வாரிசுக்கு வழிவிடுகிறாரா வைகோ?- துறுதுறு அரசியலில் துரை வையாபுரி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

"திமுகவில் தன் மகன் மு.க.ஸ்டாலினை முன்னிறுத்துவதற்காக என் மீது கொலைப்பழி சுமத்தி வெளியேற்றப்பார்க்கிறார் கருணாநிதி" என்று குற்றம் சாட்டியவைகோ, இப்போது அதே குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். 1994-ல், எந்த வாரிசுஅரசியலை எதிர்த்து அவர் தனி இயக்கம் கண்டாரோ, அந்த இயக்கமே இப்போது வாரிசு அரசியலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று மதிமுகவுக்குள்ளேயே புலம்பல்கள் கேட்கின்றன.

வைகோவுக்கு துரை வையாபுரி, ராஜலட்சுமி, கண்ணகி என மூன்று பிள்ளைகள். இவர்களில் துரை வையாபுரி கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றாலும், அரசியல் நிகழ்ச்சிகளில் ஒரு தொண்டரைப் போல பங்கேற்பதுண்டு. 2010 வரையில் தானுண்டு தன் தொழிலுண்டு என்றிருந்தவர், அதன் பிறகு அரசியலில் கொஞ்சம் கூடுதலாக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

2014-ல், பட்டாசு தொடர்பாக மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக சிவகாசியில் இருசக்கர வாகனப் பயணத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய நிகழ்ச்சியில்தான் துரை வையாபுரி முதன் முதலில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் வைகோவுக்காக அவர் தீவிர பிரச்சாரம் செய்தார். "இந்தியா முழுவதிலும் மோடி அலை வீசுகிறது, விருதுநகர் தொகுதியிலோ மோடி, வைகோ என்று இரண்டு அலைகள் வீசுகின்றன" என்று அவர் பேசியது அனைத்துப் பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக இடம்பெற்றது.

x