போர்முனை டு தெருமுனை 7: தண்ணீர்த் தொழில்நுட்பங்கள்


நகரங்களிலும் கிராமங்களிலும் குடங்களில் பெண்கள் நீர் சுமந்து செல்வதுபோல், பனிமலையை ஒட்டிய கிராமத்துப் பெண்கள் அகன்ற இலைகளில் பனிக்கட்டிகளைச் சுமந்துசெல்வதை நான் கவனித்திருக்கிறேன்.

பனிக்கட்டிகளே மலைக்கிராமங்களின் நீராதாரம். நான் எனது மலையேற்றத்தின்போதும் பனிப்படிவுகளிலிருந்து உருகிவரும் நீரைத்தான் நேரடியாகப் பருகினேன். இப்படி சில நாட்கள் தொடர்ந்து நீரைப் பருகியதால் தொண்டையில் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டேன். சுத்திகரிக்கப்பட்ட நீரின்றி ஒரு சில நாட்களைக்கூட கடத்த முடியாத சூழலில், எப்படி நமது ராணுவ வீரர்கள் மாதக்
கணக்கில் பனிமலைகளிலும் பாலைவனங்களிலும் காடுகளிலும் காவல் புரிகிறார்கள்?

முதுகுப் பையில் நீர் சுத்திகரிப்பு

நாம் வீடுகளில் பயன்படுத்தும் நீர் சுத்திகரிப்புக் கருவிக்கு மின்சாரம் தேவை. இவ்வகை சுத்திகரிப்புக் கருவிகள் உறைநிலை வெப்பநிலையில் வெடித்துவிடும். ராணுவ விஞ்ஞானிகள் உறைநிலை வெப்பத்திலும் பாதிப்படையாத நீர் சுத்திகரிப்புக் கருவியை 
வடிவமைத்திருக்கிறார்கள். 3 டிகிரி வெப்ப நிலையிலும் இயங்கக்கூடியது இது. மைனஸ் 25 டிகிரி வெப்பநிலையிலும் இக்கருவி பாதிப்படையாது. இப்படி உறைநிலையிலும் பாதிப்படையாத சவ்வு (Membrane) தான் இக்கருவியின் சூட்சுமம்.

இதன் பராமரிப்பும் சுலபம். தொழில்நுட்பப் பணியாளரின் உதவியின்றி மூன்று நிமிடங்களில் சவ்வை மாற்றிக்கொள்ளலாம். மின்சாரத்தின் தேவையில்லாமல் கைகளால் இயக்கக்கூடிய பம்ப் மூலமாக இதில் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. கலங்கலான நீரையும் தெளிவாக்கும் இக்கருவி, கார்பன் துகள்களையும் நுண்ணுயிர்களையும் பிரித்தெடுக்கும். ஒரு மணி நேரத்தில் 12 முதல் 15 லிட்டர் நீரைச் சுத்திகரிக்கலாம். 4.7 கிலோ எடையுள்ள இந்தச் சுத்திகரிப்புக் கருவியை முதுகுப் பையில் சுலபமாகச் சுமந்து பாதுகாப்புப் பணியிடங்களுக்கு எடுத்துச்செல்லலாம்.8 முதல் 10 வீரர்களின் ஒரு நாள் தண்ணீர்த் தேவையை முதுகுப்பைக் கருவி பூர்த்திசெய்யும். பனிமலையில் மட்டுமின்றி, பாலைவனத்திலும் குக்கிராமங்களிலும் இயற்கைப் பேரழிவுப் பகுதிகளிலும் இந்த சுத்திகரிப்புக் கருவியை மிக எளிதாக எடுத்துச்சென்று மின்சாரத்தின் உதவியின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரம் அல்லது மின் கலன் மூலமாகப் பம்ப்பை இயக்கும் வசதியும் உண்டு. ராஜஸ்தானின் ஜோத்பூரிலுள்ள பாதுகாப்பு ஆய்வகத்து (Defence Lab-Jodhpur) விஞ்ஞானிகளின் தயாரிப்பு இது.

வடிகட்டும் தண்ணீர் லாரி

விபத்து, பேரிடர், தீவிரவாதத் தாக்குதல் அல்லது போர்க்காலங்களில் நீர்நிலைகள் உயிரி, அணு மற்றும் வேதிப்பொருட்களால் பாதிக்கப்படலாம். நீர்நிலைகளை நச்சுப்படுத்துவது போர்த் தந்திரங்களில் ஒன்று. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எப்படி ராணுவ வீரர்களின் தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவது? ஒரு லிட்டர் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் யானைப் பசிக்கு சோளப்பொரி. மேலும் புட்டிகளைக் கொண்டுசெல்வதற்கான வாகனச் செலவும் உண்டு. ராணுவ விஞ்ஞானிகள் வடிவமைத்த குடிநீர் சுத்திகரிப்பு வாகனம், இச்சூழல்களில் குடிநீர்த் தேவைகளைச் சமாளிக்க ஏற்றது.

எதிர் சவ்வூடு பரவல் (Reverse Osmosis) நுட்பத்தில் இயங்கும் நீர் சுத்திகரிப்புக் கருவி பொருத்தப்பட்ட இந்த ராணுவ வாகனம் 7.5 டன் எடையைத் தாங்கும். நீர் நிலைகளிலிருந்து நேரடியாக நீரை உறிஞ்சி, மணிக்கு 3,000 லிட்டர் குடிநீரை வழங்கும் இவ்வாகனத்தைத் தேவையான இடங்களுக்கு ஓட்டிச்சென்று, அங்கிருந்தே தண்ணீர் எடுத்து வடிகட்டி உடனுக்குடன் வழங்கலாம்.

நீர்-இரும்பு பிரித்தெடுப்பு

கிழக்கிந்தியாவில் நீரில் இரும்பு அதிகமாகக் கலந்திருக்கும். ஒரு லிட்டர் நீரில் 0.3 மில்லிகிராம் வரை இரும்பு இருக்கலாம். ஆனால், 40 மில்லிகிராம் வரை இரும்பு கலந்திருக்கும் நீரை என்ன செய்வது? பழுப்பு நிறமான இந்நீர், பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். நீரிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் கருவியையும் நமது ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.மணிக்கு 300 லிட்டர் நீரை இக்கருவி சுத்திகரிக்கும். ராணுவ முகாம்களில் இக்கருவி ஒரு வரப்பிரசாதம்.

x