முதுமை எனும் பூங்காற்று - 1


முதுமை. இந்த ஒற்றை வார்த்தை, மனிதர்களின் மனதில் ஏற்படுத்தும் சலனங்கள் சாதாரணமானவை அல்ல. இத்தனை நாட்கள் துடிப்புடனும் துள்ளலுடனும் வாழ்க்கையை நகர்த்தியவர்கள், பால்ய காலத்துப் பரவசங்களையும் இளம் வயதின் பொக்கிஷத் தருணங்களையும் நினைவுகூர்ந்து முந்தைய வருடங்களுடன் ஒரு ஊடாட்டம் நிகழ்த்திக்கொண்டிருந்தவர்கள், முதுமையை ஏனோ ஒரு முற்றுப்புள்ளியைப் போல பார்க்கிறார்கள். உடலளவிலும் மனதளவிலும் – வரவழைத்துக்கொண்ட சோர்வுடன், முதுமையை மேலும் முதுமையாக்கிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். ‘இளமை திரும்புதே…’ என்று இனிய இன்னிங்ஸைத் தொடங்குபவர்களும் உண்டு.

முதுமையை இரண்டாம் குழந்தைப் பருவம் என்பார்கள். வயது முதிர்ச்சியடைய… அடைய குழந்தைமைக்குத் திரும்புவார்கள் பலர். பிடிவாதம், விட்டுக்கொடுக்காத தன்மை என்று குடும்பத்தினரிடம் வித்தியாசமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்கள். சிலரோ, இன்னும் கனிந்து இனிமையை அனைவருடனும் பகிர்ந்துகொள்வார்கள். இந்தத் தொடரில், முதுமையின் சாதகங்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், தீர்வுகள் என்று பல விஷயங்களைப் பார்ப்போம்.

பணி ஓய்வும் பதற்றமும்

முதுமை என்பதற்கான முதல் அறிகுறியாகப் பலரும் கருதுவது, பணி ஓய்வைத்தான். 55 வயதைக் கடக்கும்போதே, பணி ஓய்வு தொடர்பான பதற்றம் அவர்களிடம் தொற்றிக் கொள்கிறது. பரபரப்பாக வேலை பார்த்துவந்தவர்கள், மிச்சமிருக்கும் வாழ்க்கை எப்படி அமையுமோ எனும் கவலையில் ஆழ்ந்துவிடுகிறார்கள். முன்பே சொன்னதுபோல், எல்லோரும் அப்படி இருப்பதில்லைதான். பணி ஓய்வை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு. ஆனால், பெரும்பாலானோர் அது தொடர்பான அழுத்தங்களுடன்தான் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உரிய காலத்தில் குடும்பப் பொறுப்புகளை முடித்துவிட்டவர்கள், உற்சாகத்துடன் முதுமை வாழ்க்கைக்குத் தயாராகிவிடுகிறார்கள். புதிய பொறுப்புகளுக்கும் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.

ஆனால், காலம் கடந்த திருமணம், தாமதமான பிள்ளைப்பேறு, போதுமான சம்பளத்துடனான வேலை கிடைக்காதது, தலைமுறையாகத் தொடரும் கடன் பிரச்சினைகள் போன்ற பல்வேறு காரணிகளால், பொறுப்புகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாதவர்கள், இயல்பாகவே ஒருவித பயத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்தப் பயம் அவர்களை மட்டுமல்ல; அவர்களைச் சுற்றியிருக்கும் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தங்களின் வருங்காலத்திற்கான சேமிப்பு என்பதைவிட, பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் போன்றவற்றுக்கான சேமிப்பை மனதில் கொண்டு நிறையவே உழைக்கிறார்கள். பல வகைகளில் சேமிப்பைத் தொடர்கிறார்கள்.

பணம் படுத்தும் பாடு

பணம் அனைத்திற்குமான தீர்வு அல்ல என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலான விஷயங்களைப் பணமே இங்கு தீர்மானிக்கிறது. நட்புகள், உறவுகள், சமூக அந்தஸ்து என்று பல்வேறு விஷயங்கள் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டே நம் சமூகத்தில் கட்டமைக்கப்படுகின்றன. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், அவற்றின் சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கும்.
பணம் பிரதானம் என்றாகிவிட்ட இன்றைய சூழலில், செலவுகளைக் குறைப்பது, சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் அத்தியாவசியங்களுக்கே தடைபோட்டுக்கொள்வது என்று வாழ்பவர்கள் நம்மில் பலர். இதில் இன்னொரு வகையினர் உண்டு. நகர வாழ்க்கை என்பது செலவுகளுக்கே வித்திடும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். உள்ளூரிலேயே பணிபுரிந்து, ஒரு உத்தரவாதமான எதிர்காலத்தைக் கட்டமைக்க விரும்புவார்கள். இதை மனதில் கொண்டு, நகரங்களுக்குப் பணி மாறுதல் கிடைத்தாலும் மறுத்துவிடுவார்கள்.

ஆனால், விதி இவர்களின் திட்டமிட்ட வாழ்க்கையைத் திசை மாற்றிவிடும். உள்ளூருக்குள்ளேயே தன் மொத்தக் குடும்பமும் செட்டில் ஆகிவிடும் என்று இவர்கள் நினைத்தால், கல்வி, வேலை, திருமணம் என்று பல்வேறு காரணங்களை வைத்து இவர்களின் பிள்ளைகள் நகரங்களுக்குப் பறந்துவிடுவார்கள். வாழ்க்கையின் புதிய சவால்களை இவர்கள் எதிர்கொள்ள நேரும்.

அரசுப் பணியில் இருந்தவர்கள், ஓய்வூதியம் போன்ற சில பலன்களைப் பெற்றிருப்பார்கள். தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பல்வேறு வகைகளில் செய்த சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றைச் சார்ந்திருக்க நேரிடும்.
தொடக்கத்தில் இனிமையாக இருக்கும் ஓய்வு நாட்கள், காலம் செல்லச் செல்ல துயரமாக மாறிவிடும். பிள்ளைகளின் நலன் கருதி தொலைதூர தேசத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டவர்கள், பிற்பாடு சொந்த மண்ணை விட்டு வர முடியாமல், பிள்ளைகளுடன் சேர்ந்து வசிக்க முடியாமல் அவதியுறத் தொடங்குகிறார்கள்.

வாரிசுகள் தரும் வருத்தங்கள்

வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினரில் பலர், பெற்றோர்களைப் பராமரிப்பதைவிடவும், பணம் அனுப்பிவிட்டால் போதும் என்று நினைப்பவர்கள். திருமண உறவுகளுக்குப் பின்னர் மாற்றத்துக்குள்ளாகும் வாழ்க்கையில் பெற்றோருக்கு எந்த இடத்தைத் தருவது எனும் குழப்பத்தில், விலகியே நிற்கும் நிர்பந்தங்களுக்கு ஆளாகின்றவர்கள் பலர். அதனால்தான் அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள், விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பிள்ளைகளின் நலனுக்காகத் தங்கள் வாழ்நாள் கனவைத் தொலைத்தவர்கள், இன்று பிள்ளைகள் கனவில் ஒரு அங்கமாகக்கூட இல்லாமல் போவது துயரத்தின் உச்சம். இதுதான் ஓய்வு காலம் குறித்த பயத்தின் முக்கியக் காரணம்.

அவர்களும் காரணம்

அதேசமயம், இதுபோன்ற சூழல் உருவாக, பெற்றோரும் ஒரு காரணமாக இருப்பதைப் பல நிகழ்வுகள் காட்டுகின்றன. பிள்ளைகளின் வேலை, சம்பளம் போன்ற பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில், பெற்றோர் நடந்துகொள்ளும் முறை பிள்ளைகளுக்கு இடையே வேறுபாடுகளையும் மனக் கசப்புகளையும் ஏற்படுத்துவதுண்டு. உள்நோக்கம் ஏதும் இல்லாமல், இயல்பாகச் 
செய்யும் சில விஷயங்கள் இந்தப் பிளவுகளை பிரிவுகளை நோக்கித் தள்ளுவதையும் பார்க்கிறோம்.

பொருளாதார ரீதியாக வசதியான நிலையில் இருக்கும் பிள்ளைகளைச் சார்ந்திருக்கலாம் என்று முடிவெடுக்கும் பெற்றோர், அதற்கான வழிகள் அடைக்கப்படும்போது தனித்துவிடப்பட்டதாகக் கவலையில் ஆழ்கிறார்கள். வசதி குறைவான பிள்ளைகளுக்குத் தொந்தரவு தரக் கூடாது என்று கருதும் பலர் தங்கள் கஷ்டங்களைத் தங்களுடனேயே புதைத்துக்கொள்கிறார்கள்.

தலைமுறை இடைவெளி

தலைமுறை இடைவெளி எனும் பிரச்சினை இந்தச் சூழலை மேலும் சிக்கலாக்கிவிடுகிறது. அலுவலக நேரத்தைத் தாண்டி, வீட்டிலிருக்கும் சமயங்களிலும் வேலை பார்க்க வேண்டிய சூழலில் இருக்கும் இன்றைய தலைமுறையினரைப் புரிந்துகொள்வதில் மூத்தவர்கள் பலருக்குச் சிக்கல்கள் உண்டு. அது தொடர்பான புரிதலின்மை, ஒரு கட்டத்தில் ‘என் பிள்ளையே என்னை ஒதுக்குகிறானே’ எனும் விரக்தியை நோக்கி அவர்களைத் தள்ளிவிடுகிறது. தன்னை மதிக்கவில்லை, நாம் பாரம் என்று நம் பிள்ளைகளே நினைக்கிறார்கள் என்று தங்களுக்குத் தாங்களே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

இளம் தலைமுறையினரோ, இது பற்றி தங்கள் பெற்றோரிடம் நிதானமாக உரையாட நேரம் ஒதுக்கத் தவறிவிடுகிறார்கள்.
ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து பேசினால், பெரியவர்கள் புரிந்துகொள்வார்கள். குறைந்தபட்சம், பிள்ளைகள் நம் பிரச்சினையை உணர்கிறார்கள் என்று ஆறுதலாவது அடைவார்கள். ஆனால், பெரும்பாலான இளைஞர்கள் அதைச் செய்வதே இல்லை. உண்மையில், பிள்ளைகளிடம் பெரியவர்கள் எதிர்பார்ப்பது அன்பையும் அரவணைப்பையும்தான். பிள்ளைகளோ, இன்றைய அவசர உலகின் சிடுக்குகளைப் பெற்றோர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். இதனால்தான், பிரிவுகள், பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

இது போன்ற பிரச்சினைகளை அணுகுவது எப்படி?

(காற்று வீசும்...)

x