இன்னமும் ஏன் ட்ரம்பின் பூட்ஸுக்கு பாலீஷ் போடுகிறீர்கள்?- மோடியை விளாசும் தா.பாண்டியன்!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். 87 வயது முதிர்ச்சி, 6 மாத கால சிகிச்சை ஆகியவற்றையும் தாண்டி சுறுசுறுப்புடன் வலம் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்தவரைச் சந்தித்தேன். கொஞ்சம் மெலிந்திருக்கிறார். முதுமை காரணமாக கையில் புதிதாக ஊன்றுகோலும் முளைத்திருக்கிறது. ஆனால், அவரது தமிழின் வேகம் குறையவே இல்லை. சமகால அரசியல் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனிக்கிறார் என்பதை அவரது சுளீர் பதில்களே சொல்கின்றன. அவரது பேட்டி:

 எப்படியிருக்கிறது மோடியின் 100 நாள் ஆட்சி?

இது மோடியின் ஆட்சியல்ல, ஆர்எஸ்எஸ் ஆட்சி. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆணி வேரான சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை அறுத்தெறிந்துவிட்டு, ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படைத் தத்துவமான மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக்கப் பார்க்கிறார்கள். இடஒதுக்கீட்டின் அடிப்படையையே குலைக்கும் வகையில் உயர் சாதியினருக்கும் இடஒதுக்கீடு என்று மோடி சொன்னார். சொன்ன வேகத்திலேயே அது நிறைவேற்றப்படுகிறது. சமஸ்கிருதத்தை எதிர்த்துத் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்திலேயே சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள். அதன் வேந்தராக சமஸ்கிருதப் பண்டிதரை நியமித்திருக்கிறார்கள். முத்தலாக் தடைச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுகிறார்கள். பயங்கரவாதிகள் என்று யாரைச் சந்தேகப்பட்டாலும் காரணம் சொல்லாமல்கைது செய்யலாம் என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். மக்கள் பணத்தை ரிசர்வ் வங்கியிலிருந்து சட்டபூர்வமாகக் கொள்ளையடித்துவிட்டு, காரணம் சொல்லத் தேவையில்லை என்கிறார்கள். விரைவிலேயே மனுதர்மம்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் என்று மாற்றிவிடுவார்கள்.

x