உள்ளத்திலும் இவர் காந்திதான்!- மலையாள மண்ணில் ஒரு மகாத்மா


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சாலையில் சென்றுகொண்டிருப்பவர்கள், சாச்சா சிவராஜனைக் கண்டால் தங்களையறியாமல் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். அமைச்சர்களே இவரைப் பார்த்தால், இருக்கையிலிருந்து எழுந்து வணங்கி நிற்கிறார்கள். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் வெலியம் பகுதியைச் சேர்ந்தவரான இந்த சாச்சா சிவராஜன், சாட்சாத் காந்தியைப் போலவே இருக்கிறார் என்பதுதான் இந்த மரியாதைக்குக் காரணம். தோற்றத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் காந்தியைப் பிரதிபலிக்கும் ஆளுமையாக நம் முன் வாழ்ந்துகொண்டிருக்கும் சாச்சா சிவராஜனுக்கு வயது 91.

வெலியத்தில் போய், ‘காந்தி தாத்தா வீட்டுக்குப் போகணும்’ என்று பாதை கேட்டால், பச்சைக் குழந்தைகூட கைப்பிடித்து அழைத்
துச்சென்றுவிடும். நாம் சென்றிருந்தபோது மகாத்மா காந்தியின் சுயசரிதை மீள்வாசிப்பில் இருந்தார் சிவராஜன். ஒப்பனைகளின் அவசியம் இன்றி, இயல்பாகவே மகாத்மா காந்தியைப் போன்ற உருவ அமைப்பில் இருக்கிறார் இந்த மலையாள காந்தி.
நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “எனக்குச் சின்ன வயசுல இருந்தே காந்தின்னா ரொம்பப் பிடிக்கும். அப்ப, சுதந்திரப் போராட்டம் உச்சத்துல இருந்துச்சு. அடுத்தவனைக் கொல்றதுல இல்ல வீரம். அடுத்தவன் செய்யக்கூடிய கொடுமையை மறந்து, பகைவனுக்கும் இரங்கணும். அதுதான் வீரம்னு அகிம்சையை கையில எடுத்துப் போராடினார் காந்தி. அது அந்தக் காலத்துல எனக்குள்ள மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு.

எனக்கும் காந்திக்கும் 60 வயசு வித்தியாசம். என் பால்ய காலத்துல அவரை நேர்ல பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு. அவர் பேச்சைக் கேட்டிருக்கேன். பள்ளிக்கூடத்துலயும் டீச்சருங்க காந்தியோட கொள்கைகளைச் சொல்லுவாங்க. காந்தியத்தின் அடிப்படையே ஜீவகாருண்யம்தான். என்னோட பெற்றோரும் நிறைய தான, தர்மங்கள் செஞ்சவங்கதான். அதனால, வளரும்போதே எனக்கு ஜீவகாருண்யக் கொள்கை மேல பிடிப்பு வந்துடுச்சு.

x