திவாகரன் பக்கம் திரும்புகிறாரா சசிகலா?


``சசிகலாவுக்கு வெளியிலிருந்து எதிரிகள் முளைத்திருந்தால் இந்நேரம் அவர்களது தலையை சீவியிருப்பேன். ஆனால், உள்ளே இருந்து வந்ததால்தான் அமைதியாக இருக்கிறேன்” சமீபத்தில் திருச்சியில் நடந்த தனது அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் தான் தினகரனுக்கு எதிராக இப்படிச் சீறியிருக்கிறார்.

கடந்த ஒரு வருட காலமாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த திவாகரன் திடீரென இப்படி வெகுண்டெழுந்தது ஏன் என விசாரித்தால் விஷயமே வேற என்கிறது திவாகரன் தரப்பு. இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தத் தரப்பினர், “அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது பாஜக. அதற்கு முன்னதாக அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவர நினைக்கிறார்கள். இப்போதுள்ள சூழலில் அதற்கு தகுதியான நபர் சசிகலா தான் என்பது பாஜகவின் கணக்கு. அதனால் தான் அவரை சிறையிலிருந்து சீக்கிரமே விடுதலை செய்வதற்குத் தேவையான வழிமுறைகளை வகுத்து வருகிறது பாஜக.

பொதுவாக, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமில்லை. அதனால், சசிகலா மூலமாக உச்ச நீதிமன்றத்தில் ‘கியூரேட்டிவ்’ மனு தாக்கல் செய்யவைத்து அதன் மூலம் அவரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கான நடவடிக்கைகளை பாஜக மேலிடத்தின் ஆலோசனைப் படி சுப்பிரமணியன் சுவாமி தான் செய்து வருகிறார். அவருக்குத் தேவையான உதவிகளை திவாகரனும் எம்.நடராஜனின் சகோதரர்களும் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக திவாகரன் டெல்லிக்கே சென்று பியூஷ் கோயல், அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதையடுத்து சுப்பிரமணியன் சுவாமியே பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்துப் பேசுவதாக இருந்தது. ஆனால், அது தேவையற்ற வாதப் பிரதிவாதங்களை வளர்க்கும் என்பதால் தனக்குப் பதிலாக சந்திரலேகாவை அனுப்பி வைத்தார் சுவாமி. சிறையில் சசிகலாவை சந்திரலேகா சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தவர் பெங்களூரு புகழேந்திதான். ஆனாலும், இந்தச் சந்திப்பு பற்றி தினகரனிடம் புகழேந்தி மூச்சுவிடவில்லை. சந்திரலேகா - சசிகலா சந்திப்பு நடந்ததால் கடந்த முறை சிறைக்கு வந்த தினகரன், சசிகலாவைச் சந்திக்க முடியாமல் திரும்பினார். அடுத்த சந்திப்பின் போது தினகரனை அடக்கி வாசிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி இருக்கிறார் சசிகலா. அதனால்தான் இடைத் தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவையும் எடுத்தார் தினகரன்.
அதேசமயத்தில், தினகரனின் சமீபத்திய நடவடிக்கைகள் சசிகலாவை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. அதனால் தினகரனை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு திவாகரன் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறார். திவாகரனும் முன்பு பேசியதை எல்லாம் மறந்துவிட்டு சசிகலாவுக்கு உதவ முன் வந்திருக்கிறார். இதன் தாக்கம் தான் சசிகலாவுக்கு ஆதரவாகவும் தினகரனை எச்சரிக்கும் விதத்திலும் திருச்சி கூட்டத்தில் திவாகரனை பேசவைத்திருக்கிறது. இன்னும் போகப் போகப் பாருங்கள் திவாகரனின் அரசியல் சாணக்கியத்தனத்தை” என்கிறார்கள்.

x