என் வாழ்க்கை... என் கதைகள்!- தட்டச்சுப் பயிலகத்திலிருந்து அம்சா


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

சேலம் ஜங்ஷன் மெயின் ரோடு தாசக்காரனூர் பகுதியின் மையத்தில் இயங்கிவரும் அம்சா தட்டச்சுப் பயிலகம், மாணவிகள் மத்தியில் பிரசித்தம். காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஓயாத டைப்ரைட்டர் ஒலியில், மணிக்கொரு தடவை தட்டச்சுப் பயிற்சி எடுக்கும் மாணவிகள் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் பயிலகத்தின் மூலம் பல பெண்களுக்கு எதிர்கால தன்னம்பிக்கை தரும் மு.அம்சா ஓர் எழுத்தாளர் என்பது அங்கு வரும் பெண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

‘ராசம்மா’, ‘புதிய பாஞ்சாலி’, ‘பொன்னி’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் அம்சா, திருப்பூர் சக்தி விருது, வல்லிக்கண்ணன் விருது எனப் பல விருதுகளை வென்றவர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் ஆகியவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். ‘20-ம் நூற்றாண்டு சிறுகதைகளும் பெண் மாந்தர்களும்’, ‘அம்சாவின் சிறுகதைகளில் கிராமத்துப் பெண்கள்’ ஆகிய தலைப்புகளில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் விருத்தாசலம் கொழிஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் இவரது படைப்புகளை எம்.ஃபில் ஆய்வுகள் செய்துள்ளனர். தட்டச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தியபடி, தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பைச் செய்துவரும் அம்சாவை அவரது பயிலகத்தில் சந்தித்தேன்.

“பெண்கள் சுதந்திரமா இருக்கணும். முக்கியமா அவங்க தொழில் சிந்தனை எல்லாமே சுயமா இருக்கணும். இதுதான் என் கதைகளோட அடிநாதம். அதேதான் என் வாழ்க்கையும். முத்துநாயக்கன்பட்டி என் சொந்த கிராமம். எஸ்.எஸ்.எல்.சி படிச்சுட்டு ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்ல பயிற்சிக்குப் போன சமயத்திலேயே நானும் இப்படி ஒரு பயிலகம் வைக்கணும்னு முடிவுசெஞ்சேன். பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் வனத் துறையில ‘லீவ் வேகன்சி’ வேலை கிடைச்சு 3 வருஷம் போனேன். அந்தப் பணி நிலைக்கல. அப்புறம்தான் இந்த இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சேன். முப்பது வருஷம் ஆய்டுச்சு” என்று சொல்லும் அம்சா, காலமாற்றத்தைத் தாண்டியும் தட்டச்சுப் பயிற்சிக்கு வரவேற்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

x