கண்ணான கண்ணே 32


கடந்த சில அத்தியாயங்களாகக் கண்டுவந்த முதல் பருவ கர்ப்பவதிகளுக்கான ஆலோசனைகள், அறிவுரைகள் இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது.

முதல் பருவ கர்ப்பகாலம் ஒரு பெண்ணின் மனதில் மகிழ்ச்சி, பயம், எதிர்பார்ப்பு, தயக்கம் எனப் பல்வேறு உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கும். அந்தப் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் மனக்குழப்பங்கள், எந்த உணவை எப்படி உண்ண வேண்டும், முத்தான மூன்று உணவு வகைகள் என நிறையவே பார்த்துவிட்டோம்.
இனி, பாரம்பரிய உணவுகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். நாம் எப்போதுமே வலியுறுத்துவது உணவை உள்ளூர்மயமாக்குங்கள் என்பதையே. அதுவும் நம் பாட்டியும் அம்மாவும் வழிவழியாக செய்துவந்த பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்தாலே ஆரோக்கியத்தைப் பற்றிய கவலையே தேவையில்லை என்பதையும் வலியுறுத்தி வருகிறேன்.

முதல் பருவ கர்ப்பவதிகளுக்காகவே மூன்று பாரம்பரிய உணவு வகைகளையும் அவற்றின் செய்முறையையும் பட்டியலிடுகிறேன்.
நெய் சோறு (கேரளத்து உணவு) இது உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கும் உணவு. இயற்கையாகவே இதற்கு ஆன்டாசிட் பண்பு இருக்கிறது.

எப்படிச் செய்வது?

கடாயில் வீட்டில் வெண்ணெய்யை பதமாகக் காய்ச்சித் தயாரித்த நெய்யை ஊற்றவும். நெய் காய்ந்தவுடன் அதில், வெட்டிவைத்த சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். அது பொன்னிறமாக மாறியவுடன் வேகவைத்த சாதத்தை இத்துடன் சேர்க்கவும். சற்று பதமாக நெய், வெங்காயத்துடன் சாதம் கலந்தவுடன் கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும். இது சூடாகச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
இந்த செயல்முறையைக் கேரளாவைச் சேர்ந்த ராக்கி வினய் எனக்குக் கூறினார். கனடாவில் இருந்தாலும்கூட இந்தப் பாரம்பரிய உணவை அவர் வாரத்தில் ஒருநாளாவது சமைக்காமல் இருப்பதில்லையாம்.

முருங்கைக்கீரை பொரியல்

முருங்கைக் கீரையில் எல்லா விதமான அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளன. இதனைச் சமைத்து சாப்பிட்டால் கால்சியம் இழப்புகளை ஈடு செய்ய இயல்வதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.
எப்படிச் செய்வது?

ஒரு கோப்பை நிறைய முருங்கைக்கீரையை எடுத்துக் கொள்ளவும். அத்துடன் பெரிய வெங்காயம் 1 எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, அது சூடானதும் சீரகம், காஷ்மீர் மிளகாய் 1 மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இவை நன்கு வதங்கியவுடன், அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு சுருளும்வரை வதக்கவும்.

இதைச் சூடாக சாதம் மற்றும் ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்த உணவை கர்ப்பவதிகள் சாப்பிடுவதால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் வலியில் இருந்து விடுபடலாம். மேலும், கருவிலிருக்கும் குழந்தையின் கேச வளர்ச்சிக்கும் இது உதவும். மேலும், நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும்.

மாயம் செய்யும் பஞ்சாமிர்தம்

முதல் பருவ கர்ப்பிணிகளுக்கு உகந்த மூன்றாவது பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். இது கர்ப்பவதிகளின் ஹார்மோன் அளவை துல்லியமாக வைக்க உதவும் அருமருந்து.

எப்படிச் செய்வது?

ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி பசு நெய், 7 முதல் 8 தேக்கரண்டி காய்ச்சி ஆரவைத்த பசும்பால், இவற்றுடன் ஒரே ஒரு பட்டை குங்குமப்பூ ஆகியனவற்றை சேர்த்துக் கொள்ளவும். இதை ஓரிரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்.

காலையில் எழுந்து சுறுசுறுப்பான பின்னர் இதை எடுத்து முதல் உணவாக சாப்பிடவும். இது அன்றைய நாள் முழுவதும் நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உடல் சீராக கிரஹித்துக் கொள்ள உதவும்.

குறிப்பு: இதைத் தயாரிக்கும்போது சுடும் பாலை ஊற்றிவிட வேண்டாம். தயிரும் ஒரு மூலப் பொருளாக இருப்பதால் இதில் சுடும்பாலை ஊற்றினால் கெட்டுவிடும்.

கர்ப்பவதிகளுக்கு ஏற்படும் மார்பகக் காம்பு புண்கள் பற்றி பேசியிருந்தோம். இந்த பஞ்சாமிர்த கலவையைச் சாப்பிடுவதோடு அதை சிறிய அளவில் புண் உள்ள அல்லது வறண்ட காம்பில் தேய்த்தால் எளிதில் குணமாகிவிடும்.

பீட்ரூட் ராய்தா

மிக மிக எளிதாக செய்யக்கூடிய சத்தான உணவு. கர்ப்பவதிகள் தங்கள் கணவருக்கு இந்த செய்முறையை சொல்லிக் கொடுத்து அடிக்கடி உண்டு மகிழலாம்.

எப்படிச் செய்வது?

வேகவைத்து தோலுரிக்கப்பட்டு மசிக்கப்பட்ட பீட்ரூட் 2 கப் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு கப் தயிர் (புளிக்காதது) சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை, சிறிது மல்லி இலை மற்றும் பொடியாக நறுக்கப்பட்ட 2 பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யை சூடு செய்து அதில் சீரகம், காயம் சேர்த்து தாளிதம் செய்து கலவையில் கொட்டவும். நன்கு கிளறிவிட்டு புசிக்கவும்.

சேனைக்கிழங்கு வறுவல்

இதுவும் கணவர்கள் எளிதில் சமைத்துத் தரக்கூடிய உணவே. கர்ப்பம் தரித்த சில நாட்களில் எதையும் சாப்பிடும் உணர்வு இல்லாமல் இருக்கும். ஆனால், கர்ப்பவதி நிச்சயமாக பட்டினி கிடக்கக் கூடாது. அப்படிப்பட்ட நாட்களில் சேனைக்கிழங்கு வறுவலை எளிதில் செய்து சாப்பிடலாம்.

எப்படிச் செய்வது?

சேனைக்கிழங்கின் மேல் தோலை நீக்கிவிட்டு நன்கு அலசி சுத்தம் செய்த பின்னர் பிரஷர் குக்கரில் ஒன்றிரண்டு விசில்விட்டு வேகவைக்கவும். வேகவைக்கும் முன்னர் அதை உள்ளங்கையளவு துண்டுகளாக வெட்டி வேகவைக்கவும்.வெந்தவுடன் அது ஆற சற்று அவகாசம் தரவும்.

ஆறிய சேனையில் உப்பும் தேவைக்கு ஏற்ப காரமும் சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து ஓர் இரும்புக் கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து சுடச் சுட சாப்பிடவும்.

இதேபோல் உருளைக்கிழங்கு, வாழைக்காய் ஆகியவற்றிலும் வறுவல் செய்யலாம். அப்படிச் செய்யும்போது உருளை, வாழையை வேக வைக்க அவசியமில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட 5 உணவுகளும் காலம்காலமாக நம் வீடுகளில் செய்துவந்ததே. ஆனால், காலப்போக்கில் அவற்றை சமைக்கும் முறையை நாம் மாற்றிவிட்டோம். இருந்தாலும் கர்ப்பவதிகள் இந்த உணவு வகைகளை இதே பாணியில் சமைத்து சாப்பிட்டால் நற்பலன்களைப் பெறலாம்.

இரும்புச் சத்து குறித்த சிறப்புக் குறிப்புகள்...

கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனேயே முதலில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது இரும்புச் சத்து மாத்திரையே. ஆனால், அது உண்மையில் அவசியமா என்ற கேள்வியும் உள்ளது. அதனால் இரும்புச் சத்து பற்றிய புரிதல் கர்ப்பவதிகளுக்கு அவசியம் தேவை.
கர்ப்பவதிகளுக்கும், பாலூட்டும் அன்னையர்க்கும் ஒரு நாளுக்கு சராசரியாக 20 முதல் 30 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ரத்தசோகையோ, குறைந்த ஹீமோகுளோபின் அளவோ கர்ப்பவதிகளை அதிகமாக சோர்வடையச் செய்யும். தொற்று நோய்களுக்கும் ஆளாக்கும். குழந்தை எடை குறைவாகப் பிறக்கும் சூழல் உருவாகும். ஆனால், இவையெல்லாமே ஹீமோகுளோபின் அளவு 9-க்கும் கீழ் செல்லும்போதே நேரும்.

முதல் பருவ கர்ப்பகாலத்தில் 11-க்கும் மேல் ஹீமோகுளோபின் அளவு இருந்தால் போதுமானது. இராண்டாவது பருவ கர்ப்பகாலத்தில் 10.5-க்கு குறையாமல் ஹீமோகுளோபின் அளவு இருத்தல் வேண்டும். இந்தக் காலகட்டத்தில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் ஹீமோகுளோபின் குறியீடு அடர்த்தியை வைத்து அளவிடப்படுகிறது. அதனாலேயே இரண்டாம் பருவத்தில் 10.5 கிராம் ஹீமோகுளோபின் போதுமானது எனக் கூறப்படுகிறது.

ஹீமோகுளோபின் அளவு 9 என்ற அளவில் இருக்கும்போதுதான் மாத்திரைகள் அவசியமாகின்றன. மேலும், இரும்புச் சத்து மாத்திரைகளால் மலச் சிக்கல், வயிற்றோட்டம், குமட்டல், வாந்தி போன்ற பக்க விளைவுகள் இருப்பதால் கர்ப்பமடைந்த அனைவருமே இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவரின் ஹீமோகுளோபின் அளவைக் கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். மற்றபடி அன்றாட உணவிலேயே ஹீமோகுளோபின் அளவைச் சீராக வைத்துக் கொள்ளலாம்.

 (வளர்வோம்... வளர்ப்போம்)

x