நூலகத்திலிருந்து ஒரு நூலாசிரியர்!- 69 வயதிலும் அசராத பாண்டுரங்கன்


கே.சோபியா
readers@kamadenu.in

குற்றாலத்திலேயே குடியிருப்பவர்கள் அருவியில் குளிக்க அவ்வளவாய் ஆர்வப்பட மாட்டார்கள் என்பார்கள். அதேபோல், நூலகப் பணியில் இருப்பவர்களில் பலர் வாசிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் பொதுவான கருத்து உண்டு. நூலகராக இருந்துகொண்டே எழுத்தாளராகப் பரிணமித்தவர்கள் மிக அரிது. அப்படி ஒரு அரிதான எழுத்தாளர்தான் மதுரை ந.பாண்டுரங்கன்.

இவர் எழுதிய ‘அறியப்படாத மதுரை’ நூல் இரண்டே வருடங்களில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. மதுரையின் வீதிகள், நீர்நிலைகள், கிணறுகள் என்று ஒவ்வொன்றுக்குள்ளும் புதைந்துள்ள வரலாற்றைத் தோண்டியெடுத்து காட்சிப்படுத்திய புத்தகம் அது. வரலாறு, புனைவு என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் 69 வயது பாண்டுரங்கன், அடுத்தாக, ‘விருதுநகர் வரலாறும் வாழ்வியலும்’ எனும் புத்தகத்தை எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பியிருக்கிறார்.

“நூலகராக இருந்ததால்தான் எழுத்தாளரானேன் என்று சொல்லிவிட முடியாது. நூலகங்களுக்குச் சென்று வாசித்ததால்தான் எழுத ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். அப்போது மதுரையில் தெருவுக்குத் தெரு படிப்பகங்கள் இருக்கும். திராவிட இயக்க, பொதுவுடமை இயக்கத்தினர் நிறைய வாசக சாலைகளை அமைத்திருந்தார்கள். அங்கெல்லாம் சென்றதன் விளைவாக 1960-களிலேயே கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். திமுக பிரமுகரான மதுரை (மேயர்) எஸ்.முத்து நடத்திய ‘போர்வாள்’ இதழில், என்னுடைய 19-வது வயதில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைத் தொடர்ந்து, முத்துவுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஏற்கெனவே திமுக மாணவர்களோடு சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் நான் பங்கேற்றிருந்ததை முத்து அறிந்திருந்தார். மாவட்ட நூலக ஆணைக் குழு தலைவராக இருந்த அவர், எனது குடும்பச் சூழலை அறிந்து 1971-ல் நூலகத்தின் கடைநிலை ஊழியர் வேலையில் என்னைச் சேர்த்துவிட்டார். அங்கே புத்தகங்களுடன் ஏராளமான பருவ இதழ்களும் சிற்றிதழ்களும் வரும் என்பதால், அவற்றையும் வாசிக்க ஆரம்பித்தேன். விளைவாக பழ.நெடுமாறனின் ‘குறிஞ்சி', நா.பார்த்தசாரதியின் ‘தீபம்’, கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தாமரை’ மற்றும் ‘செம்மலர்’ போன்ற இதழ்களில் கவிதை, சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

x