கரு.முத்து
muthu.k@kamadenu.in
ஒரு காலத்தில் சிவகங்கை மாவட்ட போலீஸாருக்கு தஞ்சாவூர் ரவி என்ற பெயரைக் கேட்டாலே பயங்கர அலர்ஜி. ஏனென்று கேட்கிறீர்களா? ரவி ஒரு வித்தியாசமான கொள்ளையன். கூட்டுக்கு யாரையும் வைத்துக் கொள்ள மாட்டான். தனியொருவனாக எவ்வளவு பெரிய பங்களாவுக்குள்ளும் புகுந்து கைநிறைய சம்பாதித்து(!) வருவான்.
இவனது இலக்கே செட்டிநாட்டுப் பகுதியில் மாதக் கணக்கில் ஆளின்றி பூட்டிக் கிடக்கும் பங்களாக்கள் தான். பகலெல்லாம் வெளியிலிருந்து அந்த வீட்டின் போக்குவரத்து வசதிகளை நோட்டம் பார்ப்பான். மாலை ஆறு மணிக்கு லோக்கல் சினிமா தியேட்டரில் படம் பார்ப்பன். படம் முடிந்து வரும்போதே புரோட்டாவும் குவாட்டரும் வாங்கிக் கொண்டு வருவான். நோட்டம் பார்த்த வீட்டுக்குள் அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் புகுந்து குவாட்டரைத் திறப்பான். குடித்து முடிப்பதற்குள் புரோட்டாவும் காலியாகி இருக்கும். கையைத் துடைத்துக் கொண்டு அந்த வீட்டின் கஜானா பூட்டுகளை கதம் செய்வான்.
முதல் நாளே வேலை முடிந்துவிட்டால் விடிவதற்குள் தேடிய பொருளை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவான். இல்லாவிட்டால் உழைத்த(!) களைப்பு நீங்க பகல் பொழுதை அந்த பங்களாவுக்குள்ளேயே தூங்கிக் கழிப்பான். இடையில் கண் முழித்
தாலும் பீடி தான் அவனுக்கு பசியாற்றி. மாலையில் மீண்டும் தியேட்டர், குவாட்டர், பிரியாணி என ரவியின் ஆபரேஷன் தொடரும். ஒருமுறை ஒரு வார காலம் ஒரு பங்களாவில் தங்கியிருந்து அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுச் சென்ற வரலாறும் ரவிக்கு உண்டு.
ரவிக்கு தேனியில் ஒரு காதலி இருந்தாள். கொள்ளையில் சிக்கும் பணம், நகைகளை கொண்டு போய் அவளிடம் கொடுப்பான். அத்தனை நகைகளையும் அவளுக்குப் போட்டு அழகு பார்ப்பான். ஆசையும் மோகமும் தீர்ந்ததும் அவளுக்குத் தேவையானதை வெட்டிவிட்டு, அப்படியே தூத்துக்குடிக்கு தொழில்முறை(?) பயணம் போவான்.