போர்முனை டு தெருமுனை 6 : பாலம் - ராணுவத்தின் பலம்


படை முன்னேறும்போது அந்த அணிவரிசைக்கு முன்னே செல்பவர்கள் ராணுவப் பொறியாளர்கள். ஏன்? படையின் நடைக்குப் பல தடைகள் வரும். நதி குறுக்கிடும். பாறைகள் வழிமறிக்கும் அல்லது பள்ளங்கள் இடை நிற்கும். ராணுவப் பொறியாளர்கள் இத்தடைகளைக் கையாண்டு பாதை சமைத்து, பாலம் அமைத்து, படை மேற்கொண்டு, முன்னேற வழிவகை செய்வார்கள்.
பாலம் அமைப்பது மட்டுமல்ல... பாலங்களைத் தகர்ப்பதும் ராணுவப் பொறியாளர்களின் வேலை. ஏன் அமைக்க வேண்டும்? ஏன் தகர்க்க வேண்டும்? சொந்த ராணுவம் முன்னேற, பாலம் அமைக்கப்பட வேண்டும். எதிரி ராணுவத்தைத் தடுக்க பாலம் தகர்க்கப்பட வேண்டும். ‘பாலத்தைக் கொளுத்து’ என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத்தொடர்கூட உண்டு. ஒரு ராணுவம் பாலத்தைக் கடந்த பிறகு யாரும் பின்தொடராமல் இருக்க பாலத்தை எரிப்பது ஒரு போர்த் தந்திரம். 

எதிரிகளின் படையெடுப்பின்போது அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க எல்லைப் பகுதியிலுள்ள தனது பாலங்களையே ஒரு நாடு அழித்துக்கொள்வதும் போர்த் தந்திரம்தான்.

ஜெர்மனியைத் தாக்கிய ஹிட்லர்

பாலங்கள், போரின் வெற்றி - தோல்வியைத் தீர்மானிப்பவை. ஜெர்மனியில் ரைனி நதியின் குறுக்கே இருந்த லுடென்ட்ரோஃப் பாலம் இரண்டாம் உலகப் போரைச் சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவந்தது. எப்படி? அதிரடியாக முன்னேறிவந்த அமெரிக்கப் படையைத் தடுக்க பாலங்களை வெடிவைத்துத் தகர்த்துப் பின்வாங்கியது ஜெர்மானிய ராணுவம். பொருத்தப்பட்ட வெடிபொருட்கள் முழுமையாக வெடிக்காததால் லுடென்ட்ரோஃப் பாலம் சேதமடையவில்லை. உள்நுழைந்த அமெரிக்க ராணுவத்துக்குச் சேதமடையாத பாலம் கிடைத்தது ஒரு பெரிய ஆச்சரியம். பிரமித்துப்போன அமெரிக்கப் பத்திரிகைகள் இதைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. வரலாற்றில் முதல் முறையாக ‘வீ-2’ ஏவுகணைகளைத் தனது நாட்டின் பாலத்தின் மீதே வீசச் செய்தார் ஹிட்லர். ஏவுகணைகள் குறி தப்ப, பாலம் பிழைத்து போர் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

துரிதப் பாலங்கள்

எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அமைதிக் காலங்களிலும் போர்க் காலங்களிலும் பாலங்கள் மிக அவசியம். வீரர்களின் போக்குவரத்துக்கும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள், உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கும் பாலங்கள் தேவை.

ராணுவ முகாம்களை, அருகிலுள்ள நகரத்தோடு அல்லது தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்க, தேவைப்படும் இடங்களில் நிரந்தரப் பாலங்கள் அமைக்கப்படும். நிரந்தரப் பாலங்கள் வடிவமைக்கவும் கட்டவும் பல மாதங்கள் தேவை. போர்க் காலங்களில் தாக்குதல் நடத்தி முன்னேறும் ராணுவக் குழுக்களுக்கும் அவர்தம் வாகனங்களுக் கும், சில மணி நேரங்களில் பாலங்
கள் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் செல்கிற இடங்களின் சூழ்நிலைகளுக்கேற்பப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். பாலங்களை வடிவமைக்கத் தேவையான அவகாசமும் போர்க் காலங்களில் கிடைக்காது. இச்சூழலில் ‘துரிதப் பாலங்கள்’ (Ready To Deploy Bridges) மிகவும் இன்றியமையாதவை.

சென்னை தந்த நகரும் பாலம்

பாம்பன் ரயில் பாலம் திறந்து மூடப்படும் என்பதை நாமறிவோம். நகர்ந்து செல்லும் பாலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? வீரர்களின் பயன்பாட்டிற்கு ராணுவ விஞ்ஞானிகள் வடிவமைத்த நகரும் பாலம் சுவாரசியமானது. ‘பாலம் அமைக்கும் வாகனம்’ (Bridge Layer Tank), பாலத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, சுமந்து செல்லும். பாலம் அமைக்கப்படவேண்டிய இடத்தில், பாலத்தின் இரு பகுதிகளும் தானியங்கி முறையில் இணைக்கப்பட்டு, ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் பாலம் அமைக்கப்படும். பாலம் அமைக்கும் வாகனமும் பாலத்தில் பயணப்பட்டு அக்கரைக்குச் செல்லும். எல்லா வாகனங்களும் கடந்த பிறகு, மறுகரையிலிருந்தவாறே பாலத்தின் பகுதிகளைத் தானியங்கி முறையில் மடித்து ஏற்றிக்கொண்டு வாகனம் தொடர்ந்து செல்லும். பாலம் அமைக்கப்படும்போது கிடைமட்டத்திலேயே பாலத்தின் பகுதிகள் நகர்த்தப்படும். இதுவும் ஒரு திட்டத்தோடுதான். பாலத்தின் பகுதிகளை உயர்த்தித் தூக்கினால் எல்லைப் பகுதியை எப்போதும் கண்காணித்துவரும் எதிரிகளின் பார்வையில் பட நேரிடும். அதிலிருந்து தப்பவே, இந்தக் கிடைமட்ட நகர்த்தல்.

அர்ஜூன்-பாலம் அமைக்கும் வாகனம், 26 மீட்டர் நீளமுள்ள பாலத்தை 5 நிமிடங்களில் அமைத்துவிடும். ஏறக்குறைய 70 டன் எடையுள்ள ராணுவ டாங்க் வாகனங்களைச் சுமக்கவல்லது இந்தத் தாக்குதல் பாலம் (Assault Bridge). இந்தப் பாலத்தை புணே நகரத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ- வின் ‘ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பொறியாளர்கள்’ (Research and Development Engineers) மற்றும் விஞ்ஞானிகளோடு இணைந்து உருவாக்கியவர்கள், சென்னை, ஆவடியிலுள்ள ‘போர்வாகன ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் (Combat Vehicles Research and Development Establishment) என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வாத்ரா பாலம்

அகலமான ஆறுகளைத் தாண்ட நீண்ட பாலங்கள் தேவை. இதற்காக ‘சர்வாத்ரா’ என்ற பாலத்தை டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய 75 மீட்டர் நீளத்திற்கு இப்பாலத்தை அமைக்கலாம். ராணுவ டாங்க் வண்டிகளின் எடையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தை அமைக்க எத்தனை மாதங்கள் ஆகும்? வெறும் இரண்டு மணி நேரத்தில் ஐந்து பேரின் உழைப்பில் பாலம் தயாராகிவிடும். இப்பாலத்தை அமைக்க பெரிய கட்டுமானங்கள் தேவையில்லை. 15 மீட்டர் நீளமுள்ள அலுமினியத் துண்டுகளாகப் பாலம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், 5 ராணுவ லாரிகளில் பாலத்திற்குத் தேவையான மொத்தத் தளவாடங்களையும் எங்கும் எடுத்துச் செல்லலாம்.

பாலம் அமைப்பதற்கெனத் தனியே கனரக எடை தூக்கும் வசதிகளோ, கட்டுமானப் பொருட்களை வைக்க கட்டிடக் கிடங்குகளோ தேவையில்லை. 6 மீட்டர் ஆழம் வரையுள்ள பகுதிகளில் இந்தத் துரிதப் பாலத்தை அமைக்கலாம். இந்தப் பாலத்தின் உற்பத்தி உரிமம் பெங்களூருவிலுள்ள பொதுத் துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் (Bharat Earth Movers Ltd.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் பயன்பாட்டிற்கு டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட சர்வாத்ரா துரிதப் பாலம், இயற்கைச் சீற்றங்களினால் ஆற்றுப் பாலங்கள் அடித்துச் செல்லப்படும் சூழல்களில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்படுகிறது. ‘மிலிட்டரி பாலம்’ எனப் பரவலாக அறியப்படும் இப்பாலங்களின் பின்புலத்தில் இருப்பது நம் ராணுவ விஞ்ஞானிகளின் அறிவுத் திறன்.

வெள்ளத்தனைய மலர்நீட்டம்

நிலத்தில் நகரும் பாலத்தைப் போல, நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய பாலத்தையும் (Amphibious Bridge) நமது விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். நீர் மட்டம் உயர உயர, தாமரை இலை போல, பாலமும் மூழ்கிவிடாமல் மிதந்து கொண்டேயிருக்கும். அதுமட்டுமல்ல. நீண்ட நீர்நிலைகளைக் கடக்க, படகு போலவும் இப்பாலத்தைப் பயன்படுத்தலாம்.

மடித்த நிலையில் ஏறக்குறைய மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்(!) இப்பாலத்தை, 9 நிமிடங்களில் 28.4 மீட்டர் நீள மிதவைப் பாலமாக இரு கரைகளுக்கும் விரிக்கலாம். வாகனங்களையும் மனிதர்களையும் சுமக்கும் இப்பாலம், மிதக்கும் பாலமாக மட்டுமின்றி, படகாகவும் சுமைகளோடு, வினாடிக்கு 2.7 மீட்டர் வேகத்தில் நீரில் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது.
பாலம் என்றால் நிலையாகத்தான் இருக்கும் என்று பொதுப் புத்தியிலிருக்கும் நம்பிக்கை இதைப் படித்த பிறகு ஆட்டம் காணலாம். 
ஓரிடத்திற்கு வழி சொல்லும்

போது பாலத்தை அடையாளக் குறியீடாக இனிமேல் சொல்ல முடியுமா?

நடைப் பாலம் நீர்நிலைகளை, பள்ளங்களைக் காலாட்படையினர் கடப்பதற்கு நடைப் பாலங்களும் (Foot bridge) நமது விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மலைகளிலும் பனிப் பிரதேசங்களிலும் ராணுவ வீரர்களுக்கு இப்பாலங்கள் பேருதவியாக இருக்கின்றன.

இவ்வகைப் பாலங்கள் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகின்றன. ஏறக்குறைய மூன்று மணி நேரத்தில் 15.5 மீட்டர் நீள அலுமினியப் பாலத்தை அமைக்க முடியும். இதற்கு ஆகும் செலவு 6.5 லட்ச ரூபாய். உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 2014-ல், டி.ஆர்.டி.ஓ இப்படி ஒரு பாலத்தை அமைத்துக் கொடுத்தது.

பொதுமக்களுக்காக டி.ஆர்.டி.ஓ அமைத்த நடைப் பாலம் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர்.சிதம்பரத்தால் திறக்கப்பட்டது. ராணுவப் பயன்பாட்டிற்கான பாலங்கள், ராணுவ விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்குமான உணர்வுப் பாலங்
களாகத் தொடருவது ஒரு நாட்டின் ஆரோக்கியமான அறிவியல் அடையாளம்.

நீரின்றி அமையாது உலகு. இல்லத்தின் சவுகரியங்களையும், நகரத்து வசதிகளையும் தாண்டி, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியிலிருக்கிற ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது எப்படி? போர் நிமித்தம் காடுகளிலும் மலைகளிலும் முன்னேறும் படைக் குழுக்களுக்குச்  செல்லுமிடமெல்லாம் குடிநீர் கிடைக்குமா?

 (பேசுவோம்)

x