணவை முடித்துக்கொண்டார். பின்னர் அங்குள்ள அறையிலேயே அவர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தார். அவரைப் படமெடுக்க இதுதான் உகந்த சமயம் என்று நினைத்த நான், தோட்டத்தில் இருந்துகொண்டு என்னுடைய கேமராவில் ஃபிலிம்ரோல் தீரும் வரை படமெடுத்தேன். என்னுடன் தாஷ்கண்டுக்கு வந்திருந்த புகைப்படக்காரர்களான கிஷோர் பாரிக் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் அவரைப் படம் எடுத்தனர். அப்படி நான் எடுத்ததில் கடைசிப் படம்தான் இது.

இந்தப் படத்தை எடுத்த பிறகு என் அறைக்கு வந்த நான் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டேன். நள்ளிரவில் என் அறையின் கதவை யாரோ பதற்றத்துடன் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் பதற்றத்துடன் வெளியில் நின்றிருந்தார். ‘பிரேம்.. பிரேம்.. சாஸ்திரிஜி...’ என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து நானும் அவரும், சாஸ்திரி தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றோம்.

நள்ளிரவு நேரத்திலும் அந்த மாளிகை பரபரப்பாக இருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் கவலை அப்பிக்கிடந்தது. அறைக்குள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உடல் சலனமற்றுக் கிடந்தது. அவரது தனிப்பட்ட மருத்துவரான டாக்டர் ஆர்.என்.சக், இணைச் செயலாளரான சி.பி.ஸ்ரீவத்சவா, பிரதமரின் தனிச் செயலளரான ஜெகன்னாத் சஹாய் ஆகியோர் அவரது உடலைச் சுற்றி கண்ணீர் மல்க நின்றிருந்தனர். சில மணி நேரங்களுக்கு முன்பு, துடிப்பாக உலவிக்கொண்டிருந்த அவரை கடைசியாகப் படம் பிடித்தது என் நினைவுக்கு வந்தது” இவ்வாறு பிரேம் வைத்யா கூறுகிறார்.

அன்றைய தினம் சாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது வழிநெடுகிலும் இருந்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சோவியத் யூனியனின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. சாஸ்திரியின் உடலை விமானத்தில் ஏற்றும்போது அவரது உடலைச் சுமந்த பெட்டியின் ஒரு பக்கத்தை சோவியத் யூனியனின் பிரதமர் கோசிஜினும், மற்றொரு பக்கத்தை பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் சுமந்து சென்றனர். லால் பகதூர் சாஸ்திரி, மாரடைப்பால் காலமானதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றும் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன.

பிரேம் வைத்யா

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் ஃபிலிம் டிவிஷன் பிரிவில் 31 ஆண்டுகள் பல்வேறு பதவிகளை வகித்தவர் பிரேம் வைத்யா. இந்த 31 ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு முக்கியத் தருணங்களை அவர் படம் எடுத்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் யுத்தம், வங்கதேச போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சம்பவங்கள் அதில் அடக்கம். புகைப்படம் எடுப்பதுடன் வீர சாவர்கரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட ஏராளமான டாக்குமென்டரி படங்களையும் இவர் எடுத்துள்ளார். 1954-ல், உதவி கேமராமேனாக ஃபிலிம் டிவிஷனில் பணியைத் தொடங்கிய இவர், 1985-ல், நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஓய்வுபெற்றார்.

x