கரு.முத்து
muthu.k@kamadenu.in
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் தம்பிரானாக இருந்த சாமிநாதன், திடீரென அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஆதீனங்களிலிருந்து தம்பிரான்கள் வெளியேறுவதும் வெளியேற்றப் படுவதும் வாடிக்கையானது தான் என்றாலும், சாமிநாதன் விடுவிக்கப்பட்ட விதம்தான் திருவாவடுதுறை மடத்தின் பக்தர்களை வேதனையடையச் செய்திருக்கிறது. சமீபகாலமாக, ஆதீனத்தில் நடந்துவரும் விரும்பத்தகாக நிகழ்வுகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் உள்வட்டார விவகாரங்களை அறிந்தவர்கள்.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது மடாதிபதியான அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் கட்டளைத் தம்பிரானாக நியமிக்கப்பட்டவர் சுவாமிநாதன். இந்நிலையில், இவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தம்பிரான் பொறுப்பிலிருந்தும் மடத்தின் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக, மடத்தின் தரப்பில் செப்டம்பர் 15-ம் தேதி திடீரென அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே சாமிநாதனின் காவி உடை, உருத்திராட்ச மாலை ஆகியவை பெறப்பட்டு அதற்குப் பதிலாக அவருக்கு வெள்ளை ஆடை தரப்பட்டது. வெள்ளை ஆடை சகிதம் வெளியேறிய சாமிநாதன், நேராகக் காசிக்குச் சென்றார். அங்கு மீண்டும் காவியுடை தரித்ததுடன், தான் சன்னியாசியாகத் தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.