மஹா பெரியவா 31: அருளே ஆனந்தம்


பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

சமூகப் பணி, பொதுப் பணி என்றெல்லாம் இன்றைக்கு நிறைய சொல்கிறோம். சிலர் ஆத்மார்த்தமாகச் செய்கிறார்கள். அத்தகையோர், ‘என் பேரே யாருக்கும் தெரியக்கூடாது’ என்கிற நிபந்தனையோடுதான் இதில் இறங்குகிறார்கள். இடக்கை செய்வது வலக்கைக்குத் தெரியக் கூடாது என்பது இதைத்தான்.

சந்நியாசிகள் வாய்மொழியாக ஒரு உத்தரவிட்டாலே, அதை நிறைவேற்றுவதற்குப் பெரும் படையே காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் சில சந்நியாசிகள் தாங்களே முன்னுதாரணமாக இருந்து, பொதுக் காரியங்களை நேரில் இருந்து நிறைவேற்றியதும் உண்டு.
அதற்கு கண்கண்ட உதாரணம்... நம் மகா பெரியவா!

ஊர் ஊராகப் போய்க் குளம் வெட்டி இருக்கிறார் காஞ்சி மகான். கிராமங்களில் தூர்ந்து போன குளங்களையும், பெரிய பெரிய கிணறுகளையும் புதுப்பித்திருக்கிறார்.

சமூகப் பணி என்றால், அங்கே பலதரப்பட்டவர்களும் கூடுவார்கள். அனைவரையும் அனுசரித்து நடந்து கொண்டால்தான் காரியம் கைகூடும். மகானும் அதுபோல் எல்லோரையும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொண்டு காரியம் ஆற்றி இருக்கிறார் என்றால், இங்கே காரியம்தான் முக்கியம். காரணகர்த்தா முக்கியமல்ல என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார் பெரியவா!
தான் சிரமப்படுவது பற்றிக் கவலைப்படவில்லை. குடிமக்கள் அனைவரும் இந்தக் காரியங்களில் ஒன்றுகூட வேண்டும் என்று அதிகமாகவே ஆசைப்பட்டிருக்கிறார்.

எல்லோரையும் ஒன்றுதிரட்ட மகா பெரியவா சொன்ன விஷயம் எது தெரியுமா?

‘‘தயவு தாட்சண்யம் போன்றவை ஒவ்வொருவர் மனசிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த குணம் உள்ளுக்குள் இருந்தால் மட்டும் போதாது. அதை அவ்வப்போது வெளிக்காட்ட வேண்டும் (கெட்ட குணங்களை வெளிக்காட்டுவதில் எல்லோரும் முனைப்பாகவே இருக்கிறார்கள். அதுவா சமூகத்துக்குத் தேவை? கெட்ட குணத்தை வெளிப்படுத்துவதால் வீட்டுக்கும் சரி... நாட்டுக்கும் சரி... எந்தப் பலனும் விளையப் போவதில்லை. ஆனால், நற்குணங்களை அவசியம் வெளிக்காட்டியே ஆக வேண்டும்). அதற்கு உருவம் கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை இந்த உடலால் அவசியம் செய்ய வேண்டும்.

வாரத்தில் ஒரு நாளாவது உடலால் ஆன ஒத்துழைப்பை சகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. யாராக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ‘ஹாலிடே’ இருக்கிறது அல்லவா? அன்றைக்கு இந்த உலகத்துக்கு நாம் செய்யும் உபகாரமாக உடல் உழைப்பால் ஒரு பொதுப் பணி செய்ய வேண்டும்.

மனப் பூர்த்தியுடன் அல்லது மனப் பூர்த்திக்காக ‘பூர்த்த தர்மம்’ செய்ய வேண்டும் (‘பூர்த்தி’ என்றால், சந்தோஷம். எனவே, சந்தோஷமாகச் செய்யக் கூடிய இந்த தர்மம் ‘பூர்த்த தர்மம்’ ஆகி இருக்கலாம்).

அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் காரியங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் காரியங்களை ‘லீவு’ நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், இதோடுகூட பார்வதி, பரமேஸ்வரனின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னால் ஆனதை ஒரு ‘டியூட்டி’யாக இந்த நாளில் செய்யத்தான் வேண்டும்.

இதற்காக அதையும் விடக் கூடாது. அதற்காக இதையும் விடக் கூடாது.’’

பார்த்தீர்களா? நாமெல்லாம் குடும்பம் என்றால், அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, குழந்தைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மகா பெரியவா பார்வதி, பரமேஸ்வரனின் லோக குடும்பம் என்று ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

எப்படி வீட்டுக்கு அவ்வப்போது நம்மால் ஆன வேலைகளைச் செய்து கொடுக்கிறோமோ, அதுபோல் லோக குடும்பத்துக்கு நாம் செய்யும் வேலைதான் ‘பூர்த்த தர்மம்’.

ஒரு சுவையான அனுபவத்தை மகா பெரியவாளே சொல்லக் கேட்போம்...

‘‘ஒரு காலத்தில் நானே கிராமம் கிராமமாகப் போய் சமூகப் பணிகளோட அவஸ்யம் பத்திச் சொல்லுவேன். எல்லாரும் ரொம்ப ஆர்வமா கேப்பா. ஆக, இதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுவும் கிராமங்கள்ல குளம் வெட்டுகிற கைங்கர்யத்தைப் பாக்கறப்ப எனக்கே ரொம்ப நிறைவா இருந்தது. இதுல கூலிக்குன்னு ஒத்தை ஆசாமிகூடக் கிடையாது. எல்லாரும் அன்புக்குக் கட்டுப்பட்டு வருவா.

ரொம்பவும் ஏழைகளா இருக்கப்பட்ட இந்தக் கிராமத்து ஜனங்களுக்கு, இதுபோன்ற குளம் வெட்டற வேலை நடக்கறப்பவாவது மடத்துலேர்ந்து ‘அட்லீஸ்ட்’ சாப்பாடு போடணும்னு ஒரு கொள்கை வெச்சிருந்தோம். ஆனா, அதுவும் அடிக்கடி கிடைக்கலை. காரணம், அநேக இடங்களுக்கு அந்தப் பரம ஏழைகள் வேலைக்கு வரும்போது தாங்களே சோறு கட்டிக்கொண்டு 
வந்து விடுவார்கள். அவரவர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை உத்ஸாகத்தோடு சாப்பிட்டுவிட்டுக்குளம் வெட்டினா.

இதைப் பாக்கறப்ப, ‘நம்ம தேசத்துல வாழற ஏழைகளுக்கு இன்னமும் நல்ல பண்புகள் போகவில்லை’னு தோணித்து. அதைவிட இன்னொண்ணு... இவாளுக்கு இருக்கிற இந்த நல்ல குணங்களை சரியான விதத்துல நாம வெளிப்படுத்தலையோனு நினைச்சேன்.
இந்தக் குளம் வெட்டற வேலை மேல்தட்டுலேர்ந்து கீழ்த்தட்டு வரைக்கும் எல்லாரையும் ஒண்ணா இணைச்சுது. கிராமத்துல இருக்கிற
பெரிய பெரிய பண்ணையாரில் இருந்து அவரோட வேலைக்காரன் வரை இதுல பங்கெடுத்துண்டா. அதுபோல் பெரிய கனபாடிகளின் மனைவிலேர்ந்து ஊர்ல புல்லுக்கட்டு சுமக்கிற வேலைக்காரி வரை பாகுபாடு இல்லாம கலந்துண்டா.

இத்தனை பேரையும் ஒண்ணா, ஒரே இடத்துல பாக்கறதுக்கே கண்கொள்ளாக் காட்சியா இருந்தது. ‘குளம் வெட்டப் போறோம்ங்கிற பரோபகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்... இதை சாக்குவெச்சு இப்போது இப்படி சமூகம் முழுக்க இங்கே ஐக்கியமாகி இருக்கே... இதுவே போதும்’னு சந்தோஷப்பட்டேன்.

ஒரு தடவை மாயவரத்துக்கிட்டே இப்படித்தான் ஒரு குளம் வெட்டற வேலையில எல்லாரும் ஒண்ணு சேர்ந்தோம். பகல்ல எல்லாருக்கும் வேற வேலைகள் இருக்கும்கிறதால ராத்திரில இதை வெச்சுண்டோம்.

அன்னிக்கு பவுர்ணமி. நிலா வெளிச்சத்துல சகல ஜனங்களும் ஒண்ணு சேர்ந்து குளம் வெட்டினா. அன்னிக்கு நானே நேர்ல போய் இந்தக் கார்யத்தைப் பார்த்துண்டிருந்தேன்.

வெட்டுவது குளம். ஜலம்னாலே ‘ஜில்’லிப்புதான் நினைவுக்கு வரும். ராத்திரி வேளை வேறு. ஆனந்தமான ஒரு குளுகுளுப்பு. தவிர, அன்னிக்கு ஆகாசத்துல சந்திர பகவானும் ‘ஜில்’லுன்னு குளுமையா இருந்தான். அதோடு தொண்டு புரிவதற்காக வந்திருந்த அத்தனை உள்ளங்களும் ‘ஜில்’லுன்னு அன்பை வர்ஷித்துக் கொண்டிருந்தன.

இப்போது நினைத்தாலும் நெஞ்சு குளிர்கிறது. அப்புறம்தான் ஏகப்பட்ட கார்யங்களை வைத்துக் கொண்டு எங்கெங்கோ சுற்றப் போனதில் கிராமங்கள்ல இருக்கிறவாளுக்கு உத்ஸாகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சு போயிடுத்து. இதை விட்டு விட்டுப் போனது என் தப்புதான்.

தஞ்சாவூர் ஜில்லாவில் மாத்திரம் இரண்டாயிரம் சங்கங்கள் போல் நிறுவி, ஒவ்வொன்றுக்கும் ஒரு முத்ராதிகாரியையும் உப முத்ராதி
காரியையும் தொண்டர்களையும் நியமனம் பண்ணி இருந்தோம்.

தாலூகா கமிட்டி, கோட்டக கமிட்டி, கிராமச் சங்கம் என்று இதை மூன்றாகப் பிரித்திருந்தோம் (நாலு கிராமம் சேர்ந்து ஒரு கோஷ்டம் அல்லது கோட்டகம் என்று வைத்திருந்தோம்). பட்டணங்களில் தெருவுக்கு ஒரு முத்ராதிகாரிகூடப் போட்டோம்.

அநேகமாக தஞ்சாவூர் ஜில்லாவுக்கு உட்பட்ட கிராமங்களில் எல்லாம் மடத்துக்கென்றே பட்டய மான்யம் என்று ஒரு துண்டு நிலமாவது இருக்கும். அவற்றின் வருமானத்தை எல்லாம் முத்ராதிகாரிகளிடமே ஒப்படைத்து இந்த தர்ம கைங்கர்யப் பணிகளைப் பண்ணச் செய்தோம்.

குளம் வெட்டுகிற பணி என்று வந்து விட்டால், சுமார் 5,000 தொண்டர்கள் ரொம்ப ஈடுபாட்டோடு வேலை செய்ய வந்துடுவா. பெரும்பாலும் விடுமுறை நாட்கள்ல சூர்ய உதயத்தில் இருந்து சூரியன் அஸ்தமனம் வரை வேலை நடக்கும். ஒருவேளை இந்த வேலைகளைச் செய்யற நாள் அன்னிக்கு பவுர்ணமி என்றால் ராத்திரி பூரா வெச்சிண்டுடுவோம். ஊர் ஜனங்கள் எல்லாரும் ஏக மனசா பகவந் நாமாவைச் சொல்லிக்கொண்டு குளம் வெட்டியது இப்போதுகூட என் கண் முன்னால் நிற்கிறது.’’

என்கிற மகா பெரியவா, எப்படியெல்லாம் கிராமங்கள் பலன் அடைந்தன என்றும் அடுத்துச் சொல்கிறார்!

(ஆனந்தம் தொடரும்)

x