தாய்மை எனும் பேரானந்தப் பயணத்தில் முதல் முப்பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் தொடர்பான ஆலோசனைகள் நிறைவுற்ற நிலையில் இரண்டாவது பருவத்துக்கான அறிவுரைகள் இந்த அத்தியாயம் முதல் தொடங்குகிறது.
கர்ப்பவதிகளுக்கு அன்றாடம் யாரேனும் ஒருவர் இலவசமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார்கள். சிலர் எனது அனுபவம் என்பார்கள், சிலர் காலம்காலமாக இதுவே வழக்கம் என்பார்கள். இப்படிப்பட்ட கருத்துகளால் கர்ப்பகாலம் முழுவதுமே சந்தேகங்கள் நீண்டு கொண்டு இருப்பது இயல்பே.
அப்படியாக இரண்டாம் பருவத்தில் கர்ப்பவதிகளுக்கு பொதுவாக எழும் சில சந்தேகங்களுக்கு எனது ஆலோசனைகள்...
1.இரண்டாம் பருவத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?
மிக மிகப் பாதுகாப்பானது. ஒருவேளை இரண்டாம் பருவம் ஆரம்பித்தும்கூட நீங்கள் இன்னும் உடற்பயிற்சியைத் தொடங்காவிட்டால் இன்றே தொடங்குங்கள். ஆனால், மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்று உரிய பயிற்றுநர்கள் மூலம் மேற்கொள்ளுங்கள்.
இரண்டாம் பருவத்தில் வாரத்தில் மூன்று முதல் 5 நாட்களுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது நலமே.
ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை 3 நிமிடங்களாவது நிற்கவும் அல்லது அலுவலகத்தில் இருந்தால் ஒரு குறுநடை சென்று வரவும். இல்லையேல், காலை அல்லது மாலை என உங்களுக்கு வசதிப்பட்ட ஏதாவது ஒரு நேரம் 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்.
உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உங்களின் இன்சுலின் உணர்திறனைக் குறைக்கும். புரதச் சத்து உடலால் கிரஹிக்கப்படுவதில் சுணக்கம் ஏற்படும். கர்ப்பகால சர்க்கரை நோய், பேறுகாலத்துக்குப் பிந்தைய தைராய்டு தொந்தரவு ஆகியன அழையா விருந்தாளிகளாக வந்து சேரும்.
2.எனது மருத்துவரால் நான் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளேன். அப்படியென்றாலும்கூட நான் உடற்பயிற்சி செய்யலாமா?
உங்களின் மகப்பேறு மருத்துவருடன் எப்போதும் மனம்விட்டுப் பேசுங்கள். அவரிடமே வெளிப்படையாகக் கேளுங்கள் ஓய்வு என்பதை அவர் உங்களின் உடல்நிலை கருதி பரிந்துரைத்தாரா அல்லது உங்களின் குடும்பத்தாரின் நெருக்கடியால் பரிந்துரைத்தாரா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் மருத்துவர் உங்களிடம் மனம்விட்டுப் பேசுபவராக இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் மருத்துவர் உங்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பவராக இல்லாமல் உங்களுடன் உளப்பூர்வமாக உரையாடுபவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை அவர் சர்வாதிகார தொனியில் இருந்தால் உடனே மருத்துவரை மாற்றுங்கள்.
படுக்கை ஓய்வு என்பது இன்சுலின் உணர்திறனைக் குறைப்பதோடு ஹார்மோன் சம்பந்தமாக பல்வேறு உபாதைகளையும் ஏற்படுத்திவிடும். ஒருவேளை மருத்துவரின் பரிந்துரைப்படி நீங்கள் படுக்கை ஓய்வில் இருந்தே ஆக வேண்டிய நிலை என்றால் உடற்பயிற்சிகளை அவர் அறிவுரை இன்றி செய்யாதீர்கள். படுக்கையில் இருந்தவாறே தசைகளை விரித்து சுருக்கும் சில எளிமையான பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வது கருவுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
3.கர்ப்பகாலத்துக்கு என்று நீங்கள் ஏதாவது யோகா பரிந்துரைப்பீர்களா?
கர்ப்பம் பெண்களுக்கு பொதுவானது என்றாலும் ஒவ்வொரு கர்ப்பவதியும் மற்றவரில் இருந்து மாறுபட்டவர் அல்லவா? ஆதலால் பொதுவாக யோகாசனங்களைப் பரிந்துரைக்க இயலாது. மாறாக அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியர் மூலம் பயிற்சி பெறுவதே சிறப்பு.
உள்ளூர் யோகா நிபுணர்களை அணுகியும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றும் யோகாசனம் செய்யலாம். யோகா செய்வதால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரணக் கோளாறு, சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். மேலும், உணவுப் பழக்கத்தைப் போல் யோகாசனமும் ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்றாற் போல் மாற்றியமைக்கப்பட வேண்டியது. ஆதலால் அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரே சிறந்த தீர்வு.
4. சுற்றுலா செல்லலாமா?
நிச்சயமாகச் செல்லலாம். ஹனிமூன் போல் இதைதம்பதியர் பேபிமூன் என இக்காலத்தில் கொண்டாடுகின்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை, பயண முன்னேற்பாடுகள் அவசியம். விமானப் பயணத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் என்பதால் எப்போதும் உங்களின் நீர்ச்சத்து குறையாத அளவுக்குத் தண்ணீர், உணவுப் பழக்கத்தைத் திட்டமிடுங்கள். சாலை வழிப் பயணம் என்றால் அவ்வப்போது வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பாக சற்றே காலாற நடந்து பின் பயணத்தைத் தொடரவும். இதனால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
அதேபோல் நீங்கள் செல்லும் இடங்களில் நல்ல உணவும், தண்ணீர் வசதியும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். புதுவகை உணவுகளை பிரயாணத்தின்போது சோதித்துப் பார்க்காதீர்கள். உங்களுக்கு ஏற்கெனவே பரிச்சியமான இடங்களுக்குப் பயணப்படுவது புத்திசாலித்தனம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
மதுபான விடுதிகள், புகைப்பவர்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லாதீர். அதனால் உங்களுக்கு தொண்டைப் புண் போன்றவை ஏற்படலாம்.
5. எனது மாமியார் என்னை லட்டு, ஹல்வா சாப்பிடச் சொல்கிறார். இவை கர்ப்பகாலத்துக்கு உகந்த உணவா?
நிச்சயமாகச் சாப்பிடுங்கள். அவர் சரியாகவே சொல்லியிருக்கிறார். உணவுப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரை டயட்டீசியன் சொல்வதைவிட பாட்டியும், அம்மாவும், அத்தையும் சொல்வதே பெரும்பாலும் சரியானதாக இருக்கும்.
6. என்னை மலச்சிக்கல் வாட்டுகிறது. இதற்குத் தீர்வுதான் என்ன?
* காலை எழுந்தவுடன் ஒரு குவளை வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துங்கள்.
* ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் அரை டீஸ்பூன் குல்கந்து சாப்பிடுங்கள்.
* இரவு உணவில் வைட்டமின் பி-6 நிறைந்த உணவைத் தவற விடாதீர்கள்.
இவற்றைப் பின்பற்றினால் நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.
7. முதுகுவலிக்கும் தீர்வு சொல்லுங்களேன்...
உணவும், உடற்பயிற்சியும்தான் இதற்குத் தீர்வு. இதைத் தவிர்த்து சிற்சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்; முதுகுவலி அண்டாது.
* நிற்கும்போது உங்கள் உடல் எடையைச் சமாளிக்கும் வகையில் இரண்டு பாதங்களையும் சரியாக சமன்படுத்தி நின்று பழகுங்கள்.
* உங்களின் உட்புற தொடைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். யோகாவில் இதற்குத் தீர்வுண்டு.
* அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர வேண்டியிருந்தால், காலை தொங்கப்போடாமல் ஒரு ஸ்டூலை வைத்து அதன் மீது காலை நீட்டிக் கொள்ளுங்கள்.
* போதிய அளவு தண்ணீர் குடிக்கவும். காபி, டீ தவிர்ப்பது நலம். கோலா பானங்கள் கூடவே கூடாது.
* அடிக்கடி எழுந்து நில்லுங்கள்.
* கால்சியம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள்.
இரண்டாம் பருவ கர்ப்பவதிகளின் பொதுவான சந்தேகங்களுக்கான ஆலோசனை இவை. அடுத்த அத்தியாயத்தில் அவர்களுக்கான பிரத்யேக உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.
(வளர்வோம்... வளர்ப்போம்)